கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரி, தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரராகப் போற்றப்படுகிறார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட சாஹித்யங்களை இயற்றி, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, சரணாகதி தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
சத்புத்திரன் ஜனனம்
அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக, 18-ம் நூற்றாண்டில் காஞ்சி காமாட்சி அம்மனின் உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ பங்காரு காமாட்சி தேவி, தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேங்கடாத்ரி ஐயர் பங்காரு காமாட்சிக்கு ஆராதனைகள் செய்துவந்தார். அவரது மகன் விஸ்வநாத ஐயர், சிறந்த வேதாகம ஜோதிட நிபுணராக இருந்தார். விஸ்வநாத ஐயர் – வெங்கலட்சுமி தம்பதி, தினமும் ஸ்ரீகாமாட்சியை பூஜித்துவந்தனர். மேலும், தங்களுக்குக் குழந்தை வரம் வேண்டி, திருப்பதி வேங்கடேசப் பெருமாளை நினைத்து, ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையில் அந்தணர்களுக்கு உணவிட்டுவந்தனர்.
அப்போது ஒரு சனிக்கிழமை, இவர்களது இல்லத்தில் உணவருந்த வந்த ஒரு பெரியவர், “விரைவில் உங்களுக்கு ஒரு சத்புத்திரன் பிறப்பான்” என்று ஆசி வழங்கினார்.
அவரது ஆசியின்படி, 1762-ல், சித்திரை மாதம், கார்த்திகை நட்சத்திர தினத்தில் (26-04-1762) வெங்கலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வெங்கட சுப்பிரமணிய சர்மா என்று பெயர் சூட்டப்பட்டாலும் ‘சியாம கிருஷ்ணன்’ என்று செல்லப் பெயரிட்டு அழைத்துவந்தனர்.
சிறுவயதிலேயே சியாம கிருஷ்ணன், சமஸ்கிருதம், தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றார். அவ்வப்போது இம்மொழிகளில் சாஹித்யங்கள் இயற்றி வந்தார். விஸ்வநாத ஐயரின் உறவினரிடம், ஸரளி வரிசை முதல் ஸ்வர ஞானம் வரை கற்றுக் கொண்டார். தகுதிவாய்ந்த குருநாதரிடம் இருந்து ஸ்ரீவித்யா உபதேசத்தையும் பெற்றார்.
இசைப் பயிற்சி
தன்னை இசையில் முன்னேற்றிக்கொள்ளும் நோக்கத்துடன், தனது 18-வது வயதில் பெற்றோர், பங்காரு காமாட்சி விக்கிரகத்துடன், தஞ்சாவூருக்குச் சென்றார் சியாம கிருஷ்ணன்.
(16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் அந்நியர் படையெடுப்பால், காஞ்சியில் இருந்த காமாட்சி அம்மன் விக்கிரகத்துக்குப் புனுகு பூசி செஞ்சிக்குக் கொண்டுசென்றனர். 15 வருடங்களுக்குப் பின்னர் திருச்சி ஜமீந்தார் பராமரிப்பில் 60 வருடங்கள், ஆனைக்குடியில் 15 வருடங்கள், நாகூர், சிக்கல், விஜயபுரம், திருவாரூர் என்று 70 வருடங்கள் இருந்துவிட்டு, தஞ்சாவூரை அடைந்தார் காமாட்சி அம்மன்.)
1780-ல் தஞ்சை சரபோஜி மன்னரின் உதவியால், பங்காரு காமாட்சி அம்மனுக்கு, தஞ்சையில் கோயில் அமைக்கப்பட்டது. அங்கு பூஜைகள், ஆராதனைகள் செய்யும் பணிகளில் விஸ்வநாத ஐயர் ஈடுபட்டார்.
அப்போது வட தேசத்திலிருந்து வந்த ‘சங்கீத சுவாமி’ என்ற கர்னாடக சங்கீத விற்பன்னர், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு, தஞ்சை காமாட்சி கோயிலில் தங்கியிருந்தார். கோயிலில் பாடிய சியாம கிருஷ்ணனைப் பார்த்த சங்கீத சுவாமி, அவரைச் சீடராக ஏற்று, 4 மாதங்களுக்கு, சங்கீத லட்சிய, லட்சண விஷயங்களைப் பயிற்றுவித்தார். பின்னர், “சிறப்பாக விளங்குவாய். இனி பச்சிமீரியம் ஆதிப்பய்யரின் பாடல்களைக் கேட்டு மேலும் சில விஷயங்களை அறிந்துகொள்” என்று கூறி, அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துவிட்டு, காசி நகருக்கு யாத்திரை மேற்கொண்டார்.
300-க்கும் அதிகமான ஸாஹித்யங்கள்
அதன்படி அரச சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக இருந்த, ஆதியப்பரிடம் சென்று இசை பயின்றார் சியாம கிருஷ்ணன். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்டு மகிழ்ந்த ஆதியப்பர், ‘விரிபோணி’ எனத் தொடங்கும் தனது பைரவி ராக தான வர்ணத்தை, வீணையில் வாசித்துக்காட்டி, சங்கீத நுட்பங்களையும் ராகங்களின் சிறப்புகளையும் கமகங்களின் நுண்மைகளையும் விளக்கினார்.
சில காலம் கழித்து, பங்காரு காமாட்சியின் அருளால், ஸாஹித்ய நுட்பங்கள், இசைக் கற்பனைகள், தாள மடக்குகளை ஒன்றிணைத்து, ‘சியாமக் கிருஷ்ண’ என்ற நாம முத்திரையுடன் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் க்ருதிகள், ஸ்வரஜதிகள், தான வர்ணங்கள் முதலியவற்றை இயற்றினார். 300-க்கும் அதிகமான ஸாஹித்யங்களை இயற்றினார். இவற்றில் குறிப்பிடும்படியான சில பாடல்கள், மாஞ்சி (ப்ரோவவம்மா தாமஸமேல), கல்கட (பார்வதி நின்னு), கர்னாடக காபி (அகிலாண்டேஸ்வரி), சிந்தாமணி (தேவி ப்ரோவ) போன்ற அபூர்வமான ராகங்களில் அமைந்துள்ளன.
ஸாஹித்யங்களில் சில சிறப்புகளும் அமைந்துள்ளன. நின்னு வினாகமரி என்ற பூர்வி கல்யாணி ராக க்ருதி விலோம சாபு தாளத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, ‘தகிட தகதிமி’ என்ற முறையில் இல்லாமல், ‘தகதிமி தகிட’ என்ற முறையில் அமைந்திருக்கும். மேலும் பைரவி ராக ஸ்வரஜதியின் சரணங்கள், தொடக்க ஸ்வரங்கள், ஆரோகண ஸ்தாயி முறையில் அமைந்திருக்கும். சில க்ருதிகளில் ஸ்வராக்ஷரம் (ஸ்வரக் கோர்வையாகவே சில வார்த்தைகள் அமைக்கப்பட்டிருக்கும்) அமைந்துள்ளன.
பெரும்பாலான பாடல்கள் காமாட்சி மீதே அமைந்திருக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும், சில பண்டிகை நாட்களிலும் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் அமர்ந்துகொண்டு, தியானம் செய்யும்போது, சியாம கிருஷ்ணனின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். இதன்மூலம் அனைத்துப் பாடல்களிலும் சரணாகதி தத்துவம் விளக்கப்பட்டிருக்கும். தேவியே துணை என்று சரண் புகுந்தால், அனைத்துத் துன்பங்களையும் களைந்து, அவர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்துவார் பங்காரு காமாட்சி என்பதில் உறுதியாக இருந்தார் சியாம கிருஷ்ணன்.
இன்றும் பாடப்படும் பாடல்கள்
பங்காரு காமாட்சி அம்மன் மீது மட்டுமல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் மீதும் ஸாஹித்யங்கள் இயற்றியுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் மீது ஒன்பது க்ருதிகளால் ஆன ‘நவரத்ன மாலிகை’ என்ற தொகுப்பை இயற்றியுள்ளார். அவற்றில் சரோஜ தள நேத்ரி (சங்கராபரணம்), தேவி மீன நேத்ரி (சங்கராபரணம்), மரிவேறே கதி (ஆனந்த பைரவி) போன்றவை பிரபலம் அடைந்துள்ளன. காஞ்சி வரதராஜர்மீது பாடப்பெற்ற தான வர்ணமும், வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமிமீது இயற்றப்பட்ட ஸாஹித்யமும் பிரபலமடைந்துள்ளன.
மேலும் நின்னே நம்மினானு (தோடி), துருசுகா க்ருப ஜூசி (சாவேரி), பாஹி ஸ்ரீ கிரிராஜசுதே (ஆனந்த பைரவி), மரிவேரே கதி (ஆனந்த பைரவி), பாலிஞ்சு காமாட்சி (மத்யமாவதி) போன்ற சாஹித்யங்களும், எந்நேரமும் (பூர்வி கல்யாணி), எந்நேரமும் (புன்னாக வராளி), சந்ததம் (பரஸ் - கீதம்), பாராமுக (கல்யாணி), தருணம் ஈதம்மா (கௌளிபந்து) ஆகிய 5 தமிழ் சாஹித்யங்களும் இன்று இசைக் கச்சேரிகளில் பாடப்படுகின்றன.
புதுக்கோட்டை பிரஹன்நாயகி, திருவாடி தர்மசம்வர்த்தனி, நாகை நீலாயதாட்சி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் சியாம கிருஷ்ணன். நவரத்ன மாலிகையைப் பாடிய சியாம கிருஷ்ணனைப் பாராட்டி, ரசிகர் ஒருவர் யாளிமுக தம்புராவைப் பரிசளித்தார்.
சியாம கிருஷ்ணன், காதில் கடுக்கன் அணிந்து, ஜரிகை பஞ்சகச்சம், அங்கவஸ்திரத்துடன் வீபூதி, சந்தனம், குங்குமம் அணிந்துகொண்டு வீதிகளில் நடந்தால், அனைவரும் அவரது தோற்றத்தைப் பார்த்து, ‘காமாட்சி தாசர் சியாமா சாஸ்திரி செல்கிறார்’ என்று மிகுந்த மரியாதையோடு கூறுவார்கள். அதிலிருந்து ‘சியாமா சாஸ்திரி’ என்றே அழைக்கப்பட்டார்.
தக்க வயதில் சியாமா சாஸ்திரிக்குத் திருமணம் நடைபெற்றது. பஞ்சு சாஸ்திரி, சுப்பராய சாஸ்திரி ஆகிய இரு மகன்களில் பஞ்சு சாஸ்திரி, கோயில் கைங்கர்யங்களை மேற்கொண்டார்.
தியாகராஜர் – சியாமா சாஸ்திரி சந்திப்பு
சியாமா சாஸ்திரியைப் பற்றி கேள்வியுற்ற தியாகராஜரும், தியாகராஜரைப் பற்றி கேள்வியுற்ற சியாம சாஸ்திரியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ள விழைந்தனர். அதன்படி சியாமா சாஸ்திரி அடிக்கடி திருவையாறு சென்று தியாகராஜரைச் சந்தித்து, இசை நுணுக்கங்களை விவாதித்தும், ஒருவரது பாடல்களை மற்றவர் போற்றியும்வந்தனர். முத்துஸ்வாமி தீட்சிதரிடம், சுப்பராய சாஸ்திரி வயலின் கற்றுக்கொண்டார்.
போட்டிகளில் வென்றவர்
சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பொப்பிலியைச் சேர்ந்த கேசவய்யா என்ற சங்கீத வித்வான் தஞ்சை வந்திருந்தார். மற்ற வித்வான்களைப் போட்டிக்கு அழைத்து அவர்களைத் தோல்வியடையச் செய்வதில் அவர் வல்லவராக இருந்தார். அவரது அகங்காரத்தை அழிக்க எண்ணிய சியாமா சாஸ்திரி, போட்டிக்கு ஒப்புக்கொண்டார். காமாட்சி அம்மனின் அருளால் சியாமா சாஸ்திரி சிந்தாமணி ராகத்தில் அமைந்த ‘தேவி ப்ரோவ சமயமிதே’ ஸாஹித்யத்தைப் பாடி போட்டியில் வென்றார்.
மற்றொரு வித்வானான நாகப்பட்டினம் அப்புக்குட்டி பாகவதரும், சியாமா சாஸ்திரியைப் போட்டிக்கு அழைத்து, அவரிடம் தோற்றார். இருப்பினும் மைசூர் மன்னரிடம் சென்று, சியாமா சாஸ்திரியின் சங்கீத ஞானத்தைப் பற்றி கூறினார் அப்புக்குட்டி பாகவதர். சியாமா சாஸ்திரியை மைசூருக்கு வருமாறு அழைத்தார் மைசூர் மகாராஜா. தனக்கு அரச கனகாபிஷேகம் செய்விக்கப்படுவதை மறுத்த சியாமா சாஸ்திரி, கனக காமாட்சிக்கு சங்கீத அபிஷேகம் செய்யவே விரும்புவதாகக் கூறினார்.
சியாமா சாஸ்திரியின் மனைவி, காமாட்சி அம்மனிடம் வேண்டிக்கொண்டு ஒருநாள், இவ்வுலக வாழ்வை நீத்தார். அப்போது துக்கம் விசாரிக்க வந்த ஒருவரிடம், சியாமா சாஸ்திரி, “சாக அஞ்சு நாள்... செத்து ஆறு நாள்” என்று குறிப்பால் உணர்த்தினார். அதன்படி மனைவி இறைவனடி சேர்ந்த 6-வது நாள், (1827-ல் தை மாதம் சுக்லபட்சம் தசமி தினம் – 06-02-1827), ‘சிவேபாஹி காமாட்சி பரதேவதே’ என்று கூறியவாறு பங்காரு காமாட்சியின் திருவடிகளை அடைந்தார்.
சியாமா சாஸ்திரியின் நினைவைப் போற்றும் வகையில் இந்திய அரசின் அஞ்சல் துறை, ஒரு ரூபாய் மதிப்பிலான அஞ்சல் தலையை (21-12-1985) வெளியிட்டுள்ளது.