திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேரைச் செப்பனிட முடிவு செய்து, பூம்புகார் ஸ்தபதி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்தலங்களில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலும் ஒன்று. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவாரப் பாடலில் இந்தக் கோயில் இடம் பெற்றுள்ளது. கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள், செங்கோட்டுவேலவர் ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கோயில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
இக்கோயிலின் தேர் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனச் சொல்லப்படுகிறது. தாமரைப்பூ வடிவத்தில் இருக்கும் இத் தேர், சுமார் 21 அடி உயரம், 21 அடி நீளம், 21 அடி அகலமும் கொண்டதாகும்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மரச் சக்கரங்களாக இருந்தத் தேரின் சக்கரங்களுக்குப் பதில், பொள்ளாச்சி மகாலிங்கம் இரும்பு சக்கரங்களையும், இரும்பு அச்சையும் செய்துகொடுத்தார். தற்போது 2 மரச் சக்கரங்கள், 4 இரும்புச் சக்கரங்களுடன் இத் தேர் உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேரின் உள்பகுதியில் சிறு விரிசல்கள் உள்ளதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் மதிப்பில் தேரைச் செப்பனிட, அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. எனினும், அந்தத் திட்ட அறிக்கையோடு தேர் செப்பனிடும் பணி நின்றுவிட்டது.
இச்சூழலில் தேரில் எவ்வகையான குறைபாடுகள் உள்ளன என்பது குறித்தும், தேரில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதா அல்லது புதிய தேர் வடிவமைப்பதா என்பது குறித்து, அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனத்தில் இருந்து ஸ்தபதி வேலாயுதம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இதற்கான செலவினங்கள் எவ்வளவு ஆகும் என்பது குறித்து அறிக்கை அனுப்ப உள்ளார்.
இதுகுறித்து ஸ்தபதி வேலாயுதம் கூறும்போது, “இந்தத் தேரில் உள்ள குறைபாடுகளை நீக்கி தேரை ஓட்டலாமா அல்லது புதிய தேர் உருவாக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். நாங்கள் பல இடங்களில் தேர்களைப் பழுதுநீக்கி ஓட்டி உள்ளோம். இதுதொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்” என்றார்.
ஆய்வின்போது அறநிலையத் துறை கண்காணிப்பாளர் இந்திரா மற்றும் பூம்புகார் நிறுவனத்தின் ஊழியர்கள் திருச்செங்கோடு இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.