வாக்கு தவறாமை!


ஸ்ரீரங்கம் ராமானுஜர்

பக்தனின் நம்பிக்கை பொய்த்து விடக்கூடாது என்று நரசிம்மர் அவதாரம் எடுத்தார் நாராயணன் என்று கூறப்படுவதுண்டு. ‘இந்த தூணிலும் என் நாராயணன் இருப்பான்’ என்ற பிரகலாதனின் சொல், அதில் உள்ள நம்பிக்கை, ‘நாராயணன் இருப்பான், காப்பான்’ என்ற பக்தி இங்கு குறிப்பிடத்தக்கது. இதுபோல் இந்தச் சொல், நம்பிக்கை, பக்தி பற்றி, உடையவர் வாழ்வில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

உடையவர் ஸ்ரீரங்கம் கோயிலில் வலம் வந்த சமயம், மடப்பள்ளியில் ஏதோ விவாதம் நடப்பதுபோல் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்ற உடையவர் “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அதற்கு ஒருவர், “இங்கு கைங்கர்யம் செய்யும் ஒருவர், தனக்கு எப்போதும் தரப்படும் ஒரு பட்டை பிரசாதம் போதாது என்கிறார். அதிகம் வேண்டும் என்று கேட்கிறார். அப்படி கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை” என்றார்.

உடையவர் யோசிக்கிறார்: அவருக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது. கோயில் கைங்கர்யம் செய்யவே இவருக்கு நேரம் சரியாக இருக்கும். இனி குடும்பத்தை வேறு காக்க வேண்டும். இப்போது கொடுக்கப்படும் பிரசாதம் குடும்பத்துக்கு போதாது. ஆனால், இவர் ஒருவருக்காக கோயிலின் பொதுவிதியை மீறுவது சரியாக இருக்காது.

உடனே அவரிடம், “ரங்கன் காப்பாற்றுவார் என்று உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்று ராமானுஜர் கேட்கிறார்.

அவர் அதிர்ச்சியுடன், “உண்மைதான்...ரங்கன் மீது நம்பிக்கை இல்லையென்றாலும், நான் உங்களை நம்புகிறேன்” என்றார்.

ராமானுஜரும், “சரி நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறிச் செல்கிறார்.

இதற்குப் பிறகு சுமார் ஒரு வருடம் கழித்து, ராமானுஜரும் கோயிலில் கைங்கர்யம் செய்பவரும் எதிர் எதிரே சந்திக்கின்றனர்.

ராமானுஜருக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது: “இவரிடம் அன்று நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னோமே. அடடா! அப்படியே மறந்தே போனேனே” என்று வருத்தம் கொள்கிறார். அவரைப் பார்த்து, “எப்படி இருக்கிறீர்கள்?” என்று வினவுகிறார் ராமானுஜர்.

ராமானுஜரிடம் அவர், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீங்கள் அனுப்பும் பையன் தினமும் வந்து, தேவைக்கு அதிகமாகவே பிரசாதம் கொடுத்துவிட்டுப் போகிறான்… நன்றி சுவாமி” என்கிறார்.

“தினமும் வருகிறாரா…யார் அவர்?” என்று கேட்கிறார் ராமானுஜர்.

“ஆமாம். அவர் பெயர் ரங்கராஜன். தினமும் பிரசாதம் கொண்டு வந்து தருவார். சற்று காத்திருந்து கொண்டு வந்த தூக்கை வாங்கிக் கொண்டு செல்வார்” என்றார் அவர்.

ராமானுஜருக்கு அனைத்தும் புரிந்தது. தான் சொன்ன சொல் தனக்கே மறந்து விட்டது. இருப்பினும் தன் வாக்கை இறைவன் நிறைவேற்றி இருக்கிறான் என்று நினைத்து மகிழ்ந்தார்.

உடையவர் திருவடிகளே சரணம்! ஸ்ரீ ரங்கநாதன் திருவடிகளே சரணம்!

x