துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பால பிரஜாபதி அடிகளார்


பால பிரஜாபதி அடிகளார்

சுவாமித்தோப்பை தலைமை பதியாகக் கொண்டு இயங்கும் அய்யா வழியின் பால பிரஜாபதி அடிகளார், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம்வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று பால பிரஜாபதி அடிகளாருக்கு தமிழக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளது.

அய்யா வழியின் மூத்த தலைவர்களில் ஒருவர் பால பிரஜாபதி அடிகளார். ஆன்மிகம் மட்டுமல்லாது, பொது நோக்கத்திலும் தன் மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசுவார் அடிகளார். மக்கள் பிரச்சினைகளின் போதும் அவர் குரல் கொடுக்கத் தயங்கியதில்லை. இதேபோல் தொடர்ந்து மத நல்லிணக்கத்துக்காகவும் குரல் கொடுத்துவருகிறார். சர்வ மதங்களுக்குள்ளும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கவும் தொடர்ந்து அவர் வலியுறுத்தி வருகிறார். சர்வ மத ஒற்றுமைக்குக் குரல் கொடுக்கும் பால பிரஜாபதி அடிகளாருக்கு காவல் துறைப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

உடனே முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘குன்றக்குடி அடிகளாருக்குப் பின் தமிழையும், சமத்துவத்தையும் சர்வ சமயத்தவர் முன்பும் தெளிவாக எடுத்துரைக்கும் பாலபிரஜாபதி அடிகளாருக்கு பாதுகாப்பு கொடுப்பது தமிழக அரசின் கடமை’’ எனச் சொன்னதோடு, அடிகளாருக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்புக்கும் ஆணை பிறப்பித்தார்.

பால பிரஜாபதி அடிகளார்

இதைத் தொடர்ந்து, இப்போது பால பிரஜாபதி அடிகளார் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். இதுகுறித்து அய்யா வழி பக்தர் மகாராஜன் என்பவர் கூறும்போது, ‘‘சர்வ மத நல்லிணக்கத்தையும் அடிகளார் மேடைதோறும் முழங்கிவருகிறார். தாழக் கிடப்போரை தற்காப்பதே தர்மம் என்னும் அய்யாவின் வாக்குப்படி சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒரு குடையின்கீழ் அன்புக் குடையின்கீழ் அடிகளார் கொண்டுவரும் முனைப்பில் உள்ளார். அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு அய்யா வழி பக்தர்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

x