கரோனாவால் இரவு 8 மணிக்கே சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படுகிறது


சபரிமலை ஐயப்பன் கோயில்

தமிழ் மாத பூஜைக்காக 16-ம் தேதி நடை திறக்கப்பட்ட சபரிமலையில் கரோனா கட்டுப்பாடுகளால் இரவு 8 மணிக்கே நடை சாத்தப்படுகிறது. இம்மாத பூஜைகள் நாளை நிறைவுக்கு வருவதால் நாளை மாலை சபரிமலையில் நடை சாத்தப்படுகிறது.

கேரளத்தில் கரோன பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் சபரிமலையில் தினமும் 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். முன் பதிவு செய்திருந்தாலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது கரோனா நெகட்டீவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேறுவதற்கு இருந்த தடை இப்போது விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. எனினும் இரவில் மலை மீது பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என்பதால் தினமும் இரவு 8 மணிக்கே நடை சாத்தப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இத்தகைய கட்டுப்பாடுகளாலும் கரோனா, நிபா அச்சத்தாலும் இந்த மாதம் சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட குறைவாகவே உள்ளது. ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று மட்டும் பக்தர்கள் கூட்டம் சற்றே அதிகமாக இருந்ததாக அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் தெரிவித்தனர்.

ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள்

சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம், மருத்துவ உதவி உள்ளிட்ட சேவைகளைச் செய்துவரும் அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் இப்போதும் தினமும் மூன்று வேளையும் சபரிமலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் நேற்று கோவை மருதமலையில் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக மதுரை எம்.விஸ்வநாதனும், செயலாளராக சென்னை கே.ஐயப்பனும், பொருளாளராக எஸ்.கிருஷ்ண மூர்த்தியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மூவருமே 20 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக இந்தப் பொறுப்பில் நீடிப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சங்கத்தின் துணைத் தலைவர்களாக வேதகிரி, ரவி, பாலன், பாலசுப்பிரமணியன், நரசிம்மமூர்த்தி, செல்வராஜ் ஆகியோரும், இணைச் செயலாளர்களாக ராஜாராமன், ஸ்ரீதர், கருப்பன் செட்டி, சுவாமிநாதன், நஞ்சுண்டன், ஆதிமணி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புரவலர்களாக பாடகர் வீரமணி ராஜூ, எம்.எஸ்.பி.கருப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

x