சமயம் வளர்த்த சான்றோர் – 41: மணம்பூண்டி ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்


ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் திருவுருவச் சிலை

மகான் ஸ்ரீ மத்வாச்சாரியார் தோற்றுவித்த உத்திராதி மடத்தின் 14-வது பீடாதிபதியாக இருந்து, த்வைத கோட்பாடுகளை, மக்களுக்குத் தெளிவாக உணர்த்தியவர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். பரமாத்மா என்பது இறைவன், ஜீவாத்மா என்பது இறைவனால் படைக்கப்பட்ட உயிர். இவ்விரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்ற உண்மைப் பொருளை விளக்கும் த்வைத சித்தாந்தமே முக்தி பெறுவதற்கு முதன்மையான வழி என்பதை உலகம் அறியச்செய்தவர்.

த்வைதம் என்ற மத்வ சித்தாந்தத்தை அருளிய ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வழிகாட்டுதலில் அமைந்தது, ஸ்ரீ உத்திராதி மடம். 16-ம் நூற்றாண்டில் ஸ்ரீ உத்திராதி மடத்தின் 13-வது பீடாதிபதியாக இருந்தவர் ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர்.

தனக்குப் பின்னர் ஸ்ரீ உத்திராதி மடத்தை வழிநடத்த சிறந்த சீடர் வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், மூலராமரிடமும், ஸ்ரீ மத்வாச்சாரியாரிடமும் தனது விண்ணப்பத்தை முன்வைத்தார். அன்று இரவு, ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தரின் கனவில் தோன்றிய ஸ்ரீ மத்வாச்சாரியார், அவருக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்தார். மூலராமர் தலத்தில் இருந்து ஓர் அசரீரி கேட்டது.

அதன்படி பல யாத்திரைகள் மேற்கொண்ட ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுவர்ணவாடி என்ற சிற்றூருக்குச் சென்றார். அப்போது அவரை தரிசிக்க கன்னட மொழி பேசும் தேசஸ்த் அந்தணர் குலத்தைச் சேர்ந்த சுப்ப பட்டர் – கங்காபாய் தம்பதி வந்திருந்தனர். வெகு நாட்களாகக் குழந்தை வரம் இல்லாது தவித்த தம்பதி, ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தரிடம் இதுகுறித்து விண்ணப்பம் வைத்து, தங்கள் இல்லத்துக்கு உணவருந்த வரும்படி அழைத்தனர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இல்லத்தில், மகான்கள் பொதுவாக உணவருந்துவதில்லை.

இருப்பினும், தம்பதியின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் இல்லத்துக்கு உணவருந்தச் செல்கிறார் ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர். அப்போது ஒரு நிபந்தனை விதிக்கிறார். புத்திரப்பேறு வாய்த்ததும், அக்குழந்தையை ஸ்ரீ உத்திராதி மடத்தின் பராமரிப்பில் விட்டுவிட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

குழந்தை வரம் வேண்டிய தம்பதியும், அந்த நிபந்தனைக்கு உடன்பட்டனர். கங்காபாய்க்கு 1548-ல் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும், தங்கத் தட்டில் ஏந்தி, மடத்துக்குக் கொண்டுவரப்பட்டு, ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தரிடம் ஒப்படைக்கப்பட்டது,

ஸ்ரீ உத்திராதி மடத்தில், மூலராமருக்குத் திருமஞ்சனம் செய்விக்கப்பட்ட புனித நீரால், குழந்தையைக் குளிப்பாட்டினார்கள். குழந்தைக்கு ‘ராமச்சந்திரன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. மூலராமருக்கு அபிஷேகம் செய்த பாலை, ராமச்சந்திரனுக்குக் கொடுத்தனர்.

ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், தினமும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்குப் பூஜைகள் செய்யும்போது, ராமச்சந்திரனும் உடனிருந்து தேவையான உதவிகள் புரிவார். ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், தான் எங்கு சென்றாலும், ராமச்சந்திரனையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அப்படி ஒருசமயம், தனது பூஜையை முடித்துக்கொண்டு, மாட்டுவண்டியில் வெளியே கிளம்பினார் சுவாமிகள். ராமச்சந்திரனும் உடன் சென்றார்.

செல்லும்வழி காட்டுப்பாதையாக இருந்தது. எதிர்பாராதவிதமாக குமுதாசுரன் என்ற அரக்கன், குழந்தையை அபகரிக்க முயற்சி செய்தான். மேலும், மாட்டுவண்டியில் இருந்த பூஜைக்கான பொருட்களையும் சேதப்படுத்தினான். அப்போது குழந்தை, அரக்கனை எட்டி உதைத்ததில், அரக்கன் பல அடிதூரம் சென்று வீழ்ந்து மடிந்தான். குழந்தை, தன் பிஞ்சுக்கால்களால் அரக்கனை மாய்த்ததை அறிந்து ஊர் மக்கள், ராமச்சந்திரனை தெய்வக் குழந்தையாகவே கொண்டாடினர்.

தனக்கொரு உத்தம சீடர் வாய்க்க, மூலராமரிடம் தான் வேண்டிக்கொண்டபோது, அசரீரியாக ஒலித்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தார் சுவாமிகள். (அந்த அசரீரி: ‘சுவர்ணவாடிக்குச் செல். அங்கு குழந்தை வேண்டி வரும் தம்பதியிடம் இருந்து உனக்கு ஒரு சீடன் கிடைப்பான். அவன், திரேதாயுகத்தில் துர்முகி என்ற வானரமாகப் பிறந்து, கும்பகர்ணனிடம் போரிட்டவன். துவாபரயுகத்தில் பீமன், இடும்பிக்கு கடோத்கஜன் என்ற மகனாகப் பிறந்து தன்னுயிர் துறந்து அர்ஜுனனைக் காத்தவன். இப்போது கலியுகத்தில் மக்கள் துயர் துடைக்கும் மகானாக அவதரிக்க உள்ளான்!’)

தன் பிஞ்சுக் கால்களால், அரக்கனை உதைத்த ராமச்சந்திரன், அசரீரியில் குறிப்பிடப்பட்ட கடோத்கஜன்தான் என்பதை உணர்ந்தார் சுவாமிகள். இப்படியே சில காலம் ஓடியது. ராமச்சந்திரனுக்கு 7 வயது ஆகும் சமயம், அவருக்கு உபநயனம் செய்விக்கப்பட்டது. 8 வயதானதும் அவருக்கு சந்நியாசம் வழங்கினார் ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர். ராமச்சந்திரனுக்கு, ‘ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர்’ என்ற துறவுத் திருநாமம் சூட்டப்பட்டது. ஸ்ரீ உத்திராதி மடத்தின் 14-வது பீடாதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் (பிற்காலத்தில் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் என்றும் அழைக்கப்பட்டார்).

வேத சாஸ்திரங்களைப் பயில்வதற்காக, குல்பர்கா மாவட்டம், மணூர் என்ற தலத்தில் அமைந்துள்ள ஆத்யம் ஸ்ரீவரதாச்சார்யா குருகுலத்துக்கு, ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் அனுப்பப்பட்டார். சில காலம் கழித்து ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர் முக்தியடைந்தார்.

அதன் பிறகு, தினமும் மூலராமருக்குப் பூஜைகள் செய்துவிட்டு, குருகுலம் வந்து பாடங்களைப் பயின்றார் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். சிறுவயதிலேயே மூலராமருக்குப் பூஜைகள் செய்யும் பேறு பெற்றதால், ஆத்யம் ஸ்ரீவரதாச்சார்யாவுக்கு ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் மீது பொறாமை ஏற்பட்டது. இதன் காரணமாக, பலதடவை ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரைக் காயப்படுத்தினார். இதை உணர்ந்த ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர், ஒருநாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் அழுதுகொண்டிருந்தார். தன் சீடன் கலங்கிநிற்பதை சூட்சும சக்தியால் அறிந்த ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் கனவில் தோன்றி இனி குருகுலத்துக்குச் செல்ல வேண்டாம் என்று பணித்தார். இதை அறிந்த ஆத்யம் ஸ்ரீவரதாச்சார்யா, ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரிடம் மன்னிப்பு கோரினார்.

ஆத்யம் ஸ்ரீவரதாச்சார்யாவை மன்னித்த ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர், அவரை மடத்திலேயே தங்கி சேவையாற்றுமாறு கேட்டுக்கொண்டார். த்வைத சித்தாந்தத்திலும், வேத சாஸ்திரத்திலும் புலமை பெற்றதால், ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் பற்றி அனைவரும் அறிந்தனர். பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, அனைவருக்கும் ஆசி வழங்கினார் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்.

அருளிய நூல்கள்

மத்வர், ஜெயதீர்த்தர், வியாச தீர்த்தர், பத்மநாப தீர்த்தர் ஆகியோரது படைப்புகளை பாவபோதனையின் வடிவத்தில் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் கூறினார். த்வைத சிந்தனைகளைத் தெளிவாக உரைத்தார். அவரது 10 படைப்புகளில் 5 மட்டுமே கிடைத்துள்ளன. அவர் எழுதிய கிரந்தங்களான ‘நியாய விவரண பாவபோதம்’, ‘தத்வ பிரகாசிகா பாவபோதம்’, ‘ஸ்ரீவிஷ்ணு தத்வஷ நிர்ணய பாவபோதம்’, ‘கீதா பாஷ்ய பாவபோதம்’, ‘பிரஹதாரண்யக உபநிஷத்பாஷய பாவபோதம்’ ஆகியன மிகவும் பிரபலமடைந்தன. ‘ஸ்ரீபாவபோதகுரு’ என்று போற்றப்பட்டார் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்.

ஜெயதீர்த்தருக்குப் பிறகு திகாச்சார்யர் (பாவபோதாச்சார்யர்) என்று போற்றப்படுபவர் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். எளிமையான மொழியில், துல்லியமான கருத்துகளை முன்மொழிந்து, அவற்றுக்கு வேறு யாராலும் காட்டப்படாத மேற்கோளை அவர் உணர்த்தியுள்ளார் என்று வரலாற்று ஆசிரியர் சர்மா கூறியுள்ளார்.

திருக்கோவிலூர் விஜயம்

தனது பயணத்தின் போது, பஞ்ச கிருஷ்ண தலங்களின் ஒன்றான திருக்கோவிலூரை வந்தடைந்தார் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர். அங்கு எந்த ஒரு வசதியையும் தனக்காக செய்துகொள்ளாமல், மரத்தடி நிழலில் தங்கினார். சாதி, மத வேறுபாடுகள் இன்றி, அனைவரின் துயர் தீர்த்தார். தென்பெண்ணை நதிக்கரையில் மணம்பூண்டி என்ற இடத்தில் பிருந்தாவனம் அமைக்க எண்ணினார்.

இதுகுறித்து ஸ்ரீராமபிரானிடம் வேண்டினார். ஒருநாள் இரவில் வேட்டவலம் ஜமீன்தாரின் கனவில் தோன்றிய ஸ்ரீராமபிரான், ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் பிருந்தாவனத்துக்காக ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, அந்த இடத்தை வழங்குமாறு திருவாய் மலர்ந்தார். அதன்படி அந்த இடத்தை ஸ்ரீ உத்திராதி மடத்துக்கு எழுதிக் கொடுத்தார் வேட்டவலம் ஜமீன்தார். பிறகு ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் திருவுள்ளப்படி, அந்த இடத்தில் ஸ்ரீ உத்திராதி மடம் அமைக்கப்பட்டது. 1595-ல் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பிருந்தாவனத்துக்குப் பிரவேசித்தார் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மணம்பூண்டி ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் பிருந்தாவனத்துக்கு, இன்றும் நிறைய அன்பர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 4 நாட்கள் இங்கு ஆராதனை விழா சிறப்பாக நடைபெறுகிறது. மனக்குறையோடு இங்கு வந்தால், மன நிறைவுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

விரைவில் திருமணம் கைகூட, வேலை வாய்ப்பு கிடைக்க, குழந்தை வரம் கிட்ட, குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் பிருந்தாவனத்தை 11 முறை வலம் வந்து வணங்குவது, பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பிருந்தாவனத்தில் நெய் தீபம் ஏற்றி வணங்கினால், கொடிய கிரக தோஷங்களும், துன்பங்களும் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம்.

(தொடரும்)

பெட்டிச் செய்தி

நவ பிருந்தாவனம்

கர்நாடக மாநிலத்தில் ஆனேகுந்தி என்ற இடத்தில் நவ பிருந்தாவனம் அமைந்துள்ளது. மத்வாச்சாரியார், ரகுவர்ய தீர்த்தர் (ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரின் குருநாதர்), கவீந்திர தீர்த்தர் (ஜய தீர்த்தரின் சீடர்), வாகீச தீர்த்தர் (கவீந்திர தீர்த்தரின் சீடர்), வியாசராஜர், ஸ்ரீநிவாச தீர்த்தர் (வியாசராஜ தீர்த்தரின் சீடர்),ராம தீர்த்தர் (ஸ்ரீநிவாச தீர்த்தருக்குப் பின்னர் பட்டத்துக்கு வந்தவர்), சுதீந்திர தீர்த்தர் (ஸ்ரீ ராகவேந்திரரின் குருநாதர்), கோவிந்த ஒடயர் (வியாசராஜர் காலத்தவர்) ஆகிய 9 மகான்களின் பிருந்தாவனங்கள் இங்கு அமைந்துள்ளன.

x