முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்தவாரி ஆரத்தி வழிபாடு


இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரிக்கு, ஆண்டுதோறும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிகின்றனர். ஆன்மிகவாதிகள் மட்டுமின்றி, உலக நாடுகளில் இருந்து வரும் அனைவரையுமே முக்கடலும் சேரும் முக்கடல் சங்கமத்தில் கால்நனைத்து கடல் அழகை ரசித்து செல்வதை பெரிதும் விரும்புவார்கள்.

ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கரோனா கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. அனுமதி வழங்கப்படும் நாட்களிலும் குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளே வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டே முக்கடல் சங்கம கடற்கரையில் மகா சமுத்திர தீர்த்தவாரி நடத்த சிவ பக்தர்கள் அடங்கிய இந்து திருத்தொண்டர் பேரவையினர் முடிவெடுத்தனர். கங்கை, ராமேஸ்வரத்துக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவில் மகா தீர்த்தவாரியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் நடத்த ஏற்பாடுகள் நடந்துந்த நிலையில், கரோனா விதிமுறைகளால் நிகழ்ச்சி அப்போது தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் புரட்டாசி பவுர்ணமி நாளான நேற்று, மகா சமுத்திர தீர்த்தவாரி நடத்த, இந்து திருத்தொண்டர் பேரவையினர் அனுமதி கேட்டனர். அதிகமான பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் கூடுவார்கள் என்பதால், கரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதி மாவட்ட நிர்வாகம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்திக்கு முதலில் அனுமதி அளிக்கவில்லை. இந்து அமைப்பினரும் அரசியல் கட்சி பிரமுகர்களும் அழுத்தம் கொடுத்ததால், அதிகக் கூட்டம் கூடாமல் கரோனா விதிகளைப் பின்பற்றி தீர்த்த ஆரத்தியை நடத்திக் கொள்ளும்படி குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அனுமதி கொடுத்தார்.

இதையடுத்து நேற்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு தீர்த்த ஆரத்தி வழிபாட்டுக்கு பக்தர்கள் தயாரானார்கள். இதையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கூடி மகா சமுத்திர ஆரத்தி வழிபாட்டை நடத்தினர்.

சுமங்கலிகள் திரண்டு வந்து நெய் தீபமேற்ற, கயிலை வாத்தியத்துடன் அணையா தீபம் ஏற்றப்பட்டது. அத்துடன் 7 சப்த கன்னிகள் பூஜைகளும் நடைபெற்றன. பவுர்ணமி இரவில் கடலுக்குள் எழுந்துவந்த நிலவுக்கு மத்தியில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தியால் முக்கடல் சங்கம் தீப ஒளியில் ஜொலித்தது. “ஆன்மிகத்துடன், இயற்கையைப் பாதுகாத்து பராமரிப்பதன் அவசியத்தை இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச்செல்லும் வகையில் இனி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெறும். முக்கிய விசேஷ தினங்களிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்படும்” என கன்னியாகுமரி மாவட்ட இந்து திருக்கோயில் தொண்டர் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.

x