எட்டயபுரம் பாளையக்காரர்கள் பாதுகாத்த கிறிஸ்தவ ஆலயம்!


காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா பேராலயம். (வலது) பேராலயத்தில் உள்ள கல்வெட்டு.

கோவில்பட்டி: தமிழகத்துக்கு போர்ச்சுகீசியர்கள் வணிகம் செய்ய வந்தபோது, சேசுசபை மூலம் கத்தோலிக்க கிறித்துவம் பரவியது.

மதுரை சேசு சபையினரால், கி.பி. 1600-ல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் புனித பரலோகமாதா பேராலயம் அமைக்கப்பட்டது. இங்கு புனித அருளானந்தர், வீரமா முனிவர் ஆகியோர் சமயப் பணி ஆற்றியுள்ளனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மாதாவின் தேர் பவனி தமிழ் நாட்டில் முதன் முறையாக வீரமாமுனிவர் காலத்தில் இங்குதான் தொடங்கப்பட்டது. அதன் சாட்சியாக பூவரசு மரத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய இரு தேர்கள் இன்றும் உள்ளன.

எட்டயபுரம் பாளையக்காரருக்கு நன்கு அறிமுகமான சேவியர் போர்க்கீசு என்ற பாதிரியார் இங்கு பணிபுரிந்தபோது, திசவீர எட்டப்பநாயக்கர் நேரில் வந்து ஆலயத்துக்கு யாரும் இடையூறு கொடுக்கக் கூடாது என ஆணையிட்டு, கல்வெட்டு வெட்டிக்கொடுத்துள்ளார். இதுவரை ஆவணப் படுத்தப்படாத இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனதலைவர் வே.ராஜ குரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:

எட்டயபுரம் பாளையக்காரர் செகவீர எட்டப்பநாயக்கர் கி.பி.1663-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு தன்னுடைய சீமையில் உள்ள சறுவேசுரன் கோயில் மற்றும் ரோமாபுரி சன்னாசிகள் மடம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளார். அவரது மகன் திசவீர எட்டப்பநாயக்கர் தன் தந்தை செய்ததை, தானும் அப்படியே தொடர்ந்து நடத்த விரும்புவதாக, காமநாயக்கன்பட்டி வந்து இந்த ஆலயத்தில் இருந்த குருக்களை கி.பி.1688-ம்ஆண்டு சித்திரை மாதம் 10-ம் நாள்சந்தித்து,

தன்னுடைய விருப்பத்தை கல்வெட்டாகவும் வெட்டிக் கொடுத்துள்ளார் . கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக் கிளவி என்பது ஆட்சியாளர்களால் கொடுக்கப்படும் தர்மத்துக்கு, யாராவது கெடுதல் செய்தால், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிக் கூறுவதாகும். இக்கல்வெட்டின் ஓம்படைக்கிளவி, இந்த சறுவேசுரனுடைய கோயிலுக்கும், குருக்களுக்கும் அவர்களுடைய சிஷ்யர்களுக்கும் ஏதாவதொரு பிரச்சினை பண்ணுகிறவன், தனக்கு துரோகியாவான் என்றதன் மூலம், எட்டயபுரம் பாளையக்காரர்கள் பல தலைமுறைகளாக இத்தேவாலயத்தை பாதுகாத்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

இத்தேவாலயம் பலமுறைஎரிக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் வந்துள்ளது. இத்தகைய இடையூறுகளை முடிவுக்கு கொண்டுவர எட்டயபுரம் பாளையக்காரரின் கல்வெட்டு உறுதுணையாக இருந்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அக்காலக் கல்வெட்டு, செப்பேடுகளில் சறுவேசுரன் கோவில் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.