பக்தனை மகிழ்விக்க பகவான் என்ன செய்வார்?


திருமால்

விஷ்ணுவின் 1,000 நாமாக்களில் ‘அமேயாத்மா’ என்பது 103-வது நாமம் ஆகும். எல்லையில்லாத கருணையைத் தன் அடியார்கள் மீது காட்டுவதால், திருமால் ‘அமேயாத்மா’ என்று போற்றப்படுகிறார்.

விஷ்ணு புராணத்தில் பராசர மகரிஷி, பிரகலாதன் – திருமால் – இரணியன் உறவை சிறப்பாக வர்ணித்துள்ளார்.

தானே கடவுளாக வழிபடப்பட வேண்டும் என்பதில் இரணியன் உறுதியாக இருந்து, தன் மகன் பிரகலாதனை பலவித இன்னல்களுக்கு ஆளாக்கினான். சிறந்த விஷ்ணு பக்தனாக பிரகலாதன் இருந்ததால், தன் தந்தையை கடவுளாக நினைக்க அவனால் இயலவில்லை. தந்தையிடம் இருந்து மனதளவில் வெகுதூரம் விலகிச் சென்று விட்டான்.

ஒருநாள் பிரகலாதனை ஒரு பாறையில் கட்டிக் கடலில் தள்ளிவிட்டான் இரணியன். பாறையோடு பிரகலாதனை தன் கைகளில் ஏந்திக் காப்பாற்றினார் திருமால்.

பிரகலாதனுக்கு வேண்டிய வரம் தருவதாகக் கூறினார் திருமால். தனக்கு ஏதும் வேண்டாம் என்றும், தன் தந்தை திருந்தினால் போதும் என்றும் கூறினான் பிரகலாதன்.

இரணியன் திருந்துவது என்பது இயலாத காரியம். மேலும் பிரகலாதனுக்குத் தந்தை பாசம் கிடைக்காமல் போய்விடுமோ என்று திருமால் நினைத்தார். அதனால் தானே இரணியனாக அவதரித்து, பிரகலாதனுக்கு தந்தைப் பாசத்தை அளிக்க எண்ணினார்.

அதன்படி திருமால் இரணியனாக அவதாரம் எடுத்தார். ஒரு தந்தையாக இருந்து பிரகலாதனுக்கு வேண்டிய அன்பைப் பொழிந்தார். அவனுடன் சேர்ந்து திருமாலுக்கு பூஜை, நாமசங்கீர்த்தனம் செய்து பக்தனாக வாழ்ந்து வந்தார். ஒருபோதும் தன்னை இறைவனாக காட்டிக் கொள்ளவில்லை.

மற்றொரு புறம் இரணியனின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. இரணியனை அழிப்பதற்காக தக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார் திருமால்.

தந்தையாக ஒருபுறம் பிரகலாதனிடம் பாசம் காட்டிய இரணியன் (திருமால்), மற்றொரு சமயம், “உன் நாராயணன் எங்கிருக்கிறான்? இதோ இந்தத் தூணில் இருக்கிறானா?” என்று கேட்டபோது, பிரகலாதனுக்கு தந்தையின் நிலைமை புரிந்தது.

தந்தையாக தன்னிடம் பாசம் காட்டிய ஒருவரால், எப்படி, திருமாலுக்கு எதிராகச் செயல்பட முடியும் என்று வியந்தான்.

நிறைவாக திருமாலால் இரணியன் அழிக்கப்பட்டான்.

இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்போது, பக்தனுக்காக, பக்தனை மகிழ்விக்கும் பொருட்டு, நரசிம்மராக மட்டுமல்லாது இரணியனாகக் கூட திருமால் அவதாரம் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

எல்லையில்லாத கருணையை தன் அடியார்கள் மீது காட்டுவதால் ‘அமேயாத்மா’ என்று திருமால் போற்றப்படுகிறார்.

‘அமேயாத்மநே நமஹ’ என்று திருமால் புகழ் பாடி, அவர் கருணையைப் பெறுவோம்.

ஓம் நமோ நாராயணாய...

x