சுமையும் பொக்கிஷமாகும்!


துவாரகா கிருஷ்ணர் கோயில்

ஒருசமயம் துவாரகையில் ஏழ்மை நிலையில் வாழும் பெண்மணி, ஒருவர் கிருஷ்ணரைச் சந்திக்கிறார். அவருக்கு கிருஷ்ணர் மீதுள்ள பக்தி காரணமாக, கிருஷ்ணருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

அதனால் ‘உனக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார்.

கிருஷ்ணர் உடனே அந்தப் பெண்ணை நோக்கி, “நான் செல்லும் இடத்துக்கு எல்லாம், நான் தரும் கோணிப்பையுடன் வா” என்று கூறி ஒரு கோணிப்பையை (அழுக்கு மூட்டை) கொடுக்கிறார்.

இதை தூக்கிக்கொண்டு கிருஷ்ணருடன் நடக்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்ற ஆவல் இருந்தாலும், கிருஷ்ணரை ஏதும் கேட்காமல், மூட்டையைத் தூக்கியபடி அவரை பின் தொடர்ந்தார் அப்பெண்மணி.

வெகுதூரம் நடந்த பின்பு அந்த மூட்டை, சுமையாகப் படுகிறது. தன்னால் இதற்கு மேல் நடக்க இயலாது என்று அப்பெண்மணி கிருஷ்ணரிடம் கூறுகிறார். அவருக்கு சுமை தூக்குவதில் உதவினார் கிருஷ்ணர்.

துவாரகா கிருஷ்ணர்

சிறிது காலம் கழித்து அவர்கள் சேரவேண்டிய இடம் வந்தது. “இனி சுமையை இறக்கி வைக்கலாம்” என்று கிருஷ்ணர் கூறியதும் மகிழ்ச்சி அடைகிறார் அப்பெண்மணி.

“இப்போது மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்” என்று கூறிய கிருஷ்ணர், மூட்டையைப் பிரிக்கிறார். அதில் வைக்கோல் இருந்தது. மெல்ல வைக்கோலை விலக்கியதும் அரிய மாணிக்கங்கள், வைடூரியங்கள், பொற்காசுகள் இருந்தன. அப்பெண்மணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சுமை என்று நினைத்த மூட்டையில் பொக்கிஷமா என்று அதிசயித்தார்.

“இவை அனைத்தும் உனக்குத்தான். உன் பொறுமைக்கு எனது பரிசு” என்றார் கிருஷ்ணர். உடனே கிருஷ்ணர் காலில் விழுந்த அப்பெண்மணி,

“கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு. இவ்வளவு காலம் நீ எனக்கு பொக்கிஷத்தைக் கொடுத்திருந்து, நீ என்னுடனேயே இருந்தபோது நான் அதை உணரவில்லை. அதை சுமையாக நினைத்துவிட்டேன். நீ என்னைக் காக்கவில்லை என்று தவறாக நினைத்துவிட்டேன். உன்னைப் புரிந்து கொண்டிருந்தால், இந்தச் சுமை எனக்கு இன்பமாக இருந்திருக்கும். இந்த சுமை குறித்து உன்னிடம் புகார் கூறியிருக்க மாட்டேன். இப்போது நான் உன்னைப் புரிந்துகொண்டேன். சுமை என்று நினைத்தால் அனைத்தும் சுமைதான். பொக்கிஷம் என்று நினைத்தால் சுமையும் பொக்கிஷமே என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லாம் நம் கையில்தான் உள்ளது. பார்க்கும் பார்வையே வேறுபடுத்திக் காட்டுகிறது” என்றார்.

துவாரகா கிருஷ்ணர்

அவனை சரண் புகுந்தால் சுமையும் பொக்கிஷமே..

ஓம் நமோ நாராயணாய..

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

x