சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரையைத் தொடங்கியுள்ளனர். சீசன் களைகட்டியிருக்கும் இந்தச் சூழலில் கனமழையின் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் முதல் 5 நாட்களும், கார்த்திகை மாதத்தின் தொடக்கம் முதலும் பக்தர்கள் தரிசனத்துக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறக்கப்படுவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் விரதம் தொடங்கி சபரிமலைக்குச் செல்வதையே, பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் விரும்புகின்றனர். இப்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய செல்லத் தொடங்கியுள்ளனர்.
சபரிமலையை உள்ளடக்கிய பத்தனம்திட்டா மாவட்டத்தில், நேற்று கனமழை பெய்தது. இதனால், பம்பையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல், கக்கி மற்றும் ஆலக்கோடு அணைகளில் இருந்தும் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் சூழல் எழுந்துள்ளது. மேலும், பம்பை அணையிலும் தண்ணீர் முழுக்கொள்ளளவை நெருங்கி வருகிறது. அந்த அணையும் திறக்கப்படும் என பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், நண்பகலுக்குள் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பம்பை அணையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு, அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை காரணமாக, சபரிமலையில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழியில் இன்றைய தரிசனத்துக்கு முன்பதிவு செய்திருப்போரும் இப்போது எந்தப் பகுதியில் வந்திருக்கிறார்களோ, அங்கேயே பாதுகாப்பான இடங்களில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கட்டுக்குள் வந்ததும் முன்பதிவு செய்த முன்னுரிமை அடிப்படையில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசும், தேவசம்போர்டும் அறிவித்துள்ளனர். மாலையில் வெள்ள நிலவரத்தை கண்காணித்த பின்னரே, சபரிமலைக்கு மீண்டும் பக்தர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெரியவரும்.