மாதுளை முத்துகளும் பெண் குழந்தையும்: லட்சுமி கடாட்சம்!


ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமி ஸ்தோத்திரம் படித்து, மகாலட்சுமிக்கு மாதுளை முத்துகளால் அர்ச்சனை செய்வது சிறப்பு.

லட்சுமி ஸ்தோத்திரத்தில் லட்சுமியை அன்ன லட்சுமி, அலங்கார லட்சுமி, அபூர்வ லட்சுமி, ஆதி லட்சுமி, இஷ்ட லட்சுமி, ஈகை லட்சுமி, உண்மை லட்சுமி, ஊர்ஜித லட்சுமி, எட்டு லட்சுமி, ஏக லட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, ஒற்றுமை லட்சுமி, ஓம்கார லட்சுமி, ஔபாஷன லட்சுமி, கருணை லட்சுமி, சந்தான லட்சுமி, ஞான லட்சுமி, தர்ம லட்சுமி, நவ லட்சுமி, வைர லட்சுமி, பவள லட்சுமி, மாணிக்க லட்சுமி, ஸ்வர்ண லட்சுமி, யோக லட்சுமி என்று உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் தொடங்கி அர்ச்சனை செய்வது வழக்கம். 108 லட்சுமிகள் இருப்பார்கள். நமக்கு உயிராகவும் மெய்யாகவும் இருக்கிறாள்.

பத்மாட்சன் என்ற அரசன், திருமால் பக்தனாக இருந்தான். ஒருநாள் காட்டுக்குச் சென்று தவம் செய்யத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவனுக்கு வரம் அளிப்பதாகக் கூறினார். அரசனும் தனக்கு மகாலட்சுமி தாயார், மகளாகப் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறான். திருமால் அவனிடம் ஒரு மாதுளம் பழத்தைக் கொடுத்து, உனது எண்ணம் ஈடேறும் என்று அருள்பாலிக்கிறார். அந்த மாதுளம் பழம் பெரிதாக வளர்ந்தது. அதை உடைத்துப் பார்த்தால் ஒரு புறம் மாதுளை முத்துகள். மறுபுறம் அழகான பெண் குழந்தை. செந்தாமரை போன்ற முகம் கொண்டதால் அந்தக் குழந்தைக்கு 'பத்மை' என்று பெயர் சூட்டினான் அரசன்.

மாதுளம் பழத்தில் இருந்து லட்சுமி தோன்றியதால், மாதுளை செடி இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்றார். அந்த மாதுளம் பூ நிறத்தாளைப் போற்றி மகிழ்வோம்!

x