கார்த்திகை மாதம் என்றால் தீபத் திருவிழா, ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டுக் கொள்வது, அடை மழை, கார்த்திகை அடை - இதெல்லாம் நினைவுக்கு வருவது இயல்பே.
ஆனால் கார்த்திகை மாதம், சோளிங்கர் (64-வது திவ்யதேசம்) நரசிம்மர் கண்திறந்து பார்ப்பது விசேஷமான ஒன்று.
அமிர்தவள்ளி தாயார் சமேத யோக நரசிம்மர் சுவாமி கோயிலில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்த ஊருக்குத் திருக்கடிகை (கடிகாசலம்) என்ற பெயர் உண்டு. இந்தத் தலத்தில் ஒரு கடிகை (ஒரு நாழிகை – 24 நிமிடங்கள்) நேரம் இருந்தாலே மோட்சம் கிட்டும் என்று கூறப்படுவதுண்டு. ஒரு கடிகை நேரம், நரசிம்மரைத் துதி செய்து, பிரம்மரிஷி பட்டத்தை, விஸ்வாமித்திர முனிவர் பெற்றதாகப் புராணங்கள் உரைக்கின்றன. சப்த ரிஷிகளும் இங்கு ஒரு நாழிகைக்குள் நரசிம்ம அவதாரத்தை தரிசித்தனர்.
ஓர் ஆண்டில் 11 மாதங்கள் யோக நிலையில், கண்மூடி அமர்ந்திருக்கும் நரசிம்மர், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கார்த்திகை மாதம் முழுவதும் விழா எடுப்பது வழக்கம். கார்த்திகை மாதம் வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். (கோயிலுக்குச் செல்லும் வழியில் குரங்குகள் இருக்கும். தின்பண்டம் இருந்தால் பிடுங்கிக் கொள்ளும்.)
நரசிம்மரை கார்த்திகை மாதத்தில் தரிசித்தால், பல நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அனைவருக்கும் நரசிம்மர் அருள் கிட்டட்டும்.