அஷ்டபுயக்கரம் – தல வரலாறு


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் இருந்து மேற்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது அஷ்டபுயக்கரம் தலம். எட்டுக் கைகளிலும் சக்கரம், வால், மலர், அம்பு, சங்கு, வில், கேடயம், கதை ஆகிய எட்டு ஆயுதங்களை இங்கு திருமால் ஏந்தியிருக்கிறார்.

இந்த தல வரலாற்றை அறிவோமா!

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற தலங்களில் இது 44-வது திவ்ய தேசம். சரஸ்வதி தேவியால் ஏவப்பட்ட காளி ரூபத்தையும், அரக்கர்களையும் மாய்த்தார் திருமால். மகாசந்தன் என்ற யோகிக்கு பூவுலக வாழ்க்கையை நிறைவு செய்து கொண்டு இறைவன் திருவடிகளில் சரண்புக விருப்பம் ஏற்பட்டது. இவர் இந்திரனுக்கு சமமான தகுதி பெற்றிருந்தார். தனது விருப்பம் ஈடேற திருமாலை நோக்கி தவம் புரிந்தார். இவரை போட்டியாக நினைத்ததால் இந்திரன் இவரது தவத்தைக் கலைக்க முற்பட்டான்.

முதல் அஸ்திரம் தேவலோக நடன மங்கைகள். இவர்களைப் பார்த்து எல்லாம் யோகி மயங்கிவிடவில்லை. இரண்டாவது அஸ்திரம், அவர் முன் யானைகளை ஆட்டம் போட வைத்தான். அசராமல் இருந்த யோகி, பிறகு தன்னிலை மறந்து யானையாகவே உருமாறி விட்டார். காடு காடாக பிற யானைகளுடன் சுற்றினார். ஒருநாள் சாளக்கிராம தீர்த்தத்தில் யானைகளுடன் நீராடிக் கொண்டிருந்தபோது, தன் சுயரூபம் நினைவுக்கு வந்தது. அப்போது அங்கு இருந்த மிருகண்டு முனிவர், காஞ்சிபுரம் சென்று வரதரை வணங்கினால் பழைய உருவம் கிடைக்கும் என்று ஆலோசனை கூறுகிறார்.

காஞ்சிபுரம் வந்த யானை (முனிவர்) தினமும் திருமாலுக்கு தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தது. ஒருநாள் தாமரை மலர்களைப் பறிக்கும்போது, குளத்தில் இருந்த முதலை ஒன்று யானையில் காலைப் பிடித்தது. அப்போது ஆதிமூலமே என்று யானை அலறியது. அப்போது திருமால் உடனே தனது சக்ராயுதத்தால் முதலையை வீழ்த்தி யானையை (முனிவரை) காப்பாற்றினார். மகாசந்தன் முனிவரும் தனது பழைய உருவைப் பெற்றார். இப்படி கஜேந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த தலம் இதுவாகும். திருமங்கையாழ்வார் இத்தல அலர்மேல் மங்கை தாயாரை தனியாகப் பாடல் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். பேயாழ்வார், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகர் இத்தல பெருமாளைப் பாடியுள்ளனர்.

ஓம் நமோ நாராயணாய!

x