கிருஷ்ண சரிதம் கேட்டால் என்ன லாபம்? 


கிருஷ்ண சரிதம் கேட்டால் என்ன லாபம் என்பது குறித்து, ஓர் அரசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அரசர் மந்திரியாரிடம் கேட்டார். மந்திரியாரும் பரீட்சித்து மகாராஜா சுகப்பிரம்ம முனிவர் மூலம் கண்ணன் கதையைக் கேட்டதால், ஆத்மஞானம் பெற்றதைக் குறிப்பிட்டார். மேலும், கிருஷ்ணர் கதைகள் ‘ஸ்ரீமத் பாகவதம்’ என்ற தொகுப்பாக உள்ளது; அதைப் படித்தாலே ஆத்மஞானம் கிட்டும் என்றார்.

அரசருக்கு, ஆத்மஞானம் பெற வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. உடனே, பாகவதம் தெரிந்த ஒரு பண்டிதரை அரண்மனைக்கு வரவழைத்து கிருஷ்ணர் கதைகளை கூறச்செய்ய உத்தரவிட்டார். மேலும், தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி ஊரில் இருக்கும் ஒரு பண்டிதர் அரண்மனைக்கு வந்து, அரசருக்கு கிருஷ்ணர் கதைகளைக் கூறிவந்தார். தினமும் அவருக்கு சன்மானமும் அளிக்கப்பட்டது.

2 மாதம் கழிந்தும், தனக்கு இன்னும் ஆத்மஞானம் கிட்டவில்லையே என்ற சந்தேகம் அரசருக்கு எழுந்தது. மறுநாள் கிருஷ்ணர் கதை கூறவந்த பண்டிதரிடம், “இதுவரை இன்னும் ஏன் எனக்கு ஆத்மஞானம் கிட்டவில்லை என்று இன்னும் 24 மணி நேரத்தில் கூறவேண்டும். இல்லையேல் உமக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்” என்றார்.

பண்டிதர் பயத்துடன் இல்லம் வந்து சேர்ந்தார். கவலையுடன் வந்த பண்டிதரைப் பார்த்த அவரது 10 வயது மகள், அவர் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டாள். பண்டிதர் விஷயத்தைக் கூறியதும், “இவ்வளவுதானா? நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை என்னை அரண்மனைக்கு அழைத்துச் செல்லுங்கள். கண்ணனே அதற்கு விடை தருவான்” என்றாள்.

பண்டிதருக்கு ஆச்சரியம். 10 வயது குழந்தையால் என்ன செய்ய முடியும்? இரவு உறக்கம் வராமல் தவித்தார் பண்டிதர். இருப்பினும் மறுநாள், குழந்தையுடன் அரண்மனைக்குச் சென்றார் பண்டிதர்.

மகளுடன் வந்த பண்டிதரைக் கண்ட அரசர், குழந்தை வந்ததன் நோக்கத்தைக் கேட்டார்.

“உங்களுக்கு விடையளிக்கவே வந்துள்ளேன் அரசே! உடனே 2 கயிறுகளைக் கொண்டு வாருங்கள். ஒரு கயிரை வைத்து உங்களைக் கட்ட வேண்டும். மற்றொரு கயிறால் என்னைக் கட்ட வேண்டும்” என்றாள் குழந்தை.

‘குழந்தை என்னதான் சொல்ல வருகிறாள்.. பார்ப்போமே’ என்று அரசரும் அதற்கு உடன்படுகிறார். காவலர்கள் வந்து அரசரையும் குழந்தையையும் வேறு வேறு தூண்களில் கட்டிப் போட்டனர்.

குழந்தை அரசரிடம், “மன்னா.. என் கட்டை அவிழ்த்துவிடுங்கள்” என்றாள். அரசர் உடனே, “நான்தான் கட்டப்பட்டுள்ளேனே. என்னால் எப்படி உன் கட்டை அவிழ்த்துவிட முடியும்?” என்றார்.

“ஆமாம் அரசே! இருவரும் கட்டப்பட்டிருந்தால் ஒருவரை ஒருவர் விடுவிக்க முடியாது. என் தந்தையும் குடும்பம் என்ற தளையால் கட்டப்பட்டுள்ளார். நீங்களும் ஆட்சி, பதவி, போகம் போன்ற பந்தத்தால் கட்டப்பட்டுள்ளீர்கள். பந்தங்களைத் துறந்த ஒருவரிடம் இருந்து, பந்தங்களைத் துறந்த ஒருவர் பாகவதம் கேட்டால் மட்டுமே, ஆத்மஞானம் சித்திக்கும். கண்ணன் கதையைப் படித்தால் மட்டும் போதாது. கண்ணனை அடைய பிறவற்றைத் துறக்க வேண்டும். பந்தங்களை விட்டுச் சற்று விலகி இருக்க வேண்டும்” என்று குழந்தை கூறினாள்.

குழந்தை கூறியதைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்தார் அரசர்.

இதனால், கிருஷ்ணன் கதைகளைப் படித்து, பந்தம், சுகபோகங்களில் இருந்து சற்று விலகினால் மட்டுமே, அவனை நெருங்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

கிருஷ்ணர் கதைகளைப் படித்து, அதன்படி செயல்பட்டால் என்ன கிடைக்கும்; அவனை சரண் புகுந்தால் என்ன லாபம் என்றால், ஆத்மஞானம் கிட்டும் என்பதே விடையாக இருக்கும்.

x