ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு


பரமபத வாசல் வழி வரும் பெருமாள்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு, இன்று (டிச.14 ) காலை 4.44 மணி அளவில் நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், ஆண்டுதோறும் மார்கழி மாத இறுதியிலும், தை மாத தொடக்கத்திலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடப்பது வழக்கம். ஆனால், இந்த வருடம் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி

தேய்பிறை, வளர்பிறை என மாதத்துக்கு 2 முறை ஏகாதசி வரும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்ததாக 11-ம் நாள் வருவது ஏகாதசி திதி. ஒரு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகவும் வரும். மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ என்பார்கள். இதை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று, அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு விழா நடத்தப்படும்.

ஸ்ரீரங்கம் கோவிலைப் பொறுத்தவரை, ‘பாஞ்சராத்ர ஆகமம்' முறைப்படி, நாள், நட்சத்திரம், திருவிழாக்கள் கணிக்கப்படுகின்றன. ஸ்ரீரங்கம் கோயிலில் கார்த்திகை மாதம் முன்கூட்டியே வரும் ஏகாதசி ‘கைசிக ஏகாதசி' எனவும், மார்கழியில் வரும் ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி' எனவும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, மார்கழி மாதத்திலேயே பகல்பத்து உற்சவமும், ராப்பத்து உற்வசமும் கொண்டாடப்படும்.

அதேநேரத்தில் மார்கழி மாத கடைசியில் வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் தைத்திருநாளும் வந்தால், தை பிரம்மோற்சவம் கொண்டாட ஏதுவாக, வைகுண்ட ஏகாதசி உற்சவம் கார்த்திகை மாதத்துக்கு மாற்றி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. பரமபத வாசலும் திறக்கப்படுகிறது. இதுபோல கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திகையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, டிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பெருவிழாவில், பகல்பத்தின் 10-ம் நாளான நேற்று ( டிச.13) மோகினி அலங்காரத்தில் ஸ்ரீநம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதையடுத்து வைகுண்ட ஏகாதசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று நடைபெற்றது. ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 4.44 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசலை கடந்து சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பின்போது, இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத் துறை செயலாளர் குமரகுருபரர் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

கரோனா கட்டுப்பாடுகளால், சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காலை 7 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

x