இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கும் நாகூர் தர்காவில், கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகூர் தர்காவுக்கு வெளியூர், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான இந்து மக்களும் இந்த தர்காவுக்கு வந்து வழிபடுவது வழக்கம். சிறப்பு வாய்ந்த இந்த நாகூர் தர்காவில், ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான 465-வது கந்தூரி விழா நேற்று இரவு ( ஜன.4 ) 10 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களில் ஏற்றப்படும் கொடிகள் அலங்கரிக்கப்பட்ட கப்பல் பல்லாக்கு, செட்டி பல்லாக்கு, சாம்பிராணி பல்லாக்கு உள்ளிட்ட 5 பல்லாக்குகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு துவா ஓதிய பின்னர், 5 மினாரக்களிலும் ஒரேநேரத்தில் கொடியேற்றப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘சந்தனக் கூடு’ ஊர்வலம், ஜன.13-ம் தேதி இரவு நடைபெறுகிறது. 14-ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சன்னதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், 15-ம் தேதி கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 17-ம் தேதி கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
நாகூர் கந்தூரி கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை எஸ்பி ஜவஹர் தலைமையில் 3 ஏடிஎஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 33 இன்ஸ்பெக்டர்கள் என ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.