அருள்தரும் சக்தி பீடங்கள் – 2


மீனாட்சி - சுந்தரேசர்

சக்தி பீடங்கள் வரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் திரு ஆலவாய் என்று அழைக்கப்படும் மதுரை, முக்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பரம், காசி, திருக்காளத்தி, திருவண்ணாமலை வரிசையில் முக்கியமான சிவத்தலமாக இத்தலம் கருதப்படுகிறது. மறுமையில் (அடுத்த பிறவிகளில்) வீடுபேறு அளிக்கும் தலமாக, கங்கைக்கரையில் உள்ள காசி கருதப்படும். வைகைக் கரையில் உள்ள மதுரை, இப்பிறவியிலேயே வீடுபேறு அளிக்கக் கூடியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

மந்திரிணி பீடம், ராஜமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கப்படும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், இந்திரனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. ராமபிரான், லட்சுமணர், வருணர், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் போன்றோரால் இத்தலம் வழிபடப்பட்டுள்ளது. இத்தலத்தில் தரப்படும் தாழம்பூ குங்குமம் மிகவும் சக்திவாய்ந்த பிரசாதமாகக் கருதப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயில்

தலவரலாறு

மலயத்வஜ பாண்டியன் - காஞ்சனமாலா தம்பதிக்கு வெகுகாலமாக குழந்தைப் பேறு இல்லாததால், அவ்வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். வேள்விக் குண்டத்தில் இருந்து பார்வதிதேவி ஒரு குழந்தையாகத் தோன்றினார். ஆனால், அக்குழந்தைக்கு மூன்று தனங்கள் இருப்பதைக் கண்டு அரசர் வருந்தினார். தகுந்த கணவரை (சிவபெருமானை) காணும்போது, ஒரு தனம் மறைந்துவிடும் என்ற அசரீரி வாக்கால், அரசர் தம்பதியின் கவலை நீங்கியது.

குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயர் சூட்டப்பட்டது. சிறுவயது முதலே அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கினார் தடாதகை. மலயத்வஜ பாண்டியனின் மறைவுக்குப் பிறகு, தடாதகை ஆட்சி புரிந்தார். கன்னிப்பெண் ஆண்டதால் மதுரை, ‘கன்னிநாடு’ என்றும் அழைக்கப்பட்டது.

நால்வகைப் படையுடன் எட்டுத்திக்கும் சென்று வெற்றிகளைக் குவித்தார் தடாதகை. எந்நேரமும் சிவபெருமானை வழிபட்டதால், அவரைக் காணவேண்டும் என்று விருப்பம் கொண்டார் தடாதகை. மணப்பருவத்தை அடைந்ததும், கயிலை மலைக்குச் சென்றார். ஈசனைக் கண்டதும் ஒரு தனம் மறைந்தது. அப்போதே தடாதகைக்குப் புரிந்தது, தான் சந்தித்தது தன் மணாளனைத்தான் என்று.

சர்வேஸ்வரனுக்கும் தடாதகைக்கும் திருமணம் ஏற்பாடாயிற்று, பங்குனி உத்திர தினத்தில் பிரம்மதேவர் உடனிருந்து திருமணம் நடைபெற்றது. திருமால், தேவர்கள், முனிவர்கள் வந்திருந்து தெய்வத் தம்பதியை வாழ்த்தி அருளினர். போகியாக இருந்து, உயிர்களுக்கு போகத்தை அருளும் சிவபெருமான், உலகில் அரசாட்சி புரிய விருப்பம் கொண்டதால், இடபக்கொடி மீன்கொடி ஆனார். சோமசுந்தரர் சுந்தரபாண்டியனாக கோலம் கொண்டார். சிவபெருமானோடு சிவகணங்களும் மானுட வடிவம் கொண்டனர். சுந்தரேசப் பெருமான் மக்களுக்கு அரசராகவும், பகைவர்களுக்கு சிங்கமாகவும், உலகப் பற்றுகளைத் துறந்த தவ முனிவர்களுக்கு முழுமுதலாகவும் விளங்குகிறார்.

சிறப்புப் பெயர்கள்

திருப்பாற்கடலைக் கடைந்தபோது, ஆதிசேஷன் உமிழ்ந்த நஞ்சை இறைவன் ‘மதுரம்’ (அமிர்தம் – தேன்) ஆக்கியதால் இத்தலம் ‘மதுரை’ என்று அழைக்கப்படுகிறது. 2,500 ஆண்டுகள் பழமையான மதுரை நகருக்கு, திரு ஆலவாய், சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவநகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம் என்று பல பெயர்கள் உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான அரவம், வட்டமாகத் தன் வாலை வாயால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், இத்தலம் ‘ஆலவாய்’ என்று அழைக்கப்படுகிறது.

விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்ததால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கடம்ப மரங்கள் நிறைந்த இத்தலத்தில் (கடம்ப வனம்) உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதால், இந்திரன் இங்கு கோயில் எழுப்பினார். மதுரை மாநகரை அழிக்க வருணன் ஏவிய 7 மேகங்களைத் தடுப்பதற்காக , தன் சடையில் இருந்து விடுத்த 4 மேகங்களும் 4 மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் இத்தலத்துக்கு ‘நான்மாடக் கூடல்’ என்ற பெயர் வந்தது.

மீனாட்சியே மதுரை

‘மதுரையே மீனாட்சி, மீனாட்சியே மதுரை’ என்று சொல்லும் அளவுக்கு, அன்னை மீனாட்சியின் நிழலிலேயே சுந்தரேஸ்வரர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். மீன் போன்ற கண்களை உடையவர் என்பதால் தடாதகைக்கு இப்பெயர் கிட்டியது. மீன் + ஆட்சி என்பதில் ஓர் உட்பொருள் உள்ளது. மீன் தன் முட்டைகளை கண்ணால் பார்த்து அக்கண்பார்வையின் திறத்தால், அவற்றை குஞ்சுகளாகத் தோன்றச் செய்து காக்கும். அதேபோல், மீனாட்சி அம்மனும் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் தன் பேரருள் நிறைந்த கடைக்கண் திறத்தால் காத்தருள்கிறார்.

தன் கணவரை வழிபடுகின்ற பெண்ணின் நல்லாளாகத் திகழ்கிறார் காஞ்சி காமாட்சி. தன் கணவர் கொடுத்த 2 நாழி நெல்லைக் கொண்டு 32 அறங்களைச் செய்தார் காமாட்சி. தன் கணவரை உயர்த்தும் குணவதியாகத் திகழ்கிறார் மீனாட்சி. தன்னை மணந்தவரை செல்வம், அரசு முதலானவற்றுக்கு அதிபதியாக்கி உயர்த்தியதுடன், குழந்தைகளாகிய உலகத்து உயிர்களையும் செல்வச் செழிப்புடையவர்களாக மாற்றுகிறார். அதை விளக்குவதற்காக, பசுமை நிறத்தவராக அருள்பாலிக்கிறார் மீனாட்சி. அதனாலேயே பசுங்கிளியை தரித்தவராக காட்சியளிக்கிறார்.

மீனாட்சி அம்மன் அங்கயற்கண்ணி என்று அழைக்கப்படுகிறார். மதுரையின் அரசியாக இருப்பதால், இவருக்கு நடைபெறும் அபிஷேகத்தை யாரும் காண இயலாது. அலங்காரம் செய்தபிறகே பக்தர்கள், மீனாட்சி அம்மனை தரிசிக்க முடியும். பச்சை தேவி, மரகதவல்லி, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித் துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுதி மகள் என்று எண்ணற்ற பெயர்களால் மீனாட்சி அம்மன் அழைக்கப்படுகிறார்.

கோயில் சிறப்பு

தாட்சாயணியின் உடற்கூற்றின் ஒருபகுதி இத்தலத்தில் விழுந்ததால், இத்தலத்துக்கு வருபவர்கள் பெரும் பேற்றை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. கலையழகு மிகுந்த கலைக் கூடமாகவும் இத்தலம் விளங்குகிறது. சிலையழகு, சிற்பங்களின் திறனழகு, சித்திரங்களின் பேரழகு, மண்டபங்கள், விமானங்களின் வசீகரம், இசை பாடும் தூண்கள், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கும் நாடக, நடன சிற்பங்கள் என்று முத்தமிழும் சேர்ந்து விளங்கும் கோயிலாக இத்தலம் அமைந்துள்ளது.

மதுரை மாநகரின் மையப்பகுதியில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 8 கோபுரங்கள், 2 விமானங்கள், வலப்புறம் மீனாட்சி அம்மனும் இடப்புறம் சொக்கநாதப் பெருமானும் கோயில் கொண்டிருக்க இத்தலம் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முன்பு அட்டகத்தி மண்டபம் உள்ளது. கோயிலுக்குள்ளே ஆடி வீதியும், வெளியில் சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மாசி வீதி, வெளி வீதி ஆகியவை உள்ளன.

சமணர்களை வாதில் வென்று வெற்றிக்கொடி நாட்டி, சைவநெறி தழைக்கச் செய்த புனித பூமியாக மதுரை மாநகர் போற்றப்படுகிறது. அறியாமையில் மூழ்கிக் கிடந்த கூன் பாண்டிய மன்னரை, பாண்டிமாதேவி மங்கையர்கரசி, அன்னை மீனாட்சியின் அருளாலும், அமைச்சர் குலச்சிறையார், திருஞான சம்பந்தர் உதவியுடனும் சைவநெறியை பின்பற்றச் செய்தார். மன்னனின் வெம்மை நோய் தீர்ந்து, அவரது கூனும் சரி செய்யப்பட்டது.

ஆடல் கலையில் ஆர்வம் கொண்ட ராஜசேகர பாண்டியன், சிவபக்தராகத் திகழ்ந்தார். சிவபெருமான் ஒரு காலை ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கியபடி ஆடுவதால் அவரது கால் வலிக்குமே என்று கவலை கொண்டார். ஆடல் பயிற்சி செய்வதால் உடல் வலியை உணர்ந்த அரசர், காலை மாற்றி ஆடுமாறு இறைவனை வேண்டினார். அன்பு பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி, கால்மாறி ஆடிய பதியாக மதுரை மாநகர் விளங்குகிறது. சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் நிகழ்த்தப்பட்டதும் இத்தலத்தில்தான்.

18 சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தரின் சித்தர் பீடம் இங்கு உள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளுள் 4-ம் படைவீடாக மதுரை காரிய சித்தி விநாயகர் விளங்குகிறார். சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல்பெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது. மீனாட்சி அம்மனைப் போற்றி குமரகுருபரர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார்.

பொற்றாமரைக் குளம்

தலத் தீர்த்தம்

மீனாட்சி அம்மன் கோயில் தீர்த்தங்களுள் முதன்மையானது பொற்றாமரைப் பொய்கையாகும். மீனாட்சி சுந்தரேசுவரரை பூஜிக்க, இந்திரன், இப்பொய்கையில் இருந்து பொன் தாமரை மலர்களைப் பெற்றதால் இப்பெயர் வழங்கலாயிற்று. பிரம்ம தீர்த்தம், சிவகங்கை என்ற பெயர் கொண்டும் இப்பொய்கை அழைக்கப்படும். இத்தீர்த்தக் குளத்தில் நீர்வாழ் உயிர்கள் எதுவுமே இருக்காது. இறைவனுடன் எதிர்வாதம் புரிந்த நக்கீரர், தீப்பொறிகளின் வெப்பம் தாங்காது இப்பொய்கையில் விழுந்தார். அம்மையும் அப்பனும் அருள்பாலித்து, அவரை இங்கிருந்து எழுப்பினர்.

தேரோட்டம்

திருவிழாக்கள்

ஆண்டு முழுவதும் இக்கோயிலில் திருவிழாக் கோலம் தான். சித்திரைப் பெருவிழா 12 நாட்கள், வைகாசி வசந்த விழா 10 நாட்கள், ஆனி ஊஞ்சல் விழா 10 நாட்கள், ஆடி முளைகொட்டு விழா 10 நாட்கள், ஆவணி மூலப் பெருவிழா 18 நாட்கள், புரட்டாசி நவராத்திரி விழா 10 நாட்கள், ஐப்பசி கோலாட்ட விழா 6 நாட்கள், கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள், மார்கழி எண்ணெய் காப்பு விழா 9 நாட்கள், தை தெப்பத் திருவிழா 12 நாட்கள், மாசி விழா ஒரு மண்டலம், பங்குனி கோடை வசந்த விழா 9 நாட்கள் நடைபெறும். மேலும் பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினம், விநாயகர் சதுர்த்தி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

x