இல்லத்துக்கே வருவார் ஏழுமலையான் 


ஒருசமயம் வேங்கடவனை தரிசிக்க, ஒரு பணக்காரர் திருப்பதி சென்றார். அவருக்குப் பின்னால், ஓர் ஏழையும் வேங்கடவனை தரிசிக்க வரிசையில் நின்றிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்தது.

வெகுநேரம் கழித்துதான் இருவருக்கும் வேங்கடவன் தரிசனம் கிடைத்தது. அடுத்தது, லட்டு வாங்குவதற்கு வரிசையில் நின்றனர். தன் வசதிக்கு ஏற்ப, பணக்காரர் 4 லட்டு வாங்கினார். ஏழையால் ஒரு லட்டு மட்டுமே வாங்க முடிந்தது.

தனது ஏழ்மையை நினைத்து ஏழைக்கு வருத்தம் மேலிட்டது. லட்டு வாங்கிக் கொண்டு, மலைப்பாதையில் வரும்போது, அந்த ஏழை, ஒரு துறவியைச் சந்திக்கிறார். தனது வருத்தத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.

“தான் ஏழையாக இருக்கும் காரணத்தால், தன்னால் ஒரு லட்டு மட்டுமே வாங்க முடிந்தது. பணக்காரராக இருந்தால், நிறைய லட்டுகள் வாங்கியிருக்க முடியும்” என்று குறைபட்டார் அந்த ஏழை.

அப்போது அந்தத் துறவி கூறினார்: “அந்தப் பணக்காரருக்கு 4 லட்டுகள் கிடைத்திருக்கலாம். ஆனால், அவரால் அந்த லட்டுகளில் ஒரு துளியைக்கூட உண்ண முடியாது. அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஆனாலும் அவர் லட்டுகளை வாங்கி, தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கிறார்.

பிறருக்கு பகிர்ந்தளிப்பதே பக்தியின் நோக்கம். அவரவருக்கு கிடைப்பதில், ஒரு சிறு பகுதியையாவது பகிர்ந்தளிக்க வேண்டும். உன்னுடைய இந்த ஒரு லட்டிலிருந்து யாருக்கேனும் ஒரு துளியைக் கொடுத்தாலும், இன்னும் கிடைக்காதா என்று அது அவரை ஏங்க வைக்கும்.

இறைவனின் கருணை மழையில் சிறு துளியாவது கிடைக்காதா என்று ஒவ்வொரு பக்தரும் ஏங்குகிறார். அதனால், உனக்கு கிடைத்த ஒரு லட்டில், ஒரு சிறு துளியை நீ எடுத்துக்கொண்டு, மீதியைப் பிறருக்குப் பகிர்ந்து கொடு. அப்போது ஏழுமலையான் உன் இல்லத்துக்கே வருவார்”.

இவ்வாறு துறவி கூறி முடித்ததும், ஏழையின் மனது நிம்மதி அடைந்தது.

x