ஆண்டாள் கோயில் குதிரை இறந்தது


ஆண்டாள் கோயில் குதிரை (கோப்புப் படம்)

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், யானையுடன், பெண் குதிரை ஒன்றும் வளர்க்கப்பட்டுவந்தது.

தினமும் நடைபெறும் ஆறுகால பூஜையில், காலையில் நடக்கிற விஸ்வரூப பூஜைக்கு இந்தக் குதிரையும் கொண்டுவரப்படுவது வழக்கம். கோயில் வளாகத்திலேயே கோசாலை போல, இந்த வெள்ளைக் குதிரைக்கென தனி லாயம் அமைத்து பராமரிக்கப்பட்டுவந்தது.

2 நாட்களுக்கு முன்பு இந்தக் குதிரைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. நெல்லையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கேயே தங்கவைத்து குதிரைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அது இறந்துவிட்டது.

இதைத் தொடர்ந்து இறந்த குதிரையை ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டுவந்த கோயில் ஊழியர்கள், அதை கோயில் மண்டபத்துக்குப் பின்புறமுள்ள காலியிடத்தில் அடக்கம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட ஊழியர்களும், பக்தர்களும் பங்கேற்று குதிரைக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

x