அறிவற்றோருடன் இருப்பதைவிட தனிமையே மேல்!


அறிவுக்கும் பௌத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புத்தம் என்றாலே அறிவு என்றுதான் பொருள். ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்றால் ’நான் அறிவைச் சரணடைகிறேன்’ என்று அர்த்தம். புத்தம் என்னும் சொல்லில் இருந்துதான் ‘புத்தகம்’ என்னும் சொல் வந்திருக்கும் என்பது சிலரின் கூற்று. அறிவை மூலதனமாகக் கொண்டதுதான் பௌத்தம்.

அறிவு ஒளி பெற்ற மனிதர்!

ஒருமுறை புத்தர் நெடுஞ்சாலையொன்றின் ஓரத்தில் உள்ள மரத்தினடியில் அமர்ந்தார். அங்கு வந்த தோனர் என்பவர் புத்தரின் ஒளிபொருந்திய முகத்தைப் பார்த்து, “புத்தரே நீங்கள் தேவலோகத்தில் உள்ள தேவரா?” புத்தர் மெல்ல புன்னகைத்தவாறே ”இல்லை” என்றார். ”அப்படியானால் நீங்கள் கந்தர்வரா?” பதிலை எதிர்பார்த்து புத்தரை நோக்கினார் தோனர். புத்தர் மீண்டும் ”இல்லை” என்றார்.

”யக்கரா”

“இல்லை”

”இல்லையென்றால் யார்தான் நீங்கள்?”

வினவிய தோனரைப் பார்த்து புத்தர் சொன்னார், “தோனரே! என்னிலிருக்கும் மயக்கங்களை நான் களையாவிட்டால் நான் யாராக இருந்தால் என்ன? நீர்த்தாவரமான தாமரை தண்ணீரிலே இருந்தாலும் தண்ணீரினால் கறைபடியாதது போல உலக வாழ்க்கையிலிருந்து நான் விலகி உலகை வென்றிருக்கிறேன். எனவே என்னை ‘அறிவு ஒளி பெற்ற மனிதர்’ எனக் கருதுங்கள்” என்றார்.

அறிவற்றவர்களோடு வாழ்வது துன்பமானது!

அதனால்தான் மூடத்தனங்களுக்கு எதிரான பகுத்தறிவு வழியாக பௌத்தம் விளங்குகிறது. சமூக விலங்காக இருக்கும் மனிதருக்கு அறிவு மிக அவசியம். தற்கால மனிதர்களாக இருக்கும் நமக்கு முன் பல நூற்றாண்டுகளாகப் பல காலங்களில் பல படிநிலைகளில் மானுடம் அறிவைப் பெருக்கிக் கொண்டேதான் இருக்கிறது. நெருப்பு முதல் செயற்கை அறிவுவரை மானுடத்தின் அறிவு வளர்ச்சிக்கான அடையாளமாக இருக்கின்றன.

அந்த அறிவு வளர்ச்சியை அர்த்தப்பூர்வமானதாக மாற்றுகிறது புத்தரின் தம்மம். மனிதர் அறிவற்று இருக்கக் கூடாது; அறிவின் துணையில்லாமல் பிறருக்குத் துன்பம் விளைக்கக் கூடாது. ஏன் நமக்கு நாமே துன்பம் விளைக்கக் கூடாது. அறிவின் மூலமே துன்பத்தையும், துன்ப மூலத்தையும், துன்பத்தை நீக்கும் வழிகளையும், அவற்றைக் கடைப்பிடிக்கும் வழிகளையும் நாம் உணர முடியும் எனவே அறிவைச் சரணடையுங்கள் என்றார் புத்தர்.

ஆனாலும் அறிவற்றவர்களால் உண்டாகும் துன்பம் அதிகமாகவே இந்த உலகை ஆட்டிப்படைக்கிறது. வரலாற்றில் அதற்குப் பல சான்றுகள் நம்மிடம் இருக்கின்றன, புத்தர் கூறுகிறார், “அறிவற்றவர்களோடு வாழ்வது துன்பமானது.”

தூங்காதவர்க்கு

இரவு நீளம்

களைப்புற்றோருக்கு

பயணமோ தூரம்

மேனிலையான அறிவைப் பெறாதவர்க்கு

வாழ்வே பெரும்பாரம் (தம்மபதம் 60)

வாழ்வின் நோக்கமே துன்பத்திலிருந்து விடுபடுவதுதான். ஆனால், அறிவற்றவர்களின் வாழ்க்கை துன்பமாக மாறிவிடுகிறது. அவர்களுக்குப் பகுத்தறியும் ஆற்றல் இல்லாமல் போகிறது. தன்னைவிட அறிவுடையவர் அல்லது தன்னளவு அறிவுடையவரின் துணையைத்தான் ஒருவர் கொள்ள வேண்டும் என்பது புத்தரின் அறிவுரை. இல்லை என்றால் தனியாகவே இருந்துகொள்ளலாம், அறிவற்றவரின் துணை என்பது பயனற்றது. இங்குத் துணை என்பதை நட்பு என்றும் உறவு என்றும் கூட எடுத்தாளலாம்.

யார் அறிவிலி?

அறிவிலிகள் என்பவர்கள் யார் என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு ஏதாவது அளவுகோல் அல்லது தேர்வுகள் உண்டா? தனக்கு எல்லாம் சொந்தம் என்பவர், தனக்கு வருங்காலத்தில் பாதுகாப்பிற்காகக் குழந்தைகள் இருக்கிறார்கள், வற்றாத செல்வம் இருக்கிறது என்று நினைப்பவர் அறிவிலி. அவரே அவருக்குச் சொந்தமில்லை என்னும்போது மீதியெல்லாம் எப்படி அவருக்குச் சொந்தமாகும்?

தானொரு அறிவிலி

என அறிபவன் அறிஞன்

தானொரு அறிவாளி

எனக்கூறுபவன் அறிவிலி (தம்மபதம் 63)

உங்களுக்கு இப்போது ஒரு கேள்வி எழலாம். முன்னர் சொன்ன நிகழ்வில் புத்தர் தன்னை அறிவு ஒளி பெற்ற மனிதர் என்கிறாரே அது சரியா? சரியான கேள்விதான் உங்களுடையது. தர்க்கம் செய்வதும் கூடிப்பேசும் சங்கத்தில் எதிர்க்கருத்துக்களைக் கூறுவதும் அவற்றைச் செவிமடுக்கும் ஜனநாயகமும் கொண்டதுதான் பௌத்தம்.

புத்தரை ஒருவர் கடவுளாகக் கட்டமைக்க நினைக்கிறார். அதற்கு புத்தர் தன்னை கடவுள் இல்லை, ’வெறும் மனிதர்’ என்பதை நிறுவுவதற்காக அப்படிக் கூறுகிறார். மேலும் தன்னுடைய தளர்வில்லா தேடலில் அறிவைப் பெற்றிருக்கிறேன் என்னும் குறிப்பையும் கூறுகிறார். நீங்களும் என்னைப் போல் ஆகலாம் அதற்கு நீங்கள் ‘உங்களுக்கு ஒளியாக இருக்க வேண்டும்’ என்கிறார்.

தனக்கு தானே எதிரி!

’தேனிலிருந்தும் தேக்கரண்டி தேனின் சுவை அறிவதில்லை’ என்னும் உவமை புத்தரால் கூறப்பட்ட ஆகச்சிறந்த உவமைகளில் ஒன்று. அறிவிலிகளும் அப்படித்தான், பெரும் அறிவுப் பெற்றவர்களோடு இணைந்திருந்தும் தம்மத்தை அவர்கள் உணர்வதில்லை. அறிவிலிகள் அவர்களுக்கு அவர்களே எதிரிகள். அவர்கள் தீமைகளைப் புரிவதற்கு எப்போதும் தயாராய் இருப்பார்கள். எட்டிக் காய்களையே அவர்கள் சுவைப்பார்கள். அறிவினால் ஆவதுண்டோ, கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்னும் திருக்குறள் உங்களுக்கு இப்போது நினைவில் தட்டினால் மிகச்சரியே.

அறிவிலியின் திறன்

அவனுக்குத் துன்பம் தரும்

அது

மதிப்பையும் ஞானத்தையும் அழிக்கும் ( தம்மபதம் 72)

எனவே அறிவைப் பெறுவது மானுடத்தின் கடமை. அதை வளர்த்துக்கொள்வது அவர்களின் தேவை. அறிவுள்ளவர்கள் நிறைந்த சமூகம் பிறருக்குத் துன்பம் தராது. சுரண்டாது. தனக்குத்தான் எல்லாம் என சேர்த்துக்கொள்ளாது. தன் துன்பத்தையும் சமூகத் துன்பத்தையும் களைவதற்காகவே அது எப்போதும் இயங்கும்.

மாதா மாதம்

குசப்புல் நுனிகொண்டு

உணவு உண்டாலும்

அறிவிலி

தம்ம மெய்ஞானம் பெற்றோருக்கு

நூறில் ஒரு பங்கேனும் ஈடாகார் ( தம்மபதம் 70)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
பூ போன்ற மனம்! : தம்மத்தின் பதம் - 5

x