சரணாகதி


உலகில் நாம் மட்டுமே கஷ்டத்தை அனுபவிப்பதாக நம்மில் பலர் நினைத்துக் கொள்வதுண்டு. அதுபோல், மகாபாரதத்தில் பாண்டவர்கள் நினைத்துக் கொண்டதாக ஒரு சம்பவம் உண்டு.

குருஷேத்திரப் போர் முடிந்துவிட்டது. அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர், ரத சப்தமி நாளுக்காக காத்துக் கொண்டிருந்தார். பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரைச் சந்தித்தனர். அப்போது பீஷ்மர் தருமரைப் பார்த்து, “உங்களது லட்சியம் நிறைவேறியதா?” என்று கேட்டார்.

“நாங்கள் தர்மத்தைதான் கடைபிடித்தோம். துரியோதனன் எங்களைத் துன்புறுத்தினான். ஆனால், நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும். நாம் எந்தத் தவறும் செய்யாதபோது ஏன் இவ்வளவு துயரங்களை சந்திக்க வேண்டும்? தவறு செய்த துரியோதனன் கடைசிவரை மகிழ்ச்சியாகவே இருந்தான். இதற்கு என்ன காரணம்?” என்று தருமர் கேட்டார். மற்ற நால்வரும் இதை ஆமோதித்தனர்.

பீஷ்மர் கூறுகிறார்: “நீங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்கள் நிம்மதி போகவில்லை. நீங்கள் அதர்ம பாதையில் செல்லவில்லை. துயரப்பட்டாலும் உங்கள் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.

துரியோதனன் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிக்கவில்லை. ஆனால் நிம்மதியாக இருந்தானா என்றால் இல்லை. உங்களை நினைத்து, உள்ளூர பயந்தான். உங்களுக்கு தீமைசெய்ய நினைத்து, உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான். எண்ணம், சிந்தனை எல்லாம் தீமையாகவே இருந்தன.

உங்களுக்குத் தீமை ஏற்படும்போது கிருஷ்ணர் உங்களுடன்தான் இருந்தார்; துரியோதனனுடன் இல்லை. நல்லவர்களை பகவான் சோதிப்பது, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரத்தான்.

கஷ்டம் கொடுத்தாலும் இறைவன் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டான். கெட்டவர்களுக்கு அள்ளிக் கொடுத்தாலும், கைவிட்டுவிடுவார். இதற்குத் தேவை அவனிடம் உண்மையான சரணாகதி. அவ்வளவுதான்.

தர்மத்தைக் கடைபிடித்தால், அதன் பலன் நமக்கே கிடைக்கும். இவ்வாறு பீஷ்மர் கூறி முடித்ததும், பாண்டவர்களின் மனது லேசானது.

x