நாம சங்கீர்த்தன மும்மூர்த்திகளுள் ஒருவரான மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், நாம சங்கீர்த்தன பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளை இசைத்து, இறை வழிபாட்டு முறையை மேம்படுத்தியவர். சீதா கல்யாணம், ராதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, ‘மருதாநல்லூர் பாணி’ என்ற பழக்கத்தை மக்களிடையே புகுத்தியது இவரது தனிச்சிறப்பு!
பாகவத தர்மத்தின் உயிராக நாம சங்கீர்த்தனம் இருந்து வருகிறது. பகவன் நாம போதேந்திராள், திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் வழியில், நாம சங்கீர்த்தனத்தை மக்களிடம் கொண்டுசென்று, அனைவரும் இறை நாமாக்களைக் கூறி, இறைவனின் அருளைப் பெற, தனது வாழ்நாள் முழுவதும் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் பாகவத சேவை செய்தார்.
உறவினர் சொன்ன ஆரூடம்
திருவிசநல்லூரில் தெலுங்கு அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதி வசித்து வந்தனர். பாகவத சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்து, வேத அத்யயனம் செய்துவந்த வேங்கட சுப்பிரமணியர், சீடர்கள் பலருக்கு வேதம் சொல்லிக் கொடுத்து வந்தார். இறைவனின் அருளால், வேங்கட சுப்பிரமணியரின் மனைவிக்கு 1777-ல் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்குக் குலதெய்வத்தின் பெயரான வேங்கடேசரோடு, ராமனையும் சேர்த்து ‘வேங்கடராமன்’ என்று பெயரிடப்பட்டது.
3 வயது வரை வேங்கடராமன் பேசவே இல்லை. இதில் வருத்தம் அடைந்த பெற்றோர், வேண்டாத தெய்வம் இல்லை. அப்போது, அவர்கள் இல்லத்துக்கு வந்த பெரியவர் ஒருவர், “குழந்தை நிச்சயம் பேசுவான். அவனிடம் தெய்வ சக்தி இருப்பதால், ஒரு மகானாகத் திகழ்வான். நம் முன்னோரில் ஜடபரதர், நம்மாழ்வார், குமரகுருபர சுவாமிகள் போன்றோர் முதலில் இவ்வாறு பேசாமல் இருந்துள்ளனர். அதனால் வருந்த வேண்டாம்” என்று அருளினார்.
காவியங்களை நன்கு கற்றுணர்ந்த வேங்கட சுப்பிரமணியர், குழந்தைக்கு வேதத்துடன் ராம காவியத்தையும் தினமும் கூறிவந்தார். வேங்கடராமனும் அதையெல்லாம் தலையாட்டிக் கேட்டுக்கொள்வார்.
பேசத் தொடங்கிய சுவாமிகள்
திருவிசநல்லூருக்கு அருகே உள்ள மணஞ்சேரி என்ற ஊரில் கோபால சுவாமிகள் என்ற பாகவதர் வசித்துவந்தார். அவர் நாம சங்கீர்த்தனம் செய்வதை மட்டுமே தனது வாழ்நாள் சேவையாக செய்துவந்தார். அவரைப் பற்றி கேள்விப்பட்ட வேங்கட சுப்பிரமணியர், மகனோடு அவரது இல்லத்துக்குச் சென்றார். குழந்தை, பிறந்தது முதல் பேசவே இல்லை என வருத்தத்துடன் சொன்னார்.
உடனே, “நான் இதற்கு ஒரு மருந்து வைத்திருக்கிறேன். அது எல்லா நோய்களையும் குணப்படுத்தும் பரம ஔஷதம். அது உங்கள் மகனது குறையைக் குணப்படுத்தும் என்பது நிச்சயம்” என்று சொன்ன கோபால சுவாமிகள், வேங்கடராமனைத் தன்னருகே அழைத்து, குழந்தையின் காதில் ‘ராம’ நாமத்தைக் கூறினார். உடனே மூர்ச்சையான வேங்கடராமன், சிறிது நேரம் கழித்து எழுந்து, ‘ராம’ நாமத்தை வாய்விட்டு கூறலானார். வேங்கட சுப்பிரமணியருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
சத்குருவான சரிதம்
வேங்கடராமனுக்கு 7 வயதானதும் உபநயனம் செய்விக்கப்பட்டது. சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டுமே கருத்தில் கொண்ட வேங்கட சுப்பிரமணியர், நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்தினார். நிகழ்ச்சி முடிந்ததும் வேங்கடராமன், “ராமரைக் காணவில்லை. இனி அவரை எங்கு தேடுவேன்?” என்று அழத் தொடங்கினார்.
என்னவெனப் புரியாமல் குழம்பிய உறவினர்கள் வேங்கடராமனிடம் விசாரித்தனர். அதற்கு, வேங்கடராமன், “உபநயன நிகழ்ச்சியில் பிரம்மோபதேசம் செய்யும்போது, ராமபிரான் என் இதயத்தில் இருந்தார். ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அங்கு இல்லை. அவரை இனி எங்கு தேடுவேன்?” என்று சொல்லிவிட்டு மீண்டும் அழத் தொடங்கினார். மகனின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட தந்தையார், “ஹே ராம, ஹே சத்குரோ, பாஹி” என்று பக்திப் பெருக்கால் குதூகலித்தார். அன்று முதல் அனைவரும் வேங்கடராமனை, ‘சத்குரு’ என்று அழைக்கலாயினர்.
தந்தையே குருவானபடியால், வேத சாஸ்திரப் பயிற்சி தொடர்ந்தது. ராமாயண காவியத்தையும் படித்து, தந்தையிடம் தெளிவு பெற்று வந்தார் சத்குரு சுவாமிகள்.
ஒரு சமயம், சம்பூர்ண ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தை உபதேசிக்கும்போது, “சீதாதேவியை குடிலில் காணவில்லை என்பதை அறிகிறார் ராமபிரான்” என்று கூறினார் வேங்கட சுப்பிரமணியர். உடனே கோபம் கொண்ட சுவாமிகள், “லட்சுமணா... தனுசை எடு! இங்கிருந்தபடியே நான் ராவணனை வீழ்த்திவிடுகிறேன்” என்று கூறினார். இப்படி, ஒவ்வொரு சமயமும் தசரதன், பரதன், சீதாதேவியின் துயரத்தைக் கேட்டு மனம் கலங்கினார் சுவாமிகள். இந்தக் கதைகளைத் தன்னுடன் விளையாடும் சிறுவர்களுக்கும் கூறிவந்தார்.
வேத சாஸ்திரங்கள், பகவத் விஷயங்கள் அனைத்தையும் கற்ற சுவாமிகள், ஒரு குருநாதரிடமிருந்து சங்கீதத்தையும் கற்றுக்கொண்டார். அனைத்து சாஸ்திரங்களுடைய சாரம் பகவன் நாமமே என்று தெளிந்து, கோபால சுவாமிகளிடம் சென்று பகவன் நாம உபதேசமும் நாம சூத்ரமும் பெற்றார்.
தந்தையின் சொல்படி, அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்கு சிரார்த்தம் போன்ற வைதீக காரியங்களையும் செய்துவந்தார்.
இல்லற வாழ்வு
ஜானகி என்ற பெண்ணை, சத்குரு சுவாமிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார் வேங்கட சுப்பிரமணியர். அதன் பிறகு சத்குரு சுவாமிகள், தாய், தந்தை, மனைவி ஆகியோரைக் கவனித்துக் கொண்டு, வைதீகக் காரியங்களைச் செய்துகொண்டு, பகவான் நாம சங்கீர்த்தனத்தை செய்துவந்தார். வேத சாஸ்திரங்களை சீடர்களுக்கும் போதித்துவந்தார். தந்தையார் சத்கதி அடைந்ததும், குடும்பப் பொறுப்புகளைச் சுமந்தபடி, தனது நாம சங்கீர்த்தனைப் பணியைச் செய்துவந்தார் சுவாமிகள். வேப்பத்தூரில் உள்ள ஓர் அக்ரஹார குழந்தைகளுக்கு, ‘ராம’ நாம மகிமையை உணர்த்தி அவர்களை பாகவத சிரோன்மணிகளாக்கினார்.
ஒருசமயம் உபன்யாசகர் ஒருவர் ராமகாதையைப் பிரவசனம் செய்துகொண்டிருந்தார். அப்போது ராமபிரான் வனவாசம் செல்லும் காட்சி விளக்கப்பட்டது. ‘எதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல வேண்டும்? பரதனுக்கு சேவகம் செய்துகொண்டு அயோத்தியிலேயே இருக்கலாமே? இல்லையென்றால் உஞ்சவிருத்தி செய்து இங்கேயே இருக்கலாமே?’ என்று கவுசல்யா தேவி கதறி அழுவதாகக் காட்சி. உடனே முடிவு செய்தார் சுவாமிகள். இனி உஞ்சவிருத்தி தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். அன்றாடம் கிடைக்கும் அரிசி, தானியங்களை வைத்து குடும்பம் நடத்த வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, அன்று முதல் உஞ்சவிருத்தி (அன்றைய உணவுத் தேவைக்கான தானியங்களை அன்றைக்கே யாசகமாக பெறுவது) தர்மத்தைக் கடைப்பிடித்து, இறை நாமங்கள் பாடிவந்தார்.
மனைவியுடன் அயோத்திக்குச் சென்று, அங்கேயே தங்கிவிடலாம் என்று எண்ணம் கொண்டார் சுவாமிகள். அதன்படி ராம நாமம் கூறியபடி, ஆந்திரா வழியாக அயோத்திக்குப் புறப்பட்டார். செல்லும் வழியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வடக்கே இருந்த கீர்த்தனைகளையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் இணைத்து, ஒரு புதிய நாம சங்கீர்த்தன முறையை உருவாக்கலாம் என்று எண்ணினார். அன்றிரவு அவரது கனவில் போதேந்திராள் தோன்றி, “அயோத்தி செல்வதற்கு பதில் உனது ஊருக்குச் சென்று நாம சங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்கு முயற்சிகள் மேற்கொள்வாய்” என்று பணித்தார்.
போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியபடி, மருதாநல்லூர் திரும்பினார் சத்குரு சுவாமிகள். ஜெயதேவரின் கீத கோவிந்தம், போதேந்திர சுவாமிகள், திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், புரந்தர தாசர், பத்ராசல ராமதாசர் போன்ற மகான்களின் கீர்த்தனைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய நாம சங்கீர்த்தன முறையை உருவாக்கினார். மருதாநல்லூரில் ஒரு மடத்தைத் தொடங்கினார். ஊரில் உள்ள அனைவருக்கும் புதிய நாம சங்கீர்த்தன முறையைப் பயிற்றுவித்தார். அன்று முதல் மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார்.
சுவாமிகளின் மேன்மை
போதேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்தைக் காண, கோவிந்தபுரம் சென்றார் சத்குரு சுவாமிகள். ஆனால் பிருந்தாவனம் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. 9 நாட்கள், உண்ணாமல் உறங்காமல் அனைத்து இடங்களிலும் தேடினார். ஓரிடத்தில் ‘ராம ராம’ என்ற நாமம் கேட்டது. அந்த இடமே போதேந்திராளின் பிருந்தாவனம் என்பதை உணர்ந்தார். தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் போதேந்திராளின் பிருந்தாவனத்தைக் கோயில் போல அமைக்க ஏற்பாடு செய்தார் சத்குரு சுவாமிகள். சரபோஜி மன்னர், சத்குரு சுவாமிகளை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாகவே நினைத்து அவர் கால்களில் விழுந்து வணங்கினார்.
ஒருசமயம் சத்குரு சுவாமிகள், உஞ்சவிருத்தி எடுத்துக்கொண்டு வரும்போது, பாலகலோசன் என்பவர், சுவாமிகளை அவமரியாதை செய்தார். இதன் காரணமாக அவருக்குத் தீராத வயிற்றுவலி வந்தது. பாலகலோசனின் மனைவி சுவாமிகளைச் சந்தித்து, தீர்த்தம் பெற்று, அதைக் கணவரிடம் அளித்தார். வயிற்றுவலி நீங்கப்பெற்ற பாலகலோசன், சுவாமிகளிடம் மன்னிப்பு கோரி அவரது சீடர் ஆனார். அவர் எழுதிய, ‘அதடே பரபிரும்மம்’ என்ற கீர்த்தனை இன்றும் குரு கீர்த்தனையாக நாம சங்கீர்த்தனத்தின்போது பாடப்படுகிறது.
தனது மனைவி ஜானகி, வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தபோது, அவள் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவடிகளை அடைந்துவிட்டதாக நினைத்து நாம சங்கீர்த்தனம் செய்தபடி இருந்தார் சுவாமிகள். வேங்கடராமைய்யர், அவரது மகன் பச்சை கோதண்டராமஸ்வாமி போன்ற எண்ணற்ற சீடர்களைப் பெற்ற மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள், 1817-ல் ஸ்ரீராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில், தனது சீடர்களிடம், தன்னை வைகுண்டம் அழைத்துப் போக மகாவிஷ்ணு விமானம் அனுப்பியுள்ளதாகச் சொல்லிவிட்டு இறைவனுடன் ஐக்கியமானார்.
மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் மடத்தில், இன்றும் திருவிழா சமயங்களில் பாகவதர்கள் பலர் ஒன்று கூடி நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தி வருகின்றனர்.