ஆக்ரா மாவட்ட தலைமை மருத்துவமனை இன்று காலை அமளிதுமளியானது. கண்ணீரும் கம்பலையுமாக ஒரு பெரியவர் மருத்துவமனையை அணுகினார். அவர் கையில் குழந்தைபோல துணியில் சுற்றப்பட்டு இருந்ததை வாங்கிய செவிலியர்கள் அதிர்ந்து போனார்கள். அது ஒரு சாமி சிலை.
கண்ணீர் நிற்காத அந்தப் பெரியவர், செவிலியர்களிடம் கெஞ்ச ஆரம்பித்தார். அவர் பெயர் லெக் சிங். அருகிலுள்ள பத்வாரி கோயில் பூசாரியாக 30 ஆண்டுகளாக இருக்கிறார். அப்பகுதியில் இன்று(நவ.19) ‘லட்டு கோபால்’ எனப்படும் கிருஷ்ணரின் பால்யத்தை சிறப்பிக்கும் பண்டிகை நடைபெறுகிறது. அதற்காக லட்டு கோபாலின் சிலையை காலையில் குளிப்பாட்ட ஆரம்பித்தார் லெக் சிங். பெரியவரின் கைதவறி சிலை விழுந்ததில் சிலையின் ஒரு கரம் முறிந்து போனது.
பெரியவரால் அதைத் தாங்கவே முடியவில்லை. இத்தனை வருட பூஜையில் இதுபோல நடந்ததே இல்லை என்றும், அதிலும் தனது பிரியத்துக்குரிய லட்டு கோபாலின் கை உடைந்ததைக் கண்டு கதறி அழ ஆரம்பித்தார். பின்னர் ஒரு முடிவெடுத்தவராக, லட்டு கோபாலை குழந்தைபோல ஏந்தியவாறு மருத்துவமனை வந்திருக்கிறார்.
அங்கே, ’லட்டு கோபால் கையை சரி செய்து கொடுங்கள்’ என்று மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் கெஞ்ச ஆரம்பித்தார். அவர்கள், லெக் சிங்கிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தனர். அவர் மசிவதாகத் தெரியவில்லை. பின்னர் தலைமை மருத்துவரிடம் கலந்தாலோசித்தவர்கள், ’ஸ்ரீகிருஷ்ணர்’ என்ற பெயரில் சிலையை மருத்துவமனையில் அனுமதித்து, ’சிகிச்சை’ அளிக்க ஆரம்பித்தனர்.
மருத்துவர் சிரத்தையுடன் பாண்டேஜ் போட்டுக் கட்டியதில் லட்டு கோபாலின் கரம் சரியானது. லெக் சிங், தனது கண்களை துடைத்துக்கொண்டு பெருமூச்சு விட்டார். சிகிச்சை முழுமையடைந்ததும் லட்டு கோபாலை பயபக்தியுடன் செவிலியர்கள் வழியனுப்பி வைத்தனர். மருத்துவமனை ஆவணங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட விபரம் வரலாற்றுக் குறிப்பாகி இருக்கிறது.