சமயம் வளர்த்த சான்றோர் – 43: ஸ்ரீ பக்த ஜெயதேவர்


ஸ்ரீ பக்த ஜெயதேவர் திருவுருவச் சிலை

கீத கோவிந்தம் என்ற சங்கீத சாகித்ய நூலை உலகுக்கு அளித்து, பஜனை சம்பிரதாயத்தைத் தன் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு, கிருஷ்ண பரமாத்மாவைத் துதித்து மகிழ்ந்தவர் ஸ்ரீ பக்த ஜெயதேவர். கிருஷ்ணர், ராதையின் அன்பை, 24 கிருதிகள் கொண்ட தொகுப்பில் அஷ்டபதிகளாகப் பாடி அவர்களோடு ஆடிக் களித்தவர்.

ஒடிசா மாநிலத்தில் பூரி நகரத்தின் அருகே பில்வகாம் என்ற ஊரில், 12-ம் நூற்றாண்டில் நாராயண சாஸ்திரி – கமலாம்பாள் தம்பதி வசித்துவந்தனர். இவர்களுக்கு வெகுநாட்களாகக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. இருவரும் அதிதிகளுக்கு உணவிட்டு, தொடர்ந்து திருமாலை வழிபட்டு வந்தனர். திருமாலின் அருளால் கமலாம்பாளுக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு ஜெயதேவர் எனப் பெயரிட்டனர்.

கோவிந்தன் மீதான கீதங்கள் என்பதால், ஜெயதேவர் பாடிய பாடல்கள் பின்னாட்களில் தொகுக்கப்பட்டு, ‘கீத கோவிந்தம்’ (அஷ்டபதி) என்று பெயர் பெற்றது.

ஜெயதேவர் பிறந்ததில் இருந்தே, அவருக்கு சாஸ்திரங்கள், புராணங்களைப் பயிற்றுவித்தார் நாராயண சாஸ்திரி. சிறு வயதில், ஜெயதேவர் பக்தியோடு இருந்ததைக் கண்டு தாய், தந்தை மட்டுமல்லாது, உறவினர்களும் மகிழ்ந்தனர். எந்நேரமும் கிருஷ்ணரின் நினைவாகவே இருந்தார் ஜெயதேவர்.

தக்க வயதில் ஜெயதேவருக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. கவிபாடும் திறமை ஜெயதேவருக்கு இருந்ததால், கிருஷ்ணர் மீது நிறையப் பாடல்களைப் புனைந்தார். கோவிந்தன் – ராதையின் அன்பை மனதில் இருத்தி, கீதங்கள் பாடினார். கோவிந்தன் மீதான கீதங்கள் என்பதால், இவர் பாடிய பாடல்கள் பின்னாட்களில் தொகுக்கப்பட்டு, ‘கீத கோவிந்தம்’ (அஷ்டபதி) என்று பெயர் பெற்றது.

கிருஷ்ணர் சொன்ன வரிகள்

சில காலம் கழித்து, அதே ஊரில் வசிக்கும் தேவசர்மா தம்பதியின் மகளான பத்மாவதியை ஜெயதேவருக்கு மணமுடிக்கப்பட்டது. ஜெயதேவர் – பத்மாவதி இருவரும் அன்னதானம் செய்வதை முதல் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தனர். ஜெயதேவர் கண்ணனின் விளையாடல்களைப் பாடல்களாகப் புனையும்போது, அவர் அருகே பத்மாவதி இருந்து அபிநயம் பிடித்துவருவது வழக்கமாயிற்று.

இருவரும் தினமும் திருமாலை வழிபடுவதும், கிருஷ்ணனைப் போற்றி அஷ்டபதிகள் பாடி ஆடுவதும் வழக்கமானது. இவ்வாறு 18 அஷ்டபதிகளை இயற்றிப் பாடி முடித்து, 19-வது அஷ்டபதியை எழுதும் சமயத்தில், ‘ஸ்மரகரல கண்டனம், மமசிரஸி மண்டனம், தேஹியத பல்லவமுதாரம்’ என்ற வரி ஜெயதேவர் மனதில் தோன்றியது. ஆனால், அதை எழுதாமல் நதிக்கரைக்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது ஜெயதேவர் உருவத்தில் தோன்றிய கிருஷ்ண பரமாத்மா, பத்மாவதியை அழைத்து, ஜெயதேவருக்குத் தோன்றிய வரிகளை எழுதச் சொல்லி, அதைச் சரிபார்த்துவிட்டுச் சென்றார்.

ஸ்ரீ பக்த ஜெயதேவர் ஓவியம்

நீராடிவிட்டு வந்த ஜெயதேவர், மனைவியிடம் அதே வரிகளைக் கூறி எழுதச் சொன்னார். பத்மாவதியும், “இப்போதுதானே எழுதச் சொன்னீர்கள்?” என்று கூறினார். தன் உருவத்தில் வந்திருந்தது பகவான் என்பதை மனைவியிடம் கூறியதோடு நில்லாமல், அந்த அஷ்டபதியின் நிறைவில் ‘ஜயது பத்மாவதீ ரமண ஜயதேவகவி பாரதீ பணிதமிதி கீதம்’ என்று பாடினார். அதேபோல 21-வது அஷ்டபதியிலும், பத்மாவதிக்குக் கிருஷ்ண பரமாத்மா காட்சியளித்ததைக் கூறும்விதமாக, பத்மாவதி என்ற பெயர் வருவதுபோல நிறைவுசெய்தார்.

இறை அம்சத்துடன், வேத வியாசரின் வடிவமாக ஜெயதேவர் அவதரித்துள்ளதாக மக்கள் போற்றினர். ஜெயதேவரின் பாடல்கள், வெகுவிரைவாகப் பரவின. பல தலங்களுக்குச் சென்று, கிருஷ்ணர் புகழ் பாடினார் ஜெயதேவர். அவ்வூர் மக்கள், ஜெயதேவரின் இலக்கியப் படைப்புகள், துதிப்பாடல்கள், அஷ்டபதிகளையும் தொகுத்து நூலாக்கி அதை பக்தியோடு பராமரித்து வந்தனர்.

கீத கோவிந்தம்

அரசரின் கோபம்

அப்போது அப்பகுதியை ஆட்சி செய்துவந்த மன்னர், கவிபாடும் திறன் கொண்டவராக இருந்தார். அவரும் ஜகந்நாதர் மீது பாடல்கள் புனைந்திருந்தார். ஆனால், அவை ஜெயதேவரின் பாடல்கள் அளவுக்குப் புகழ் பெறவில்லை. மக்கள் தன் பாடல்களையும் பாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தும், மக்கள் அதற்குச் செவி சாய்க்கவில்லை. ஜெயதேவரின் பாடல்கள் தவிர வேறு பாடல்களைப் பாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். இதன்காரணமாக, மக்களும் பண்டிதர்களும் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர்.

மன்னர் இயற்றிய பாடல்களை ஜகந்நாதர் ஏற்றுக்கொண்டால், அனைவரும் அவற்றைப் பாடுவதாகக் கூறினர். அதன்படி ஜெயதேவரின் பாடல்களையும் மன்னர் பாடிய பாடல்களையும் ஜகந்நாதரின் திருவடிகளில் வைத்து, இரவு கோயிலை மூடினர். மறுநாள் காலை பார்த்தால், மன்னரின் பாடல்கள் எழுதப்பட்ட ஏட்டுச் சுவடிகள் ஆங்காங்கு வீசப்பட்டிருந்தன. ஜெயதேவரின் பாடல்கள் மட்டும் ஜகந்நாதரின் திருவடிகளில் இருந்தன.

பூரி ஜகந்நாதர் கோயில்

அப்போது ஜகந்நாதரின் மூலஸ்தானத்தில் இருந்து, “உனது பாடல்களை அங்கீகரித்துக்கொண்டேன். ஆனந்தம் அடைந்தேன்” என்று அசரீரி ஒலித்தது. இதைக் கேட்ட மக்கள், ஜெயதேவரின் பாடல்களை வேதமாகக் கருதினர். அஷ்டபதிகளைப் பாடி அதற்கேற்ப அபிநயங்கள் பிடித்து ஆடி மகிழ்ந்தனர்.

தன் தவற்றை உணர்ந்த மன்னர் வருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கோரினார். மன்னரை மன்னித்தருளிய ஜகந்நாதர், மன்னர் பாடிய 13 பாடல்களை ஏற்றுக்கொண்டார்.

பக்தனைக் காட்டிக்கொடுத்த பகவான்

பல சமயம், இறைவனைப் பாடினால் மட்டும் போதாது. அவரை நோக்கி ஞானத் தவம் இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டார் ஜெயதேவர். ஒருநாள் பத்மாவதி வெளியே சென்றிருக்கும் சமயம், வீட்டைவீட்டு வெளியேறினார் ஜெயதேவர். தவம் செய்ய காட்டுக்குப் புறப்பட்டார். இல்லம் திரும்பிய பத்மாவதி, கணவரைக் காணாது தவித்தார்.

பக்தையின் மனம் அறிந்து, அவருக்கு, ஜெயதேவர் இருக்கும் இடத்தை மனக்கண் மூலம் காண அருள்புரிந்தார் ஸ்ரீமன் நாராயணன். நதிக்கரையோரம், மரங்கள் சூழ்ந்த இடத்தில் அமர்ந்து தவம் செய்யும் ஜெயதேவரைக் காண, கானகத்துக்குச் சென்றார் பத்மாவதி. மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இல்லம் திரும்பினார் ஜெயதேவர்.

இல்லத்தில் பூஜைகள் செய்வது, கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது, நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபடுவது, மரநிழலில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்வது என்பதை வழக்கமாகக் கொண்டார் ஜெயதேவர். மனைவியுடன் பேசும் நேரம் குறைந்து, தியானத்தில் ஈடுபடும் நேரம் அதிகமாயிற்று.

கிணற்றில் எறிந்த கொள்ளையர்

ஒருசமயம் பகவான் தாஸ் என்ற பக்தர், ஜெயதேவரைத் தமது இல்லத்துக்கு அழைத்தார். ஜெயதேவரும் அவரது விருப்பத்துக்கு இணங்க, அவரது இல்லத்துக்குச் சென்று பூஜைகள் நிகழ்த்திவந்தார். சில நாட்கள் கழித்து இல்லம் திரும்ப எண்ணினார் ஜெயதேவர். பகவான் தாஸ் நிறைய பொன்னும் பொருளும் அளித்து, ஜெயதேவரைத் தேரில் அனுப்பி வைத்தார். ஒரு கானகம் வழியே தேர் வரும்போது, சில கொள்ளையர்கள் தேரை வழிமறித்தனர்.

தன்னிடம் இருந்த பொருட்களை, ஜெயதேவர் கொள்ளையர்களிடம் கொடுத்த பிறகும், ஜெயதேவரைத் தாக்கிவிட்டு, அருகே இருந்த கிணற்றில் வீசிவிட்டுச் சென்றனர். கைகள், கால்கள் இழந்த நிலையிலும் திருமாலின் மச்சாவதார நிகழ்வுகளை நினைத்து மகிழ்ந்துகொண்டிருந்தார் ஜெயதேவர்.

பூரி ஜகந்நாதர் கோயில் தேரோட்டம்

மீட்டெடுத்த மன்னன்

ஜகந்நாதபுரியை அடுத்த சிற்றூர்களை கிரவுஞ்சன் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். அரசர் ஒரு சிவபக்தர். தினம் சிவபூஜை செய்து, திருநீறையும், உருத்திராக்கத்தையும் உயர்வாகக் கொண்டவர். ஒருசமயம் வேட்டையாடி களைத்த அரசர், அருகே உள்ள கிணற்றில் நீர் எடுக்க வந்தார். வந்தவர், அந்தக் கிணற்றுக்குள் யாரோ தவமிருப்பதைக் கண்டார். தனது மெய்க்காப்பாளர் உதவியுடன், கிணற்றுக்குள் தவத்தில் ஈடுபட்ட ஜெயதேவரை வெளியே கொண்டுவந்தார் அரசர். அவரை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். ஜெயதேவரின் தவம் கலைந்ததும் அவரைப் பற்றிய தகவல்களை அறிந்த அரசர், அவரது மனைவியையும் அரண்மனைக்கு அழைத்து வந்தார். அரசியும் பத்மாவதியும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.

அரசரின் சிவபூஜைக்கு மகிழ்ந்த சர்வேஸ்வரன், அவருக்குக் காட்சியளித்தார். அருகில் இருந்த ஜெயதேவருக்கும் வரம் அளிப்பதாகக் கூறினார். எப்போதும் நாம சங்கீர்த்தனத்திலேயே மூழ்கிக் கிடக்கும் ஜெயதேவர், தனக்கு ஏதும் வேண்டாது, அந்தக் கொள்ளையர்களுக்கு மோட்சம் அளிக்க வேண்டினார்.

ஜெயதேவரும் அரசரும் அடியார்களுடன் இசைக் கருவிகளை மீட்டி, அஷ்டபதிகளைப் பாடிக்கொண்டு இருந்தனர். ஒருநாள் இருவரும் காசி நகரத்துக்குப் பயணம் செய்தனர். அங்கு சந்தேக நிவர்த்தி குடார பண்டிதர் என்பவர், ஜெயதேவரின் அஷ்டபதிகளை ஏற்க இயலாது என்று கூறி, அஷ்டபதி பாடல்கள் கொண்ட ஏட்டுச் சுவடியை கங்கையில் எறிந்தார். ஆனால், கங்கா தேவியே அச்சுவடிகளை ஏந்தி, குடார பண்டிதரிடம் கொடுத்தார். குடார பண்டிதராக வந்த சர்வேஸ்வரனும், அச்சுவடிகளைப் பெற்று, ஜெயதேவரிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.

குருவாயூர்

பலகாலம் அரசரும் ஜெயதேவரும் பல தலங்களுக்கு யாத்திரை சென்று, குருவாயூர் வந்தடைந்தனர். குருவாயூரிலும் அஷ்டபதிகளைப் பாடி, பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தினர். அப்போது, முற்பிறப்பில் தான் குருவாயூரில் பிறந்திருப்பதை உணர்ந்தார் ஜெயதேவர். சில மாதங்கள் குருவாயூரில் தங்கிவிட்டு, மன்னரும் ஜெயதேவரும் மீண்டும் தங்கள் தேசத்துக்கு வந்தனர்.

பூரி ஜகந்நாதர் கோயில் தேரோட்டம்

பிறவாப் பெருவாழ்வு

அரசருக்கு மீண்டும் காசி மாநகருக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்ததால், ஜெயதேவர், பத்மாவதி, அரசர், அரசி, அவர்களது குமாரர்களுடன், காசி நகர் சென்று பலகாலம் தங்கியிருந்தனர். ஜெயதேவர், பக்தர்களுக்குப் புராண பிரவசனம் செய்தும், நாம சங்கீர்த்தனம் இசைத்தும் மகிழ்ந்தார். பிரம்மத்தின் தத்துவத்தை அரசருக்கு உணர்த்தினார். பரமனின் திருவடிகளை அடைய தாஸ்யம், சக்யம் போன்றவையே சுலபமான மார்க்கம் என்பதை அறியச் செய்தார்.

வாராணசியில் ஜெயதேவரும் பத்மாவதியும் பலகாலம் தங்கியிருந்து, பிறவாப் பெருவாழ்வு பெற்று, பரமனின் திருவடிகளில் வாழும் பேற்றைப் பெற்றனர். இன்றும் ஜெயதேவரின் அஷ்டபதிகள், நாம சங்கீர்த்தன வைபவங்களில் பாடப்பெறுகின்றன. நாட்டிய நிகழ்ச்சிகளிலும் அஷ்டபதிகள் இடம்பெற்றுள்ளன.

சர் எட்வின் ஆர் ரைல்டு என்ற ஆங்கிலக் கவிஞர் கீத கோவிந்தத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் பல மொழிகளிலும் கீத கோவிந்தம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

x