கயா சிரார்த்தம்


கயா - விஷ்ணு பாதம்

நமது முன்னோரில் பலர், தம் வம்சத்தில் யாராவது கயா சென்று, அங்கு தம் பெயர் சொல்லி கரையேற்ற மாட்டார்களா என்று ஏங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து மகாவிஷ்ணு அருள்பாலித்து வரம் அளித்ததாக ஒரு புராணக் கதை உண்டு.

கயாசுரன் என்ற அசுரன், தவம் புரிந்து கொண்டிருந்தான். எதற்காக தவம் இருக்கிறான் என்பதும், என்ன வரம் கேட்பான் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. இதை நினைத்து தேவர்களுக்கு அச்சம் உண்டாயிற்று.

பிரம்மதேவரை நாடி, கயாசுரனின் தவம் குறித்து தெரிவித்தனர். தேவர்கள், பிரம்மதேவர் அனைவரும் மகாவிஷ்ணுவை அணுகி இதுகுறித்து ஆலோசித்தனர்.

அவர்களின் அச்சத்தைப் போக்கும்விதமாக, மகாவிஷ்ணு கயாசுரன் முன்னர் தோன்றி, அவனது தவம் குறித்து வினவினார்.

கயாசுரன், தேவர்கள், துறவிகளைக் காட்டிலும் தன் உடல் போற்றப்பட வேண்டும் என்றும், தன்னைத் தொடுபவர்களுக்கு புனிதம் கிடைக்க வேண்டும் என்றும் வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் வரம் அருளினார்.

கயாவில் சிரார்த்தம்

கயாசுரனின் வரம் குறித்து அறிந்தவர்கள், இறுதி காலத்தில் கயாசுரனை தரிசித்து வீடுபேறு அடைந்தனர். இதனால் நரக லோகம் கலைக்கப்பட்டுவிடுமோ என்று யமதர்ம ராஜர் நினைத்துக் கொண்டார்.

தனது எண்ணத்தை பிரம்மதேவரிடம் பகிர்ந்து கொண்டார். தீமை செய்த பலர், கயாசுரனை தரிசித்துவிட்டால், சொர்க்க லோகம் புகுந்துவிடுவார்கள். அப்புறம் எப்படி அவர்களது பாவக் கணக்கை, தான் கணக்கிட முடியும் என்று யமதர்ம ராஜர் விளக்கம் அளித்தார்.

யமதர்ம ராஜரும் பிரம்மதேவரும் சேர்ந்து மகாவிஷ்ணுவை தரிசித்து, இதுகுறித்து தெரிவித்தனர். மகாவிஷ்ணுவும் உடனே இந்த விஷயத்தை கயாசுரனிடம் தெரிவித்தார். மேலும், தான் ஒரு யாகம் நிகழ்த்தப் போவதாகவும் அதற்கு கயாசுரனின் உடல் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்தார். நல்ல செயலுக்காக தன் உடல் பயன்படட்டும் என்று கயாசுரனும் ஒப்புக் கொள்கிறான். உடனே யாகத்துக்காக தன் உடலை அர்ப்பணித்தான்.

கயா - விஷ்ணு பாதம்

பிரம்மதேவர் தலைமையில் யாகம் நடைபெற்றது. யாகத்தில் போடப்பட்ட கயாசுரனின் உடல், ஆடிக் கொண்டே இருந்தது. மகாவிஷ்ணு தனது கதையால் கயாசுரன் உடலின் ஆட்டத்தை நிறுத்தினார். கயாசுரன் மார்பின்மீது தர்மசீலா என்ற கல்லை வைத்து அதில் தனது திருநாமத்தை வைத்து அழுத்தினார் மகாவிஷ்ணு.

உயிர் துறக்கும் சமயத்தில், கயாசுரன், தன் உடல் மீது அனைத்து தெய்வங்களும் உறைய வேண்டும் என்றும், தான் உயிர் துறந்த இடம் ‘கயா’ என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்றும் வரம் கேட்கிறான். மேலும், கயாவில் சிரார்த்தம் கொடுப்பவர்களின் பித்ருக்கள் அனைவரும் பிரம்மலோகம் செல்ல வேண்டும் என்றும் வேண்டுகிறான்.

மஹாவிஷ்ணுவும் வரம் அருளினார், அதன்படி, கயாசுரன், யாகத்துக்காக, தன் உடலை அர்ப்பணித்த இடம் ‘கயா’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் இங்கு யாராவது வந்து மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தால், அந்த பித்ருக்கள் கரையேறுவதாக ஐதீகம்.

x