திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆனி ஊஞ்சல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்


மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஆனி ஊஞ்சல் உற்சவம் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவாச்சி மண்டபத்தில் சுவாமி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 12-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதன் பின்பு சுவாமி புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து திருவாச்சி மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சுவாமி உற்சவர் சன்னதிக்கு சென்றடைந்தார். வரும் 21-ல் உச்சிகால பூஜையின்போது முக்கனிகளை வைத்து பூஜை நடைபெறும். பின்பு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அன்று இரவு 7 மணிக்கு ரத வீதிகளில் சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

அன்று பவுர்ணமி கிரிவலமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி நா.சுரேஷ், கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா மற்றும் அறங்காவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.