நேற்று(ஜன.2) அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சார்பில் ஒரு லட்சத்து 8 வடை கொண்ட வடைமாலை சாத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடைகள் கொண்ட வடைமாலை அலங்காரம் நேற்று(ஜன.2) செய்யப்பட்டது. இந்த அலங்காரம் 7-ம் ஆண்டாக நேற்றும் நடைபெற்றது.
முதன் முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டது. அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுபட, இந்த அலங்காரத்தை அவரது வழக்கறிஞர்கள் செய்தனர். அது முதல் தொடர்ந்து அனுமன் ஜெயந்தியன்று, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் நடைபெற்று வருகிறது.
7-ம் ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற இந்த அலங்காரம் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சார்பில் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், நாமக்கல் திமுக எம்எல்ஏ பெ.ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், கோழிப்பண்ணை அதிபர் சுப்பிரமணி உள்ளிட்ட சில கட்டளைதார்கள் சார்பில் அலங்காரம் நடைபெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டுதலா?
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்ற பேச்சு உரக்கப் பேசப்பட்டு வரும் நிலையில், இது நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் சார்பில் வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என திமுகவினர் மத்தியில் பலமான பேச்சு அடிபடுகிறது.