கோயில்களில் புத்தாண்டு நள்ளிரவு வழிபாட்டுக்கு தடையில்லை: அமைச்சர் அறிவிப்பு


புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிச.31 நள்ளிரவு வரை கோலாகலமான கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். கூடவே, பக்தர்கள் நள்ளிரவில் கோயில்களுக்கு செல்வதும் வழக்கம். பெருந்தொற்று பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளும், சில பகுதிகளில் தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் கோயில் சாமி தரிசனம் ஆட்படுமா என்ற ஐயம் மக்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், ’புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சாமி தரிசனத்துக்கு தடையில்லை’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். மேலும், ‘கரோனா விதிமுறைகளை பின்பற்றி தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், தடுப்பூசி போட்டிருத்தல் போன்றவற்றை பின்பற்றுமாறும்’ பக்தர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே கேரளாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு மட்டும் அவற்றிலிருந்து விலக்கு அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அதிகரிக்கும் கரோனா பரவலை அடுத்து, இன்று(டிச.30) தொடங்கி ஜன.2 இரவு வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக கரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எழுந்த அச்சத்தை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்வேறு திசைகளில் இருந்தும் சபரிமலைக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் இந்த இரவு ஊரடங்கால் இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்ற கோரல்கள் எழுந்தன. இதையடுத்து இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள், ஐயப்ப பக்தர்களுக்கு பொருந்தாது என கேரள அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

x