மானுடத்தை நேராக்கிட புத்தர் நாற்பத்தைந்து ஆண்டுக்காலம் பணியாற்றினார். எண்பத்து நான்காயிரம் சொற்பொழிவுகள் ஆற்றியிருப்பதாக அவரின் முதன்மைச் சீடர் ஆனந்தர் பதிவு செய்துள்ளார்.
பகைவனை நேசிக்கும் பண்பும், வெறுப்பவரின் வெறுப்பை அறுக்கும் அன்பும் காட்டும் பாடல்களைக் கொண்ட புத்தரின் அழகிய வாழ்க்கைக் கோட்பாடுகளே ’தம்மபதம்’.
அந்தச் சொற்பொழிவுகள் எல்லாம் மூன்று பூக்கூடைகளாக உருவகிக்கப்பட்டு ‘திரிபிடகம்’ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ’சுத்த பிடகத்தில்’ குந்தக நிகாயத்தில் உள்ள இருபத்தைந்து நூல்களில் ஒன்று ’தம்மபதம்’.
தம்மபதம் உலகில் உள்ள பலமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று. ஆங்கிலத்தில் மட்டும் நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. மாக்ஸ்முல்லர் முதல் ஓஷோவரை விதந்தோதிய அற்புத கருத்துப் பெட்டகம் அது. ஜெர்மன் மொழியில் புத்தர் வரலாற்றை எழுதிய ஹெர்மன் ஓல்டன்பர்க் “தம்மபதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம் அது” என்றார்.
புத்தரின் போதனைகளைப் புரிந்துகொள்ள மறுத்து அவரை அவமானப்படுத்தியவர்களிடமும் அவர் எப்போதும் கோபத்தை முன்வைக்காதவர். அவரின் பொறுமையும், அன்பும், கற்பிக்கும் திறனும் வேறெந்த ஆசிரியரிடமும் காணக்கிடைக்காத அற்புத குணங்கள்.
’தம்மபதம்’ பாலி மொழியில் கவிதைத்தன்மை வாய்ந்த உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் நிறைந்து காணப்படும் வாழ்வியல் வளம். மனத்தைப் பண்படுத்துவதன் மூலம் மனித வாழ்வைப் பண்படுத்திட முடியும் என்னும் உத்தரவாதத்தை வாரி வழங்கும் வற்றாத வளம் பொருந்தியது புத்தரின் தத்துவ சிந்தனைகள்.
’தம்மபதம்’ மனிதர்களின் அடிப்படை உணர்வுகளைப் பேசுவதால், அது எல்லோரையும் உள்ளடக்கி ஈர்க்கும் சக்தி கொண்டதாக எப்போதும் விளங்குகிறது.
காலத்தின் எல்லைக் கோடுகளைக் கடந்து அது பயணிக்கும் தூரம் என்பது மனித விழுமியம் இருக்கும்வரை இருக்கும் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் நம்மிடம் ஏராளம் இருக்கின்றன. புத்தர் அதிகமான மனிதத் தன்மையோடு தன் தம்மத்தைப் பரப்பியவர். அந்தக் காலத்தில் வேரூன்றி இருந்த பல்வேறு மனித வேறுபாடுகளைக் கடந்து அவர் எப்போதும் எளிய மனிதர்களோடும் மிகச்சாதரணமாகப் பழகியவர். காடுகளிலும் இயற்கைச் சோலைகளிலும் தங்கி அவற்றை தன் போதனைகளுக்குக் கருவிகளாக்கியவர். சுற்றுச்சூழலிருந்து வாழ்க்கைக்கானக் கற்றல் பொருட்களை உருவாக்கியவர்.
அவரைப்போல ஒரு மிகச்சிறந்த ஆசிரியர் இருக்கமுடியாது. அவருடைய போதனைகளைப் புரிந்துகொள்ள மறுத்து அவரை அவமானப்படுத்தியவர்களிடமும் அவர் எப்போதும் கோபத்தை முன்வைக்காதவர். அவரின் பொறுமையும், அன்பும், கற்பிக்கும் திறனும் வேறெந்த ஆசிரியரிடமும் காணக்கிடைக்காத அற்புத குணங்கள்.
வயிறு நிறையச் சோறும் கைநிறைய பணமும் இருந்தாலும் நிறைவு அடையாத வாழ்வை என்ன செய்யப்போகிறது மானிடம்!?
இந்திய மெய்யியலின் அடிப்படை அன்பு என்னும் ஊற்றிலிருந்தே ஆரம்பிக்கிறது என்பதை எல்லா சூழ்நிலைகளிலும் அவர் வெளிப்படுத்தினார். அதன்மூலம் உலக மக்களின் பேரன்பை அவரால் பெறமுடிந்தது. மனிதக்குலம் தன்னுடைய துயரத்திலிருந்து வெளியேறி நிப்பாணத்தை (விடுதலை) அடைய அவர் காட்டிய ஒழுக்க நெறி (சீலம்) மனத்தை ஒருமுகப்படுத்தும் அல்லது சமநிலைப்படுத்தும் தியானம் (சமாதி), அறிவின் இறுதி நிலையான ஞானம் (பன்னா) ஆகிய மூன்றும் நம் வாழ்வின் சிக்கல்களை அவிழ்த்து துயரற்ற வாழ்வை அடைவதற்கான வழிகள்.
இவற்றை மிக எளிமையாக மக்களிடம் எடுத்துச் செல்லும் வழிதான் ’தம்மபதம்’. உலகின் பேரன்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் சொற்களால் ஆனது. பகைவனை நேசிக்கும் பண்பும், வெறுப்பவரின் வெறுப்பை அறுக்கும் அன்பும் காட்டும் பாடல்களைக் கொண்ட புத்தரின் அழகிய வாழ்க்கைக் கோட்பாடுகளே ’தம்மபதம்’.
வாழ்வை மகிழ்ச்சிக்கான ஒன்றாக மாற்றிவிடுவதும் அறிவும் அறமும் ஒன்றிணைந்த போக்கில் வாழ்வின் வழி செல்வதும் தவிர வேறென்ன இந்த மானுடம் கேட்கிறது. வயிறு நிறையச் சோறும் கைநிறைய பணமும் இருந்தாலும் நிறைவு அடையாத வாழ்வை என்ன செய்யப்போகிறது மானிடம்!?
அந்த நிறைவை வேறெங்கும் தேடாமல் தனக்குள்ளே தோண்டி எடுத்து அதை ஒரு பூவைப்போல மலர வைக்கும் அற்புத விளக்காக ’தம்மபதம்’ நமக்கு இருக்கிறது. அதன் ஒவ்வொரு துளியையும் இனி வரும் அத்தியாயங்களில் நாம் பருகலாம்.
கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com