அடுத்த ஜென்மத்துல பெருச்சாளியாதான் பிறப்பீங்க - மதுரை ஆதீனம் சாபம்


மதுரை ஆதீனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள தஞ்சாக்கூர் ஜெகதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழாவில், மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய ஆதீனம், "தேசியக் கொடி ஒரு சைவக் கொடி. அதன் பச்சை நிறம் அம்பாளைக் குறிக்கிறது. சிவப்பு அம்பாளின் நிறத்தைக் குறிக்கிறது. வெள்ளை நிறம் ரிஷபத்தை (காளை மாடு) குறிக்கிறது. ஆக மொத்தத்தில் தேசியக் கொடி சைவக் கொடியாகும். யாராவது கோயில் நிலத்தை வைத்திருந்தாலோ, கோயிலுக்கு கடனைச் செலுத்தாமல் இருந்தாலோ கொடுத்து விடுங்கள். இல்லை என்றால், அடுத்த ஜென்மத்தில் பெருச்சாளி மற்றும் மூஞ்சுறு எலியாகப் பிறக்க நேரிடும். சிவன் சொத்து குலநாசம்” என்று பேசினார்.

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான பல சொத்துகள் மதுரை, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்களையும், கட்டிடங்களையும் வாடகை மற்றும் ஒத்திக்கு எடுத்துள்ள பலர், அதற்கான வாடகையை முறையாகச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்த கோபத்தைத்தான் கும்பாபிஷேக விழாவில் மதுரை ஆதீனம் சாபமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

முன்பொருமுறை ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வ.உ.சி. பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஆதீனம், "நேரு காலத்தில் லடாக் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்தது. மோடி அதை மீட்டெடுத்திருக்கிறார்" என்று உண்மைக்கு மாறான செய்தியைச் சொன்னார். இப்போது, இந்திய தேசியக் கொடியை சைவக் கொடி என்று சொல்லி, அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

x