தடைகளைத் தாண்டிய தேர்: சாதித்த சிதம்பரம் சிவபக்தர்கள்


தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் மற்றும் தரிசனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று(டிச.18) இரவு கோயில் முன்பாக சாலையில் நடைபெற்ற பக்தர்களின் போராட்டத்தால் உடனடி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து இன்று காலை உற்சாகத்துடன் தேரோட்டம் தொடங்கியது. நாளைய தரிசனத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், இரண்டிலும் பக்தர்கள் கலந்துகொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேர்கள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ்வாய்ந்தது. பத்து நாட்களுக்கு நடக்கும் இத்திருவிழாவில் தேரோட்டமும், தரிசனமும் சிவபக்தர்களுக்கு மிக முக்கியமானவைகளாகும். அந்த இரண்டு நாட்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள், நாடுகளிலிருந்தும் பக்தர்கள் சிதம்பரம் வந்து வழிபடுவார்கள். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் 19-ம் தேதியும், தரிசன விழா 20-ம் தேதியும் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தை டிச 17–ம் தேதி சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி நடத்தினார்.

அக்கூட்டத்தில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார் ஆனந்த், ஆணையாளர் அஜிதாபர்வீன் மற்றும் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கரோனா கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி தேரோட்டம், தரிசனம் இரண்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. 19ம் தேதி தேர் திருவிழாவின்போது நடராஜப்பெருமான் சிவகாமசுந்தரி அம்மன் தேரில் வீதியுலா வருவதற்கு பதிலாக அன்றையதினம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜபெருமானும் சிவகாமசுந்தரி அம்மனும் வைக்கப்படுவார்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதுபோல 20-ம் தேதி தரிசனம் நடைபெறும் நேரத்தில் பக்தர்கள் எவருக்கும் அனுமதி கிடையாது, தரிசனம் முடிந்த பிறகு மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடராஜர் சன்னதியில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோட்டாட்சியர் அறிவித்திருந்தார்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

இத்தகவல் தெரிந்ததும் நேற்று முழுவதும் பக்தர்கள் பெரும் கொந்தளிப்புடனே இருந்தனர். ஆனாலும் இரண்டு பெரிய தேர்கள் உட்பட ஐந்து தேர்களும் அலங்காரம் செய்விக்கப்பட்டு தயாராக இருந்தன. நேற்று இரவு ஏழுமணி அளவில் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் தலைமையில் கிழக்கு கோபுர வாசலில் திரண்ட பக்தர்கள், தேருக்கு எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். இதற்கு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்களும் ஆதரவளித்தனர். இதனால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. பக்தர்களின் போராட்டம் குறித்து தகவல் தெரிந்ததும் கோட்டாட்சியர் ரவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் உடனடியாக அங்கு வந்து பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலைமறியல்

தேரோட்டம் மற்றும் தரிசனம் ஆகியவற்றை வழக்கம்போல் நடத்துவதற்கும், அவற்றில் பக்தர்கள் கலந்துகொள்வதற்கும் அனுமதிக்குமாறு பக்தர்கள் விடுத்த வேண்டுகோள் உடனடியாக ஏற்கப்பட்டு, இரண்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து, குறைந்த அளவிலான பக்தர்களோடு தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து சாலைமறியலை கைவிட்டு சிவகோஷத்துடன் பக்தர்கள் கலைந்துசென்றனர்.

தடைநீங்கி அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலையில் பக்தர்களின் உணர்ச்சிப்பெருக்கு மத்தியில், நடராஜரும், சிவகாமி அம்மனும் தேருக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களோடு தேரோட்டம் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்றது.

x