மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று வழிபாடு செய்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். தேர்தலுக்கு முன்பாக தனது கணவர் வெற்றிபெற்று முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக, தமிழகம் தாண்டி பல மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கும் நேரில் சென்று தரிசித்து சிறப்பு பூஜைகள் நடத்தி வேண்டுதல் செய்தார். தேர்தல் முடிந்து முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அந்தக் கோயில்களுக்கு எல்லாம் மீண்டும் சென்று நேர்த்திக்கடனை முடித்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.
அதன்படி, நேற்று(டிச.5) மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள புகழ்பெற்ற புதன் தலமான திருவெண்காடு அகோரமூர்த்தி சந்நிதியில் பால்குடம் எடுத்து, தனது நேர்த்திக்கடனை செய்து முடித்தார்.
இன்று(டிச.6) கொள்ளிடம் அருகே இருக்கும் மாதானம் என்ற சிற்றூரில் உள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு வந்திருந்த அவர், மாரியம்மனை தரிசித்து மனமுருக பிரார்த்தித்துக் கொண்டார். அதன்பின் அங்கு வந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகளுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அண்மைக் காலங்களில் அவர் எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ள அர்ச்சகர்கள் மற்றும் அங்கு வந்திருப்போருடன் தயங்காமல் புகைப்படம் எடுத்துக் கொள்ளுவதை இயல்பாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.