தன்னை வென்றவரே மாவீரர்


இன்னும் செழுமைப்பட வேண்டியிருக்கிறது மானுடம். அதன் தேவையும் இன்னும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. புத்தர் மாற்ற நினைத்த காலந்தொட்டு இன்றுவரை அது நீடிக்கிறது.

எண் மார்க்கத்தில் புத்தர் நற்பேச்சு, நற்செயல், நன்முயற்சி, நல்வாழ்க்கை, ஆகியன கூறப்பட்டுள்ளன. இவை ஒரு மனிதரிடம் இருந்தால் அவர் ஆயிரத்தில் ஒருவராக மாறிவிடுவார். ஆயிரத்தில் ஒருவர் அப்படி மாறுவது பௌத்தத்தின் நோக்கம் அல்ல. ஆனால், அனைத்து மக்களும் அப்படி மாறவேண்டும் என்பதுதான்.

உலகமே அன்பால் செய்யப்பட்டால் எப்படி இருக்கும்? எங்கும் மகிழ்ச்சியே பூத்துக் குலுங்கும். அதுதான் பௌத்தத்தின் அடிப்படை நோக்கம். ஒரு மதத்தின் இலக்கு அதன் கொள்கை கிடையாது மாறாக வாழ்வியலைக் கட்டமைப்பது. அதனால்தான் எண் வழியில் மனிதர்களைச் சிறந்தவர்களாக மாற்றும் நான்கு வழிகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

தம்மபதம் இப்படிக் கூறுகிறது,

பயனற்ற வார்த்தைகளால்

கோக்கப்பட்ட ஆயிரம் கவிதைகளைவிட

பயனுடைய

ஒரு கவிவரி

அமைதியை நல்கும் (தம்மபதம் 101)

பயன் பேச்சு முக்கியம்!

வார்த்தைகள் மிகவும் வலிமையானவை. சொற்களின் தாக்குதல் மிகவும் மோசமானது. ஒருமுறை கொட்டிவிட்டால் அள்ள முடியாதவை சொற்கள். எனவே சொற்களின் பயன்பாட்டில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நா தவறி விழுகின்ற ஒரு சிறுசொல் ஏற்படுத்தும் விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும். ஆனால், நற்பேச்சு எப்போதும் நன்மையைத்தான் நல்கும். நற்பேச்சு மட்டுமல்ல பயன் பேச்சும் முக்கியம். பயனற்று ஆயிரம் வார்த்தைகள் பேசுவதால் என்ன பயன்? ஆனால், தம்மத்தின் ஒரு வார்த்தை மனத்தை அமைதியாக்கும்.

அத்தகைய இன்சொல் நிறைந்தவராக மானுடர் இருந்துவிட்டால் வன்சொல் ஏது? வன்முறை ஏது? போர் ஏது? போரினால் நிர்மாணிக்க முடியாததை அன்பினால் அசோகன் என்னும் அறவோன் நிர்மாணிக்கவில்லையா? உயிர்கள் செத்து மடியும் செருக்களத்தில் லட்சம் வீரர்களை வென்றவரைவிடத் தன்னை வென்றவரே மாவீரர் என்னும் பௌத்தத் தத்துவம் அத்தகைய நற்செயல் செய்பவரை அனைவரும் போற்றுவர் என்றும் நமக்குக் கூறுகிறது.

அறவோரை வணங்குதல்

அறவோரை வணங்குதல் என்னும் ஒரு செயல் பல நேர்த்திக்கடன்களுக்கு ஈடானது. அறவோர் என்றால் சான்றோர், கற்றோர், நல்லோர் எனவும் கொள்ளலாம். ஒருமுறை புத்தரை சந்தித்த ஜானுசோனி என்பவருக்கு புத்தர் சொன்னார்: ”உணவு, பழங்கள், பழரசங்கள், உடை போன்றவற்றை தானமாகக் கொடுப்பதால் என்ன நன்மை இருக்கிறது ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு? அவர்கள் துன்பத்தைத்தான் அடைவார்கள். ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் செய்வதைவிட ஒரு ஒழுக்கசீலரை வணங்குதல் மிகப்பெரியது”

பெரியோருக்கு

தவறாமல்

மாறாமல்

மரியாதைத் தருபவௌக்கு

நான்கு அமுதங்கள்

அதிகரிக்கும் வாழ்நாள்

அழியாத அழகு

நிறைவான மகிழ்ச்சி

குறையாத வலிமை (தம்மபதம் 109)

மேலும் இப்படி சீலங்களைப் பின்பற்றும் ஒருவர் மிக எளிமையாக மனத்தை ஒருமுகப்படுத்த முடியும். அதனால் அவர் ஞானத்தை அடைய முடியும். இந்த ஒழுக்கம் என்பது ஒருவருடைய அனைத்து வெற்றிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக இருக்கும். இந்த நன்முயற்சி தொடர்ந்து செய்யப்பட வேண்டும். அதனால் வற்றாத செல்வத்தை அடையலாம். உழைப்பின் வாரா உறுதியும் உளவோ என்பது இதுதான்.

ஒரு நாள் வாழ்ந்தால் போதும்!

இது ஏதோ மாயத்தாலோ மந்திரத்தாலோ கிடைப்பதல்ல. ஆனால், ஒருவரின் நன்முயற்சியால் இது கிட்டும். வெறுமனே எந்தச் செயலுமற்று நூறாண்டுகள் வாழ்வதைவிட தீவிர முயற்சியுடன் ஒருநாள் வாழ்ந்தால் போதும்.

இந்த நன்முயற்சியால் நல்வாழ்க்கை நமக்கு வாய்க்கும். அந்த நல்வாழ்க்கையில் அறவோர்களுக்கு நாம் ஆற்றிடும் பணிகள் உலகத்தில் உயர்ந்த புகழைப் பெறுவதற்காக நாம் ஓராண்டில் ஆற்றும் தர்மங்களைவிட ஆகச்சிறந்தவையாக இருக்கும்.

தீய சிந்தனைகள், தீச்செயல்கள் கட்டுப்பாடற்ற வாழ்வு என்பது எப்போதும் பௌத்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டதில்லை நல்ல வினைகளோடும் தியானத்தோடும் வாழும் ஒருநாள் வாழ்க்கையையே போதும் என்று அது வலியுறுத்துகிறது.

இவையெல்லாம் மனிதர்கள் வலிந்து செய்துகொண்டிருக்கத் தேவையில்லை. இயல்பாகவே தங்கள் வாழ்வை இவ்வழியில் செப்பனிட்டுக்கொள்வார்கள் என்றால் அவர்கள் மிக எளிமையாக மேனிலையை அடையலாம்.

மரணமற்ற நிலையை

உணராமல் நூற்றாண்டு வாழும் வாழ்க்கை

அதை உணர்ந்து வாழும்

ஒரு நாளுக்கு நிகர். (தம்மபதம் 114 )

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
கடவுளின் இடத்தில் ஒழுக்கம்!

x