பரமபத விளையாட்டில் பாம்புகளும் ஏணிகளும் நிறைய இருக்கும். ஏற்றங்களைப் பார்த்தால் நமக்கு சந்தோஷமாக இருக்கும். இந்த இறக்கங்களை நாம் நினைத்துக்கூடப் பார்க்க விரும்ப மாட்டோம். இந்த ஆதிசேஷன் / பாம்பு / புஜகனைப் பற்றி பார்ப்போம்.
பாற்கடலில் பெருமாள் புஜகன் மீது சயனித்திருக்கிறார். மது, கைடபர் என்ற 2 அரக்கர்கள், திருமாலை வீழ்த்துவதற்காக தயாராக இருந்தார்கள். இவர்களின் வருகையை திருமால் கவனிக்கவில்லை. ஆனால் ஆதிசேஷன் கவனித்துவிட்டார். அரக்கர்களைக் கண்ட பூதேவி தாயார், திருமாலின் திருவடிக்கு அடியிலும், ஸ்ரீதேவி தாயார், திருமாலின் மார்பிலும் ஒளிந்து கொண்டனர்.
உறங்கிக் கொண்டிருக்கும் திருமாலை எழுப்ப வேண்டாம் என்று நினைத்து, விஷமூச்சால், 2 அரக்கர்களையும் விரட்டினார் ஆதிசேஷன். இரு அரக்கர்களும் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
திருமாலின் (தலைவர்) உத்தரவுக்கு காத்திராமல், தானாகவே (தொண்டர்) ஒரு முடிவு எடுத்துவிட்டதாக மனதுக்குள் வருந்தினார் ஆதிசேஷன். இருப்பினும் திருமாலிடம் இதுகுறித்து சொல்லக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
திருமால் கண் விழித்தார். ஆதிசேஷனின் முகம் வாட்டமாக இருப்பதை உணர்ந்தார். “என்ன ஆதிசேஷா.. உன் முகம் கவலையுடன் காணப்படுகிறதே?” என்று ஆதிசேஷனிடம் வினவினார் திருமால்.
நடந்த விஷயத்தை திருமாலிடம் கூறினார் ஆதிசேஷன். மேலும், “உங்கள் தொண்டனாக இருந்துகொண்டு, உங்கள் அனுமதி பெறாமல் அவர்களை விரட்டியது என் தவறுதான். அதற்குத்தான் வருந்துகிறேன். நீங்கள் அவர்களுக்கு விதிக்கும் தண்டனையை நான் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் நானாகவே அவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டேன்” என்றார்.
புன்முறுவல் பூத்த திருமால், “நீ எந்தத் தவறும் செய்யவில்லை. தலைவருக்கு மேன்மை சேர்ப்பது எப்படி ஒரு தொண்டரின் கடமையோ, அதேபோல் தலைவருக்கு ஓர் ஆபத்து வந்தால், அதில் இருந்து காப்பதும் ஒரு தொண்டரின் கடமைதான். நீ செய்த செயல் நல்லதுதான்” என்றார்.
வடமொழியில் ‘சேஷன்’ என்றால் ‘தலைவருக்கு மேன்மை சேர்ப்பதற்காகவே வாழும் தொண்டர்’ என்று பொருள். அதனால் தலைவருக்கு தலையாய தொண்டராக இருப்பதால் இவர் ஆதிசேஷன் ஆகிறார். மேலும் ‘புஜக’ என்றும் அழைக்கப்படுவார். புஜகனுக்கு உத்தமன் / தலைவர் என்பதால் திருமால் ‘புஜகோத்தமன்’ ஆகிறார்.
ஆதிசேஷனின் செயல் மூலம் நாம் சேஷ-சேஷி பந்தத்தை உணர்கிறோம். புஜகோத்தமன் புகழ்பாடி அவர் அருள் பெறுவோம்.
(திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் (திருமாலின் 97-வது திவ்யதேசம்) தலவரலாறு, புஜகோத்தமன், ஆதிசேஷனுக்கு அருள்பாலித்த சம்பவத்தை உரைக்கிறது)
ஓம் நமோ நாராயணாய…