ஒரு சமயம், கிருஷ்ணன், அண்ணன் பலராமன், அர்ஜுனன் – மூவரும் ஒரு காட்டில் சென்று கொண்டிருந்தபோது இருட்டிவிட்டது. அதனால் அங்கேயே தங்கிவிட்டு, காலையில் பயணம் செய்யலாம் என்று முடிவு செய்தனர்.
காடு என்றால் மிருக நடமாட்டம் இருக்குமே. கிருஷ்ணன் ஓர் ஆலோசனை சொன்னார். அதன்படி ஜாமத்துக்கு ஒருவர் கண்விழித்துக் காவல் காக்க வேண்டும். அந்த நேரத்தில் மீதி இருவரும் தூங்க முடிவு.
முதலில் அர்ஜுனன் முறை. கிருஷ்ணனும் பலராமனும் தூங்கிவிட்டனர். அர்ஜுனன் காவலுக்கு இருக்கும்போது ஒரு புகை மண்டலம் தோன்றியது. அதிலிருந்து ஒரு கோரமான உருவம் தோன்றியது. பெரிய மூக்கும் கூரிய கோரமான பற்களும், முறைக்கும் கண்களுடன் இருந்தது.
அர்ஜுனன் அதைத் தடுத்தான். என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டான். அந்த உருவம் இருவரையும் கொல்லப் போகிறேன் என்கிறது. கோபமடைந்த அர்ஜுனன் அதைத் தாக்கினான். ஆனால், அது உருவத்தில் பெரிதானது. அவனை பலமாகத் தாக்கிவிட்டு சென்றது.
அந்த ஜாமம் முடிந்ததும் அடுத்து பலராமன் முறை. அர்ஜுனன் பலராமனை எழுப்பிவிட்டு, காவல் காக்குமாறு கூறிவிட்டுத் தூங்கச் சென்றான். இப்போது மீண்டும் அந்த உருவம் வந்து அதே செய்தியைக் கூறியது. பலராமனும் கோபப்பட்டு அதைத் தாக்கினார். இவர் தாக்குதலை அதிகப்படுத்தியதும் அது விஸ்வரூபம் எடுத்தது. பலராமனை பலமாகத் தாக்கிவிட்டுச் சென்றது.
இப்போது கிருஷ்ணர் காவல் காக்கும் முறை. மீண்டும் அந்த உருவம் வந்தது. அதைப் பார்த்த கிருஷ்ணர் சிரித்தார். கிருஷ்ணர் தன்னை ஏளனம் செய்வதாக நினைத்த அந்த உருவம், ஆவேசம் அடைந்தது.
உன்னைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று கூறியபடி அந்த உருவத்தைத் தாக்கினார் கிருஷ்ணர். புன்னகையுடன் அதைத் தாக்கியதால் அந்த உருவம் மிகவும் சிறியதாக மாறியது. நிறைவாக அது சிறிய புழுவாக மாறி தரையில் விழுந்தது. அந்தப் புழுவை எடுத்து பத்திரமாக ஒரு துணியில் முடிந்து வைத்தார் கிருஷ்ணர்.
கோபம் அதிகரிக்க அதிகரிக்க, எதிரியின் பலமும் வடிவமும் அதிகரிக்கும். அதற்கு மாறாக எதிரியை புன்னகையோடு எதிர்கொண்டால் அவரது பலமும் வடிவமும் குறைந்து நிறைவாகப் புழுவாக மாறிவிடும்.
பொழுது விடிந்தது. மூவரும் ஒருவருக்கொருவர் இரவில் தோன்றிய அந்த உருவம் பற்றி பேசிக் கொண்டனர். அப்போது கிருஷ்ணர் அந்த துணியில் முடிந்து வைக்கப்பட்டிருந்த புழுவைக் காட்டினார். இதுதான் நீங்கள் பார்த்த உருவம் என்றார். நீங்கள் இருவரும் இந்த உருவத்துடன்தான் சண்டை போட்டீர்கள் என்றார்.
இருவரும் நம்பவில்லை. கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார், “நமது கோபம் அதிகரிக்க அதிகரிக்க, நம் எதிரியின் பலமும் வடிவமும் அதிகரிக்கும். அதற்கு மாறாக எதிரியை நாம் புன்னகையோடு எதிர்கொண்டால் அவரது பலமும் வடிவமும் குறைந்து நிறைவாகப் புழுவாக மாறிவிடும். அதாவது எதிரியைவிட்டு புன்னகையோடு வெளியேறிவிட்டால் அவர் புழுவுக்கு நிகராகிப்போவார். கோபத்தைக் குறைப்பவனே ஞானி” என்றார்
இந்தக் கதை எப்போதும் நம் மனதில் இருக்க வேண்டும். எப்போதுமே நடப்பது நடந்துவிட்டது. அதற்குக் கவலைப்படாமல் அடுத்தது என்ன என்று யோசித்தால் பல பிரச்சினைகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
புன்னகையைப் பழக்கிக் கொள்வோம்.
புன்னகையோடு அனைத்தையும் எதிர்கொள்வோம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!