மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 4-ம் நாள் நவராத்திரி உற்சவம்


திருவெருக்கத்தம்புலியூரில் திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். பரமசிவனுடைய திருப்புகழை யாழில் இட்டுப்பாடுவாரான் அவர், சோழநாட்டில் உள்ள சிவாலங்களை வணங்கிவிட்டு பாண்டிநாட்டிற்கும் சென்றார். அங்கே மதுரையில் அருள்மிகு சொக்கநாத சுவாமியுடைய திருக்கோயில் வாயிலில் நின்று, பரமசிவன் மேலனவாகிய பாணிகளை யாழில் இட்டு வாசித்தார். சொக்கநாத சுவாமி அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு அன்றிரவிலே தம்முடைய அடியார்கள் அனைவருக்கும் கனவிலே தோன்றி ஆஞ்ஞாபித்தார். அவர்கள் அனைவரும் மறுநாள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சொக்கநாதருக்கு முன்பே கொண்டுவந்தார்கள். திருநீலகண்டப் பெரும்பாணர் அது சுவாமியுடைய ஆஞ்ஞை என்று தெளிந்து, இறைவன் முன்பே இருந்து யாழ் வாசித்தார்.

அப்பொழுது "இந்தப் பாணர் அன்பினோடு பாடுகின்ற யாழ் பூமியிலே உள்ள சீதம் (குளிர்ச்சி) தாக்கினால் வீக்கு அழியும். ஆதலால் இவருக்குப் பொற்பலகை இடுங்கள்” என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்கு கேட்டது. அதைக் கேட்ட அடியார்கள் பொற்பலகையை இட, திருநீலகண்டப் பெரும்பாணர் அதில் ஏறி யாழ் வாசித்தார்.

x