தமிழக அரசு ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல: அமைச்சர் சேகர்பாபு


அமைச்சர் சேகர்பாபு

தமிழக அரசு ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல; ஆன்மிகவாதிகளையும் அரவணைத்துச் செல்லும் அரசு என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், இன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு லட்சத்து எட்டு வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தனது மனைவியுடன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், அறநிலையத்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ள கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

கரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், புத்தாண்டின் போது அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அரசு ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மிகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு என்பதை இதன் மூலம் நிரூபித்துள்ளோம். இது ஆன்மிக பூமி என்றும் திராவிட நாடு என்பதையும் கருத்தில் கொண்டு முதல்வர் திறம்பட செயல்பட்டு வருகிறார்” என்றார்.

தொடர்ந்து, கோயில்களின் தங்கம் பிரிக்கும் பணிகள் குறித்து அமைச்சர் பேசுகையில், “திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் நீதிபதிகள் முன்னிலையில் தங்கத்தை பிரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. கோர்ட் அனுமதிபெற்று, கோயில் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்துச்சென்று அந்த தங்கம் உருக்கப்பட்டு, டெபாசிட்டில் வைக்கப்படும். அந்த நிதி, சம்பந்தப்பட்ட கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் போன்ற பரம்பரை அறங்காவலர்கள் உள்ள கோயில்களில் உள்ள தங்கத்தை உருக்குவதற்கு அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த பணியும் மேற்கொள்ளப்படும்” என்றார்.

தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் நடைபெற்றுவரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் பேசிய அமைச்சர், “திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு ரோப்கார் வசதி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 1,640 கோடி மதிப்பிலான திருக்கோயில் நிலங்கள் 437 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்பில் வைத்துள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து நிலத்தை திருக்கோயில் வசம் ஒப்படைக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள நைனாமலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணி மீண்டும் துவக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் விரைவில் முடிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு உதவிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர்தான் கோர்ட்டுக்கு சென்று தடை பெறுகின்றனர்” என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார். இந்த வருகையின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

x