எண்ணத்திலும் செயலிலும் ஒன்றுபடுபவோரின் இல்லத்தில் மகாலட்சுமி வாசம் செய்வார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமாயணத்தில் ஒரு சம்பவம் உண்டு.
சீதாப்பிராட்டியும் ராமபிரானும் ஒருசமயம் கோதாவரி நதிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஓர் அன்னப்பறவை அந்த வழியாக நடந்து சென்றது. அதைப் பார்த்ததும் திடீரென்று ராமபிரான் சிரித்தார்.
சீதாப்பிராட்டிக்கு ஏதும் புரியவில்லை. எதற்காக ராமபிரான் சிரித்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஒரு யானையைப் பார்த்து சீதாப்பிராட்டி சிரித்தார். இப்போது ராமபிரானுக்கு ஏதும் புரியவில்லை. சீதாபிராட்டி சிரித்தது குறித்து காரணம் கேட்டார்.
“முதலில் சிரித்த தாங்கள் காரணத்தைக் கூறாதபோது, நான் ஏன் என் சிரிப்புக்கான காரணத்தைக் கூறவேண்டும்” என்று சீதாப்பிராட்டி கேட்டார்.
ஆனால், “பெண்களுக்கே முதலிடம். அதனால் நீதான் முதலில் நீ சிரித்ததற்கான காரணத்தைக் கூற வேண்டும்” என்று ராமபிரான் கூறினார்.
சீதாப்பிராட்டி உடனே, “அங்கு ஒரு யானை வந்தது. அதன் பின்னர் யானைக் கூட்டம் வந்தது. அவை எல்லாம் உங்கள் கம்பீரமான நடையைப் பார்த்து வெட்கம் கொண்டன. அதை நினைத்து சிரித்தேன்” என்றார்.
உடனே ராமபிரான், “நான் ஏன் சிரித்தேன் தெரியுமா? அங்கு வந்த அன்னப்பறவை உன் நடையைப் பார்த்து வெட்கம் கொண்டது. அதை நினைத்துச் சிரித்தேன்” என்றார்.
அண்ணலும் சிரித்தார், அவளும் சிரித்தாள்.
இருவருக்குமே மற்றவர் சிரித்ததற்கான காரணம் தெரியாது. இருந்தாலும் நடையை மையமாக வைத்துச் சிரித்துள்ளனர். இப்படி கருத்து ஒருமித்த தம்பதி வாழ்க்கையில் என்றுமே பகவான் அருள்புரிவார். அந்த இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வார்.
ஆகையால் இனி அனைவரது வீட்டிலும் சிரிப்பொலி மட்டுமே கேட்கட்டும்.
மகாலட்சுமி வாசம் புரியட்டும்.