சமயம் வளர்த்த சான்றோர் – 46: தாளப்பாக்கம் அன்னமய்யா


அன்னமய்யா

கவிஞர், அறிஞர், அன்னமய்யா என்று அழைக்கப்படும் தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா, தென்னிந்திய சங்கீத பாரம்பரியத்தின் அடையாளமாகப் போற்றப்படுகிறார். ராமானுஜரின் விசிஷ்டாத்வைத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, இறைவன் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாதவர் என்பதை உணர்த்தி, 32 ஆயிரம் சங்கீர்த்தனங்களை இயற்றியுள்ளார்.

கோவிந்தா... கோவிந்தா!

ஆந்திர மாநிலத்தின் ராயல்சீமா பகுதியில் ராஜம்பேட்டை அருகில் உள்ள தாளப்பாக்கம் கிராமத்தில், 14-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நாராயண சூரி – லட்சுமி அம்மாள் தம்பதி வசித்துவந்தனர். சைவ சமயத்தில் 'நந்தநாரிக' என்ற தெலுங்கு அந்தணர் குலத்தில் பிறந்திருந்தாலும், நாராயண சூரி, தாளப்பாக்கம் – சென்ன கேசவப் பெருமாளுக்கு சேவை செய்துவந்ததால், வைணவ சம்பிரதாயங்களையே மேற்கொண்டுவந்தார். பெண் குழந்தைகளுக்கு மத்தியில் தங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று இந்தத் தம்பதியர் திருமலைக்கு யாத்திரை சென்றனர்.

திருப்பதி கோயில்

திருமலை ஏழுமலையானின் அருளால், லட்சுமி அம்மாளுக்கு, 1408 மே 22-ல், அன்னமய்யா பிறந்தார். நாராயண சூரி குடும்பத்தினர் அனைவரும் ரிக்வேதிகளாக இருந்ததால், அன்னமய்யாவுக்கு இயல்பாகவே வேத பாராயணத்தில் ஈடுபாடு இருந்தது. மேலும், தாளப்பாக்கம் சென்ன கேசவப் பெருமாள் கோயில் சந்நிதியில் பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தங்களைக் கேட்டு, அவற்றைக் கற்றுக்கொண்டார் அன்னமய்யா. சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார். தந்தையுடன் சேர்ந்து, தாங்கள் பராமரித்துவந்த கோசாலையில், பசுக்களைப் பேணிப் பாதுகாத்துவந்தார்.

அன்னமய்யாவின் 8-வது வயதில், ஒருநாள், பசுக்களுக்கு சேவை புரியும்போது, கைவிரலில் காயம் ஏற்பட்டுவிடுகிறது. வலியால் துடித்த சமயத்தில், திருமலை செல்லும் பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கூறியபடி செல்வதைக் காண்கிறார். கோவிந்தா என்ற நாமத்தால் ஈர்க்கப்பட்ட அன்னமய்யா, அவர்களுடன் திருமலையை நோக்கி பயணித்தார். ஸ்ரீநிவாசமங்காபுரம் வழியே கல்யாண வெங்கடேஸ்வரரை தரிசித்துக்கொண்டு மலைப்பாதையில் அவர்களுடன் சென்றார். வெயிலின் கடுமையால் சோர்வுற்ற அன்னமய்யா, ஓரிடத்தில் அமர்ந்து கண்ணயர்ந்துவிட்டார்.

திருமலை செல்லும் படிக்கட்டுகள்...

வழிகாட்டிய அலமேலு மங்கை தாயார்

அப்போது கையில் தம்புராவுடன் ஒரு பெரியவர் (நாரதர்) வந்து, அன்னமய்யாவுக்கு அதை அளித்து, அதை மீட்டியபடி பாடிக்கொண்டே சென்றால், சோர்வு என்பதே வராது என்று அருள்கிறார். அரை மயக்கத்திலிருந்து எழுந்த அன்னமய்யா, தம்புராவை மீட்டி, ‘ஸ்ரீமன் நாராயணா’ என்ற பௌளி ராகக் கீர்த்தனையைப் பாடியபடி, மலைப்பாதையில் பயணிக்கிறார்.

மலையேறும் குழுவினர் யாரும் அன்னமய்யாவைப் பற்றி கவலைகொள்ளவில்லை. அன்னமய்யா வருவதற்கு முன்னரே, அவர்கள் கொண்டுவந்த உணவை உண்டுவிட்டதால், அன்னமய்யாவுக்கு உணவு கிடைக்கவில்லை. பசி மயக்கத்தில் அப்படியே மயங்கிவிடுகிறார். அப்போது ஒரு மூதாட்டி (அலுமேலு மங்கை தாயார்) வந்து, அன்னமய்யாவை எழுப்பி, உணவளித்து, திருமலைக்கு வழி கூறினார். அன்னமய்யாவும் மகிழ்ந்து வேங்கடமுடையானைப் போற்றி, மத்யமாவதி ராகத்தில் ‘அதிவோ அல் அதிவோ ஸ்ரீஹரிவாசமு’ என்ற கீர்த்தனையைப் பாடுகிறார்.

திருப்பதி கோயில்

மூதாட்டியுடன் அன்னமய்யாவைக் கண்ட, பக்தர்கள் குழுவினர், அன்னமய்யாவுக்கு மலைப்பாதைக்கு வழிகாட்டி அழைத்து வருமாறு மூதாட்டியிடம் கூறிவிட்டு முன்னர் செல்கின்றனர். மூதாட்டி, திருமலையின் மகிமையைக் கூற, அவற்றைக் கேட்டபடி, மலையேறத் தொடங்கினார் அன்னமய்யா. திருமலை கோயிலின் வாசலை நெருங்கியதும், மூதாட்டி அன்னமய்யாவைப் பார்த்து, “அதோ தெரிகிறது பார். அங்குதான் ஸ்ரீநிவாஸன் உறைகிறார்” என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு மறைந்துவிடுகிறார். அப்போதுதான், தனக்கு இவ்வளவு நேரம் வழிகாட்டியது, அலுமேலு மங்கை தாயார் என்பதை உணர்கிறார் அன்னமய்யா.

உடனே குறிஞ்சி ராகத்தில், ‘க்ஷீராப்தி கன்யகு ஸ்ரீமஹாலட்சுமிகினி’ என்ற கீர்த்தனையைப் பாடுகிறார். அப்போது பெரிய ஜீயரின் மடத்திலிருந்து வந்த ஒருவர் அன்னமய்யாவை அடையாளம் கண்டு, மடத்தைச் சேர்ந்தவர்களிடம் சிறுவன் அன்னமய்யாவை ஒப்படைத்தார். அன்னமய்யாவும் மடத்தில் இருந்து வந்த பாகவதர்களோடு சேர்ந்து திருவேங்கடவனை தரிசித்து மகிழ்ந்தார்.

துணைவியருடன் திருப்பதி பெருமாள்

ஜீயர் மடத்தில் சேவை


பெரிய ஜீயர் மடத்தைச் சேர்ந்த ஒருவர், ‘சரணு சரணு சுரேந்திர சந்நுத – சரணு ஸ்ரீஸதிவல்லபா’ என்ற ஆரபி ராகக் கீர்த்தனையைப் பாடியபடி இருந்த அன்னமய்யாவை அழைத்தார். “இங்கேயே இருக்கிறாயா?” என்று கேட்டதும், உடனே அதற்குச் சம்மதம் தெரிவித்த அன்னமய்யா, கோயில் பணிகளிலும், ஜீயர் மடத்தில் தூய்மை செய்தல், பூஜைக்குச் சந்தனம் அரைத்தல் போன்ற பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார்.

பொதுவாக, பஞ்ச சம்ஸ்காரம் (தாப, புண்ட்ர, நாம, யாக, மந்திரம்) செய்யப்பட்டு (ஹோமத்தீயில் பட்ட சங்கு, சக்கரங்கள், ஆச்சாரியரால், சீடர்களின் தோளில் பொறிக்கப்படும்) பன்னிரு இடங்களில் திருமண் காப்பு, தாஸ்ய நாமம் இடப்பட்டு மந்திர உபதேசம் செய்யப்பட்டால் மட்டுமே, இல்லங்களில் திருவாராதனம் செய்ய, வைணவர்கள் அனுமதிக்கப்படுவர். அன்னமய்யா குடும்பத்தினர் யாரும் இதுவரை வைணவ தீட்சை பெற்றவர் இல்லை. தானும் அனைத்து கைங்கர்யங்களையும் இறைவனுக்குச் செய்ய, தகுதி பெற வேண்டும் என்று விருப்பம் கொண்டு, வேங்கடவனிடம் பிரார்த்தனை செய்கிறார் அன்னமய்யா.

திருப்பதி திருமஞ்சனம்

வேங்கடவனை நினைத்து, ‘வைஷ்ணவலு கானி வாரலெவ்வருவேரு’ என்ற ரீதிகௌளை ராகக் கீர்த்தனையைப் பாடுகிறார் அன்னமய்யா. மேலும், பேகடா ராகத்தில், ‘நீகதாம்ருதமு நிரதஸேவனநாது’ என்ற கீர்த்தனையையும் பாடுகிறார். அன்னமய்யாவின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த திருவேங்கடவன், ‘கணவிஷ்ணுவாசார்யர்’ என்ற ஆச்சாரியரின் கனவில் தோன்றி, சிறுவன் அன்னமய்யாவுக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, தாஸமரபில் ஏற்று விசிஷ்டாத்வைத கொள்கைகளை அருளப் பணித்தார். அவ்வாறே ஆச்சாரியரும் அன்னமய்யாவை அழைத்துவரச் செய்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, ‘ராமானுஜதாஸன்’ என்ற தாஸ்ய நாமத்தை அளித்து, மந்திர உபதேசமும் செய்வித்தார். அன்று முதல் அன்னமய்யா, ஜீயர் மடத்தில் திருப்பணி, கோயில் கைங்கர்யங்களுடன், குரு சேவையும் செய்துவந்தார். மனமகிழ்ச்சியுடன், ‘மூமே மாடலு மூண்ட்லு தொம்மிதி வேடுகோனி’ என்ற சங்கராபரண கீர்த்தனையைப் பாடிவந்தார். கணவிஷ்ணுவாச்சார்யரிடம் இருந்து திருவாய்மொழி முதலியவற்றைக் கற்றறிந்தார்.

அன்னமய்யா

வேங்கடவன் தாஸன்

இந்நிலையில், சிறுவன் அன்னமய்யாவைக் காணாது, அனைத்து இடங்களிலும் தேடுகிறார் நாராயண சூரி. திருவேங்கடவனிடம் முறையிடுவதற்காக, நாராயண சூரியும் லட்சுமி அம்மாளும் திருமலை வந்த சமயத்தில், அன்னமய்யா அங்கு இருப்பதை அறிந்து, அங்கு செல்கின்றனர். குருநாதரின் சம்மதத்துடன் அன்னமய்யாவைத் தாளப்பாக்கம் அழைத்து வருகின்றனர். பெற்றோருடன் இருந்தாலும் வேங்கடவன் தாஸனாகவே அன்னமய்யா இருந்தார். அதன்படி தாளப்பாக்கம் பெருமாளுக்குக் கைங்கர்யங்கள் செய்து வந்தார். அன்னமய்யாவின் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்த திருவேங்கடவன் தேவியருடன் காட்சியளித்து அருள்பாலித்தார்.

8 ஆண்டுகளுக்குப் பின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க, திம்மக்கா, அக்கலம்மா என்ற கல்வியில் சிறந்த இரு பெண்களை மணந்தார் அன்னமய்யா. பகவத் ராமானுஜர் 106 திருப்பதிகள் பலவற்றில் ஈடுபாடு கொண்டதுபோல் அன்னமய்யாவும் பல வைணவத் திருப்பதிகளில் பக்தி கொண்டிருந்தார். அஹோபில நரசிம்மர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

பாமரர்களுக்கான பாடல்கள்

கானடா ராகத்தில், ‘அன்னி சோட்ல ப்ரமாத்மா’, காபி ராகத்தில், ‘நகு மொகமு தோடிவோ நரகேஸரி’ ஆகிய கீர்த்தனைகளைப் பாடியதும், அன்னமய்யாவின் மனைவி மக்களும், அவற்றைச் செப்பேட்டில் வடிவெடுத்து பிரபலப்படுத்தினர். இப்படியே தொடர்ந்து 32 ஆயிரம் கீர்த்தனைகளை அன்னமய்யா இயற்றியிருந்தாலும், 14,438 கீர்த்தனைகள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. இந்தச் செப்பேடுகள், பல நாட்கள் புழக்கத்தில் இல்லாது இருந்து, கிபி 1816-ல் ஏ.டி.கேம்பெல் என்ற ஆங்கிலேயரால் கண்டெடுக்கப்பட்டன. (அன்னமய்யாவின் பாடல்கள் பலவற்றை, கூட்டமாகக் கூடி மலையேறும் பக்தர்கள் பாடிச் செல்வதால் இவை பாமரப் பாடல்களாகப் போற்றப்படுகின்றன.)

அன்னமய்யாவின் கீர்த்தனைகளில் தன்னை மறந்த சிற்றரசன் சாளுவ நரசிம்மன், தன்னையும் புகழ்ந்து பாட வேண்டும் என்று அன்னமய்யாவுக்கு உத்தரவிட்டார். இறைவனைத் தவிர யாரும் தன் பாட்டுடைத் தலைவனாக முடியாது என்று மறுத்ததால், அன்னமய்யாவைச் சங்கிலிகளால் கட்டிச் சிறைவைக்கிறார் சாளுவ நரசிம்மன்.

திருப்பதி கோயில்

அப்போது, கன்னடகௌளை ராகத்தில், ‘கருணாநிதிம் கதாதரம் சரணாகத வத்ஸலம்’, ஹிந்தோளம் ராகத்தில் ‘கொண்ட லலோ நெலகொன்ன கோனேடி ராயடுவாடு’ ஆகிய கீர்த்தனைகளைப் பாடி, ராமானுஜர், கூரத்தாழ்வார், திருமங்கையாழ்வாரைக் காத்ததுபோல் தன்னையும் காக்க, காஞ்சிபுரம் ப்ரணதார்த்திஹர வரதராஜப் பெருமாளை வேண்டினார் அன்னமய்யா. அன்னமய்யா பாடி முடித்ததும், சங்கிலிகள் தளர்ந்தன. விவரம் அறிந்த சிற்றரசன், மன்னிப்பு கோரியதுடன் அன்னமய்யாவுக்குத் தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார். அன்றுமுதல் அரசர், தனவான் சகவாசம் தவிர்த்தார் அன்னமய்யா.

திருமலையில், அலமேலு மங்கை தாயாரின் தந்தை ஸ்தானத்தில் இருந்து பலமுறை திருக்கல்யாண வைபவங்களை நிகழ்த்தியுள்ளார். தனது இறுதி நாட்களைத் திருமலையிலும், தாளப்பாக்கத்திலும் கழித்த அன்னமய்யா, 95-வது வயதில் (04-04-1503) திருவேங்கடவன் திருவடிகளைச் சேர்ந்தார்.

அன்னமய்யா ஜெயந்தி, வர்தந்தி தினங்களில், பல்வேறு அமைப்புகள், பல இடங்களில் அன்னமய்யாவின் சங்கீர்த்தனங்களைப் பாடி இசை அஞ்சலி செலுத்துவது இன்றும் நடைபெறுகிறது.

பெட்டிச் செய்திகள்

1. அன்னமய்யாவின் படைப்புகள்

சம்ஸ்கிருதத்தில் ‘சங்கீர்த்த லட்சணம்’, ‘வெங்கடாசலபதி மஹிமா’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் 12 சதகங்களை (ஒரு சதகம் 100 பாடல்களைக் கொண்டது) படைத்துள்ளார். இதில், ‘வெங்கடேஸ்வர சதகம்’ என்ற நூல் மட்டும் கிடைத்துள்ளது. தெலுங்கில் இவர் படைத்த ‘த்விபர்த ராமாயணா’, ‘ஸ்ருங்கார மஞ்சரி’ ஆகியன தெலுங்கு இலக்கியத்தில் முக்கிய நூல்களாகப் போற்றப்படுகின்றன.

2. குடும்பத்தினரின் இசைத் தொண்டு

அன்னமய்யாவின் மனைவி திம்மக்கா, ‘சுபத்ரா கல்யாணம்’ என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், தெலுங்கு இலக்கியத்தில் முதல் பெண் புலவராக, திம்மக்கா போற்றப்படுகிறார். அன்னமய்யாவின் மகன் பெரிய திருமலையும், பேரன் சின்னய்யாவும் தென்னிந்திய சங்கீதத் துறைக்கு ஆற்றிய பங்குகள் போற்றப்படுகின்றன.

x