சமயம் வளர்த்த சான்றோர் – 45: ஸ்ரீ சமர்த்த ராமதாஸர்


ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டினாலும், அரசியலிலும் ஈடுபட்டு, அந்நியர்களின் தாக்கத்தால் இந்து கலாச்சாரம் சீரழிவதைத் தடுத்து நிறுத்திய ஆச்சாரியர் ஸ்ரீ சமர்த்த ராமதாஸர். ஆஞ்சநேயரைப் போற்றி அவர் மூலமாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தரிசித்த இவர், மராட்டியத்தின் ஐம்பெரும் மகான்களில் (ஞானதேவர், நாமதேவர், ஏகநாதர், துக்காராம்) ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் சந்த் துக்காராம் காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறுப்பை உணர்ந்த வால் பையன்

கோதாவரி ஆற்றின் கரையில், ஜல்னா மாவட்டம், அம்பாத் தாலுகா ஜம்ப் கிராமத்தில், 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜமாதா கோத்ராவின் தேசஸ்தா ருக்வேதி அந்தண குலத்தைச் சேர்ந்த சூர்யாஜி பந்த் – ராணுபாய் தம்பதி வசித்துவந்தனர். கங்காதரன் என்ற முதல் மகனுக்குப் பிறகு, 1608-ல் இத்தம்பதிக்கு, சிறிய வாலுடன் நாராயணன் என்ற மகன் பிறந்தார்.

சிறுவயதில், ‘வால் பையன்’ போல் மரங்களில் ஏறுவதும், குளத்தில் குதித்து நீந்துவதும், குறும்பு செய்வதுமாக இருந்த நாராயணனின் புத்திக்கூர்மை அனைவரையும் வியக்க வைத்தது. 7 வயது ஆனதும் நாராயணனுக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. சூர்யாஜி இறைவனடி சேர்ந்தார். கங்காதரனுக்குத் திருமணம் ஆனது. நாராயணன் இப்படி பொறுப்பில்லாமல், நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிவதைக் கண்டு தாயின் உள்ளம் வருத்தத்தில் ஆழ்ந்தது.

ஒருநாள், ராணுபாய், நாராயணனை அழைத்து, “எப்போது பொறுப்புள்ளவனாக மாறுவாய்? ஏதாவது தொழில் செய்து பொருள் ஈட்ட வேண்டாமா? குடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.

தாயின் சொற்கள் நாராயணனுக்குப் புரியவில்லை. இருப்பினும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. யோசித்தவண்ணம், குளக்கரையை அடைகிறார். அங்கிருந்த விவசாயிகளுக்கு நெல் மூட்டைகளைத் தூக்கிக் கொடுத்து உதவினார்.

நாட்கள் செல்லச் செல்ல, நாராயணனின் குறும்புகள் குறைகின்றன. ஓர் அறையில் தனியே அமர்ந்து, அதிக நேரம் தியானத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தார். இறைவனைப் பற்றிய சிந்தனையே மேலோங்கியது. 12 வயதில் நாராயணனுக்கு திருமணம் செய்விக்க, பெற்றோர் ஏற்பாடுகளைச் செய்தபோது, அந்த இடத்தைவிட்டு யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட்டார்.

ராமபிரானை நோக்கி தவம்

ஊரைவிட்டு காட்டை அடைந்த நாராயணன், ஒரு மறைவிடத்தைத் தேர்ந்தெடுத்து, (நாசிக் நகரம்) அங்குள்ள குகையில் அமர்ந்து, பசி, தாகம், சோர்வு, உறக்கம் எதையும் பொருட்படுத்தாமல், ராமபிரானை நினைத்து உருகி, ராம நாமத்தை உச்சரித்தபடி தியானத்தில் ஆழ்ந்தார்.

நாட்கள், மாதங்கள், வருடங்கள் உருண்டோடின. பல காலம் ஆகியும் ராமச்சந்திர மூர்த்தி, நாராயணனுக்கு தரிசனம் தரவில்லை. இதற்கான காரணம் புரியாமல் தவித்தபோது, நாராயணனுக்கு ராமபக்த ஆஞ்சநேயர் நினைவுக்கு வந்தார். ராமச்சந்திர மூர்த்தியை தரிசனம் செய்ய ஆஞ்சநேயரே வழி செய்து கொடுப்பார் என்று எண்ணி, ஆஞ்சநேயரை நினைத்து தவம் மேற்கொண்டார் நாராயணன். அப்படி ஆஞ்சநேயர் அருள்பாலிக்கவில்லை என்றால், உயிரை மாய்த்துக்கொள்வது உறுதி என்று சங்கல்பம் செய்துகொண்டார்.

பகீரதனைப் போல் தவத்தில் ஆழ்ந்தார் நாராயணன். பல நாட்கள் கழித்து ஆஞ்சநேயர், நாராயணனுக்கு தரிசனம் கொடுத்தார். ‘அனுமனின் அருள் இல்லையென்றால் ஹரியின் அருள் இல்லை’ என்ற மத்வ சித்தாந்தத்துக்கு ஏற்ப, ஆஞ்சநேயரின் அருள்கிட்டியதால், பெருமகிழ்ச்சி அடைந்தார் நாராயணன். உடனே அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, தனக்கு ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் கிட்ட வழிகாட்ட வேண்டும் என்று வேண்டுகிறார். “நீ எனது அம்சமாகத் தோன்றியவன். வா என்னுடன்” என்று நாராயணனிடம் கூறிய ஆஞ்சநேயர், அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அன்று ஸ்ரீராம நவமி என்பதால், பஞ்சவடி ராமர் கோயில் கோலாகமாக இருந்தது. பக்தர்கள் அனைவரும் ‘ராம் ராம்’ என்று ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர். மாருதியும் நாராயணனும் நாம சங்கீர்த்தனத்தில் மெய்மறந்தனர். கோயில் மூடப்படும் சமயம் ஆஞ்சநேயர், கோயில் கருவறைக்குள் நுழைந்து, நாராயணனுக்கு அருள்பாலிக்க, ராமபிரானை வேண்டுகிறார்.

ராமநாம மந்திர தீட்சை

ஆஞ்சநேயரின் வேண்டுதலை ஏற்ற ராமபிரான், நாராயணனின் தலைமீது கைவைத்து, அவரது செவியில் ராமநாம தாரக மந்திரத்தை உபதேசித்து, “இன்று முதல் நீ, சமர்த்த ராமதாஸர் என்று அழைக்கப்படுவாய். பக்தியைப் பிரச்சாரம் செய்து, மக்களை நல்வழிப்படுத்துவாய். அரசரும் உன் பல்லக்கைச் சுமக்கும் பேறு பெறுவாய்” என்று அருள்கிறார்.

ராமநாம மந்திரம் காதில் விழுந்ததும், நாராயணன் கண்முன்னர் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீதாப் பிராட்டி, இளைய பெருமாள் லட்சுமணரும் தோன்றினர். மூவரின் தரிசனம் கிடைத்ததும் தன்னை மறந்த நிலையில் இருந்த நாராயணன், ஆஞ்சநேயரின் கைகளைப் பற்றி, “அனைத்துக்கும் தாங்களே காரணம். தாங்கள் எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று வேண்டுகிறார்.

அங்கிருந்து புறப்பட்ட ஆஞ்சநேயரும், ராமதாஸரும் சாங்க்லீ என்ற நகரை அடைகின்றனர். ராமநாமத்தை உச்சரித்தபடி இருவர் வருவதைக் கண்டு, அவ்வூர் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். அங்கேயே தங்கியிருந்தபடி ராமதாஸர், நாமசங்கீர்த்தனம் செய்துவந்தார். தினமும் உஞ்சவிருத்தி செய்து அதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு, தானும் உண்டு, மற்றவர்களுக்கும் அளித்து மகிழ்ந்தார்.

ராமதாஸரிடம் இசை பயில நிறைய சீடர்கள் வந்தனர். சாங்க்லீயில் ராமச்சந்திர மூர்த்திக்குக் கோயில் கட்ட எண்ணிய, ராமதாஸர், அதை நிறைவேற்றினார். அவரது பிரதம சீடர் உத்தவரை, கோயில் அர்ச்சகர் ஆக்கினார்.

அங்கிருந்து கிளம்பிய ராமதாஸர், ஜாரட், மஹாலி போன்ற தலங்களுக்குச் சென்று கிருஷ்ணா நதியில் நீராடினார். மஹூர்காட்டில் தத்தாத்ரேய தரிசனம் கிடைத்தது. பண்டரீபுரத்தில் பாண்டுரங்கன் ஸ்ரீராமராக தரிசனம் அளித்து அருள்பாலித்தார். பிறகு, காசி, அயோத்தி, பிரயாகை, பிருந்தாவனம் என்று பல தலங்களுக்குச் சென்றார் ராமதாஸர்.

ஆஞ்சநேயரை நினைத்து ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் பெற விரும்பினார். ராமபிரானை மீண்டும் காண விரும்பினால், ராம நாமத்தை மூன்றரை கோடி முறை உச்சரிக்க வேண்டும் என்று கூறி மறைகிறார், ஆஞ்சநேயர்.

அதன்படி, கிருஷ்ணா நதிக்கரையில், 12 ஆண்டுகள் அமர்ந்து ராமநாமத்தை உச்சரிக்கிறார் ராமதாஸர். அதன்பலனாக ராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். பிறகு, தினம் உஞ்சவிருத்தி செய்வதும், நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபடுவதும், சீடர்களுக்கு உபதேசம் செய்வதும், அவ்வப்போது அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதும் தொடர்கிறது. வாராணசியில் ஹனுமான் காட் பகுதியில் ஆஞ்சநேயருக்குக் கோயில் அமைத்தார் ராமதாஸர்.

சத்ரபதி சிவாஜி சந்திப்பு

ஒருசமயம் சத்ரபதி சிவாஜி, காட்டுக்கு வேட்டையாட வரும்போது, ஓரிடத்தில் ஓர் உத்தமர் தியானத்தில் ஆழ்ந்திருப்பதைக் காண்கிறார். அப்போது அவரைச் சிரமப்படுத்த வேண்டாம், நாளை காலை அவரை தரிசிக்கலாம் என்று நினைத்து திரும்புகிறார் சிவாஜி.

வேட்டையில் இருந்து திரும்பும்போது, எழுதப்பட்ட சில ஓலைகள், கிருஷ்ணா நதியில் மிதந்து வருவதைக் காண்கிறார் சத்ரபதி சிவாஜி. ஓலைகளில் மராட்டிய மொழிகளில் எழுதப்பட்ட கவிதைகளைப் படித்ததும், அவற்றை எழுதியது, தான் கானகத்தில் பார்த்த மகானாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்.

அரசவைக்குச் சென்று அந்தக் கவிதைகளை, அனைவருக்கும் படித்துக் காட்டுகிறார் அரசர். இப்படி தினம், அந்த மகானைக் காணச் செல்வதும், ஆனால் தரிசிக்க முடியாமல் திரும்புவதும் தொடர்கிறது. ஒருசமயம் சத்ரபதி சிவாஜி செல்லும் சமயத்தில், ராமதாஸர் தியானம் கலைந்து அமர்ந்திருந்தார். சத்ரபதி சிவாஜி அவரிடம் சென்று, “ஸ்வாமி! எனக்கு அஞ்ஞானம் ஒழித்து மெய்ஞானம் உண்டாவதற்கு அருள் செய்ய வேண்டும்” என்கிறார்.

ஆனால், ராமதாஸரோ, தான் அதற்குத் தகுதியானவர் அல்லர் என்றும் வேறு குருவைத் தேடி அடைய வேண்டும் என்றும் கூறுகிறார். அதற்கு உடன்படாத மன்னர், “நான் தங்களையே குருவாக மனதில் நினைத்துவிட்டேன். அனைத்து உலகங்களிலும் குருவே முதன்மையானவர். எனவே, தயைகூர்ந்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டுகிறார்.

மன்னரின் வேண்டுகோளை ஏற்ற ராமதாஸர், அவருக்கு ராமநாம மந்திரத்தை உபதேசிக்கிறார். உபதேசம் பெற்ற மன்னர், “இனி இந்த உடல், பொருள், ஆவி யாவும் தங்களுக்கே உரியது. அதன்படி, இந்த நாட்டு மக்களை நல்வழிப்படுத்துவது உங்கள் பொறுப்பு” என்கிறார்.

சமர்த்த ராமதாஸர் மன்னரிடம், “என் பிரதிநிதியாக நீயே இந்த நாட்டை ஆள வேண்டும். நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, இனி ‘ராம் ராம்’ என்று கூறிய பிறகே பேச்சைத் தொடங்க வேண்டும்” என்று கட்டளையிடுகிறார்.

ராமதாஸரின் கட்டளையை சிரமேற்கொண்டு செயல்படுத்தினார் மன்னர். ராமதாஸரை நாட்டின் அரசராக்க எண்ணிய சிவாஜி, அவருக்காக மரத்தடியில் ஆசனம் அமைத்து வணங்கினார். இந்த சமயத்தில் ஓர் அரசியல் நூலை எழுதி, மன்னரிடம் அளிக்கிறார் ராமதாஸர். அதற்கு ‘தாஸ போதம்’ என்று மன்னர் பெயரிடுகிறார். அதில் ராஜ நீதி, தர்ம சாஸ்திரம், நீதிநெறிகள் அமைந்திருந்தன. அதை தினம் படித்து, ராஜ நீதியை மேற்கொண்டார் மன்னர் சிவாஜி. பல தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட ராமதாஸர், 1677-ல் ராமேசுவரத்துக்கு செல்லும் வழியில், மன்னார்குடியில் தங்கினார்.

ராமநாமத்தை எப்போதும் உச்சரிக்கலாம் என்று ராமதாஸர் உபதேசித்த ராம மந்திரம், ‘ராம திரபோதசாக்ஷரி’ என்று போற்றப்படுகிறது. பக்தர்கள் புடைசூழ, ராம மந்திரத்தை உச்சரித்தபடி, 1681-ல் ஸ்ரீராம நவமி அன்று சஜ்ஜன்காட் கோட்டையில் ராமச்சந்திர மூர்த்தியின் திருவடிகளை அடைகிறார் சமர்த்த ராமதாஸர். அங்கு அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது!

x