முதுமை என்பது வாழ்க்கை எனும் வாக்கியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பருவம். மனித வாழ்வின் துன்பங்கள் மிகையும் காலம் அது. உடல் சார்ந்து உள்ளம் சார்ந்து வாழ்வின் நெடுங்காலத்தில் தாம் பெற்ற வலிகளையும் காயங்களையும் ஒருசேர குவித்து வைத்துக்கொண்டு எப்போது மரணம் வரும் என்று ஏங்கித்தவிக்கும் நிமிடங்கள் நிறைந்த காலத்தின் முட்கள் மிக மெதுவாக நகர்வதாகத் துன்பம் அடையும் தருணம்.
துன்பம் இல்லா முதுமை
எல்லாருடைய முதுமையும் இப்படித்தான் இருக்குமா, மகிழ்ச்சியான முதுமை ஒருவருக்கு இருக்காதா போன்ற கேள்விகள் எழலாம். இருக்கலாம் என்றுதான் சொல்லமுடியும். துன்பம் இல்லா முதுமை யாருக்கு இருக்கும்? வயது ஏற ஏற தமக்கான ஆசைகளைக் குறைத்துக்கொண்டு பற்றற்ற அன்பின் பிடிப்பில் யார் இருக்கிறார்களோ அவர்கள் துன்பம் அடையாமல் இருக்கலாம். மருமகள் வீட்டிற்கு வந்ததும் அவரிடம் தம் பொறுப்பை ஒப்படைத்துவிடும் மாமியார்கள் இருக்கிறார்களா என்ன? அப்படி இருந்தால் அவர்கள் துன்பம் இல்லாமல் இருப்பார்கள்.
இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர்களுக்கு ஆலோசனைகள் மட்டும் வழங்கும் தலைவர்கள் இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால், எந்த ஆசையையும் விடாது எந்த அதிகாரத்தையும் விடாது தனக்கே எல்லாம் வேண்டும் என்று இருப்பவர்கள் சிக்கித் தவிப்பார்கள் துன்பத்தின் சகதியில்.
பொறுப்பை ஒப்படைக்கும் தலைவர்கள்!
முதியவர்களை மிகச்சரியாக நடத்தும் சமூகம் இன்றைய தேவையாக இருக்கிறது. முதியோர்களை மதியாத இளைய சமூகமும் தனக்கான வாழ்வியலை சரியாக அமைத்துக்கொள்ள முடியாதுதான்.
எல்லாவற்றையும் வழங்கிவிடும் எண்ணமும் எல்லாவற்றையும் துறந்துவிடும் நற்செயலும்தான் முதுமையின் பெருமைமிகு அடையாளங்களாக இருக்கின்றன.
கவனி
இந்த அழகிய உடல்
தீராத வலிகளின் குவியல்
நோய்க்கூடு
அதில் என்ன இருக்கிறது
தொலைந்துவிட (தம்மபதம் 147)
இந்த உடலை மிகவும் வலிமையானதாகவும் ரம்மியமானதாகவும் நினைக்கும் இளைஞர்களே முதியோர்களிடம் கேளுங்கள் இது எவ்வளவு துயரமானது என்று தெரியும் என்கிறது தம்மபதம்.
இலையுதிர்காலத்தில்
கொடிகள் உதிர்ப்பதைப் போல
இந்த எலும்புகள்
எப்படி பார்க்க முடியும் அவற்றை (தம்மபதம் 149)
நீங்கள் வசிக்கும் நகரம் எது?
‘கோடையில் திரிந்த குறிஞ்சியும் முல்லையும்’ என்று பாலை நிலத்திற்கு விளக்கம் சொல்லும் பொருள் இலக்கணம். முதுமைக்கு இதைப் பொருத்திப் பார்க்கலாம். மழை பொழிந்து பச்சைக்கட்டி வாழும் காடும் மலைகளும் கோடைக்காலத்தில் காய்ந்து வெம்மையேறி துன்பக்காற்று அனலாய் வீசும் இடங்களாக மாறிவிடுவதுபோலத்தான் இளமையின் பசுமையில் எல்லாமுமாக இருக்கும் இவ்வுடல் முதுமையில் துன்பம் ஒன்றை மட்டும் சுமந்துநிற்கும் தூணாக மாறிவிடுகிறது.
தம்மபதம் இந்த உடலை ஒரு நகரத்துடன் ஒப்புமைப்படுத்துகிறது. அந்த நகரம் ரத்தம் தசைகளால் பூசப்பட்டு எலும்புகளால் எழுப்பப்பட்ட ஒன்று. அங்கு யார் குடியிருக்கிறார்கள் தெரியுமா? அழிவும் மரணமும் பொறாமையும். இவை குடியிருக்கும் அல்லது குடியிருந்த நகரம் எப்படி இருக்கும் என்பதை யோசித்தாலே நம்மை கவ்வுகின்ற உணர்வெழுச்சிக்கு அளவே இருக்க முடியாது.
மணிகளால் அழகூட்டப்பட்ட
மன்னனின் தேர்கள் தேய்ந்து
அழிவதுபோல
உடலும் முதுமையடைகிறது
ஆனால், தம்மம் முதுமையடைவதில்லை
துறவிகளின் உடையாடல் இது (தம்மபதம் 151)
ஆகவே, தம்மத்தைக் கற்று இந்த வாழ்வினைத் துன்பமில்லாததாக்கிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மனிதரின் கடமை. தம்மத்தைக் குறைவாகக் கற்றவர்கள் தசை சூழ உடல்வளர்ந்தவர்கள் எருதினைப் போல. ஆனால், அவர்கள் அறிவு வளர்ச்சியைப் பெறுவதில்லை.
ஒளி தேட மாட்டாயா?
அந்த அறிவைத் தேடி அலைவதும் அதைப் பெறுவதும் மிக இன்றியமையாததாக இருக்கிறது. அந்த அறிவினைத் தேடித்தான் அலைந்தார் சித்தார்த்தர். அந்த அறிவை அடைந்ததும் அவர் துன்பமிலாதவராக புத்தராக ததாகதராக மாறினார். அவ்வறிவை பல துயர் மிகு தேடல்களுக்குப் பிறகு பெற்று அதனை நமக்களித்தார். நாம் தாம் அதனை புறந்தள்ளிக் கொண்டே இருக்கிறோம்.
எத்தனை பிறப்பெடுத்தாலும் மிகுந்த துயரமிக்க இவ்வீட்டினைக் கட்டியவர் யார் என்பதை கண்டறிய முடியாது. பற்று என்னும் வீடும் இப்படித்தான் யார் கட்டுவது அதை? அது நம் கண்ணெதிரே முதுமை வரவர உதிர்ந்துகொண்டே இருக்கிறதே! எதையெல்லாம் நமக்கு பிடித்தது என நாம் சொன்னோமோ அவை எல்லாம் இப்போது இந்த உடலுக்கு எதிரானதாக இருக்கிறதே?
அப்படியானால் தூய வாழ்வு வாழாதார், இளமையில் உழைத்து செல்வம் தேடாதார் பிற்காலத்தில் முதுமையில் மீனற்றக் குளத்தில் வாட்டமுற்று வதங்கிக் காத்திருக்கும் கொக்கு போன்றவர் ஆவர். அவர்கள் கட்டவிழ்ந்த வில்லினைபோல பெருமூச்சு விடுவார்கள் காலம் கடந்த காலத்தில்
காலத்தே உணர்ந்து உடலை உயிரைக் காக்கும் தூயசெயல்கள் ஆற்றி, தம்மத்தை முழுமையாய்க் கற்று தேர்ந்த ஒருவாழ்க்கையே முதுமையிலும் துன்பம் வந்து அண்டாத வாழ்க்கையாக இருக்கும்.
எது சிரிப்பு
எது மகிழ்ச்சி
எப்போதும் உலகம் எரிந்துகொண்டிருக்கும்போது
இந்தக் காரிருள் தீர
ஒளி தேட மாட்டாயா? (தம்மபதம் 146)
(தம்மம் தொடரும்)
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.comவன்மம் இல்லா மனம்!