சமயம் வளர்த்த சான்றோர் – 38 ஸ்ரீ அரவிந்தர்


ஸ்ரீ அரவிந்தர்

இந்திய விடுதலை இயக்கத்தில் இணைந்து, போராட்ட வீரராய்த் திகழ்ந்து, ஆன்மிக வாழ்க்கையை மேற்கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். சனாதன தர்மத்தை ஆழமாக நோக்கி வேதம், உபநிடதம், கீதை, இந்தியப் பண்பாடு பற்றி அடுத்த தலைமுறையை அவர் அறியச் செய்தார். யோகத்தின் மூலம் உயர்நிலை மனதை உருவாக்கி மனித வாழ்வின் இயல்பு நிலை மாறி, தெய்வீக நிலை தோன்றும் என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.

கொல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த, கிருஷ்ண தனகோஷ் – சுவர்ணலதா தம்பதிக்கு 3-வது மகனாக, 1872 ஆகஸ்ட் 15-ல் பிறந்தார் அரவிந்த அக்ரோத்ய கோஷ். இவருக்கு 5 வயதானபோது, இவரது அண்ணன்களான விநய பூஷன், மன்மோகன் ஆகியோர் படிக்கும் டார்ஜிலிங் லோரெட்டோ கான்வென்டில் சேர்க்கப்பட்டார்.

சகோதரர்கள் இருவரும் படிப்பு, வேலை தொடர்பாக பிரிட்டன் செல்ல திட்டமிட்ட நிலையில், 1879-ல் அவர்களுடன் பிரிட்டன் சென்று தனது கல்வியைத் தொடர்ந்தார் அரவிந்தர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தபோது, ஒவ்வொரு போட்டியிலும் பரிசுகளைக் குவித்துக்கொண்டிருந்தார். கிரேக்க, லத்தீன் கவிதைப் போட்டியிலும் வெற்றிகளைக் குவித்து ஆங்கிலேயர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அரவிந்தர்.

எந்தப் பாராட்டுக்கும் பரிசுக்கும் மயங்காமல், எப்போதும் நிதானம் காட்டி அமைதியாக இருந்தார். ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அரவிந்தருக்கு அப்பணியில் விருப்பம் இல்லை.

அப்போது தந்தை கோஷிடமிருந்து அரவிந்தருக்குக் கடிதம் வந்தது. ஆங்கிலேயேர் ஆட்சி குறித்தும், அவர்களது அடக்குமுறை குறித்தும் அதில் எழுதப்பட்டிருந்தது. புரட்சிகரமான சிந்தனைகளுடன் இருந்த அரவிந்தர், தந்தையின் கடிதத்தைப் படித்தவுடன், இந்தியா திரும்ப வேண்டும் என்று நினைத்துக்கொண்டார். இருப்பினும் அதற்கு ஒரு காலம் வரும் என்று காத்திருந்தார்.

எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த அரவிந்தர், இந்திய மாணவர்கள் தொடங்கிய, ‘இந்தியன் மஜ்லிஸ்’ சங்கத்தில் செயலரானார். இந்திய விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். ‘தாமரையும் குத்து வாளும்’ எனும் ஒரு ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார்.

இளநிலைப் பட்டம் பெற்று, வரலாறு, புவியியல் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தார் அரவிந்தர். 14 வருட பிரிட்டன் வாழ்க்கை அவருக்கு கசக்கத் தொடங்கியது. இந்தியா திரும்பலாம் என்று நினைத்து, 1893 பிப்ரவரி மாதத்தில் ருமேனியா என்ற கப்பலில் இந்தியாவுக்குப் பயணிப்பதாக தந்தைக்குத் தந்தி அனுப்பப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து, மகனைக் காணப்போகும் சந்தோஷத்தில் குதூகலித்தார் தந்தை கோஷ்.

ஆனால், போர்ச்சுகல் கரையோரம் ருமேனியா கப்பல் கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்த யாரும் உயிருடன் இல்லை எனவும் வந்த தந்தியால் நிலைகுலைந்தார் கோஷ். அப்படியே மீளாத் துயில் கொண்டார். முன்பு வந்தது தவறான தந்தி என்பது, பின்புதான் அவர் உறவினர்களுக்குத் தெரிந்தது.

அரவிந்தர், ருமேனியா கப்பலில் பயணிக்கவில்லை. கடைசி நேரத்தில் அந்தக் கப்பலில் ஏறாமல், எஸ்.எஸ்.கார்த்தேஜ் என்ற கப்பலில் பயணித்தார். அவரது பயண ஏற்பாடுகளைக் கவனித்துக்கொண்ட நிறுவனத்தினர், தவறாகத் தந்தியை அனுப்பிவிட்டனர்.

பிப்ரவரி 6-ம் தேதி இந்தியா வந்த அரவிந்தர், தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ந்தார். தாயைக் காண்பதற்காக ரோகிணி என்ற கிராமத்துக்குச் சென்றபோது, தாய் சுவர்ணலதா தேவி மனநோயாளியாகிவிட்டதை உணர்ந்தார். 7 வயதில் பார்த்த மகனை, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்ததும், அது தனது மகன்தான் என்பதை சுவர்ணலதா நம்ப மறுத்தார். அரவிந்தரின் கைகளில் உள்ள வெட்டுக் காயத்தைப் பார்த்த பிறகே, அது அவர் மகன் என்பதை உணர்ந்தார். கணவர் இறந்ததை அவர் உணரவே இல்லை.

இப்படியொரு சூழலில் தவித்த அரவிந்தர், பரோடா சமஸ்தானத்தில் பணிக்குச் சேர்ந்தார். அப்போதே இந்தியப் பண்பாட்டுணர்வை நேசிக்கத் தொடங்கினார்.

ஏறத்தாழ 14 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். சர்வே செட்டில்மென்ட் துறை, ரெவென்யூ டிபார்ட்மென்ட் பணி, சில காலம் பிரெஞ்சு பேராசிரியர், ஆங்கிலப் பேராசிரியர், கல்லூரி துணை முதல்வர் பணி என பணிபுரிந்தவர் பரோடாவைவிட்டு வெளியேறினார். பரோடாவில் இருந்த காலத்தில் மகாராஜாவுக்கு அவ்வப்போது முக்கியக் கடிதங்கள், உடன்படிக்கைகள் போன்றவற்றை எழுதிக் கொடுத்துவந்தார் அரவிந்தர். இருப்பினும் இலக்கிய, ஆன்மிக நூல்களைப் படிக்கும் நேரம் குறைந்துவிட்டதால், மகாராஜாவுக்கு உதவுவது குறைந்து, பின்னர் நின்றுவிட்டது.

1901-ல், கொல்கத்தா சென்றபோது, பூபால் சந்திர போஸ் என்ற அரசு அதிகாரியின் மகளான மிருணாளினியை மணம் புரிந்தார் அரவிந்தர்.

1906-ல் கொல்கத்தா தேசிய கல்லூரியின் முதல்வரானார். அப்போது கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் இந்தியாவில் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. கொதித்துப்போன அரவிந்தர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘வந்தே மாதரம்’ என்ற இதழைத் தொடங்கினார்.

ஸ்ரீ அரவிந்தரின் உருவச் சிலை

இந்திய விடுதலைக்காகப் போராடிய பிபின் சந்திரபாலருடன் இணைந்து, பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு, ஆங்கில அரசுக்கு எதிராகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய அரசு, 1907-ல் அவரைச் சிறை வைத்தது. சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். வெளியே வந்த அரவிந்தர், ‘கர்மயோகி’ என்ற ஆங்கிலப் பத்திரிகை, ‘தர்மா’ என்ற வங்காள மொழி பத்திரிகை மூலம், சுதந்திர வேட்கையைத் தூண்டும் கட்டுரைகள் எழுதினார். அதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதற்காக 1908-ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது கீதை, வேதங்கள் குறித்த ஆன்மிக நூல்களை வாசித்தார். யோக நெறியில் அவருக்கு ஆர்வம் பிறந்தது. 1908-ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தன்னை முழுமையாக யோக நெறியில் ஈடுபடுத்திக்கொண்டார் அரவிந்தர். 1910-ல் அரவிந்தர் மீது, ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. அதிலிருந்து தப்பித்து, புதுச்சேரியை அடைந்தார் அரவிந்தர்.

ஸ்ரீ அரவிந்தருக்கு மரியாதை செய்யும் வகையில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை

புதுச்சேரியில் அவருக்கு, மகாகவி பாரதியார் உள்ளிட்ட தமிழர்கள் வரவேற்பு அளித்தனர். அவருக்குத் தங்குவதற்கு ஓரிடம் ஏற்பாடாயிற்று. தனது அரசியல் நடவடிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆன்மிகத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார் அரவிந்தர். 1914 முதல், தனது ஆன்மிகச் சிந்தனைகளை, ‘ஆர்யா’ என்ற இதழில் எழுதத் தொடங்கினார். உண்மையை அடிப்படையாக வைத்து பல தத்துவங்களை மக்களுக்கு கூறி வந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்

இந்தக் காலகட்டத்தில் ஸ்ரீ அன்னை, அரவிந்தரைச் சந்தித்தார். தன் கனவில் தோன்றிய மகான், ஸ்ரீ அரவிந்தர்தான் என்பதை உணர்ந்து, அவருடன் இருந்து ஆன்மிகப் பணிகள் மேற்கொண்டார் அன்னை. 1926-ல், ஸ்ரீ அரவிந்தர் வசித்த இல்லம், ஆசிரமம் போல் மாறியது. எண்ணற்ற அன்பர்கள், ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் சிந்தனைகளைக் கேட்டு, தங்களை நெறிப்படுத்திக் கொண்டனர்.

‘ஓர் எறும்பின் உயிரைக் காப்பாற்றுவது, ஒரு பேரரசை நிறுவுவதைவிட சிறந்தச் செயலாகும்’ என்ற எண்ணத்தில் அனைவரிடமும் கருணை உள்ளத்தோடு ஆன்மிகத்தைப் பரப்பினார் ஸ்ரீ அரவிந்தர். மகா யோகியாகவும் ஞானியாகவும் திகழ்ந்த ஸ்ரீ அரவிந்தர், ‘பூரண யோகம்’ என்ற உத்தியைப் பரப்பி அனைவரையும் ஆன்மிகப் பாதையில் செல்ல வைத்தார்.

ஸ்ரீ அரவிந்தர் பதிப்பகம்

ஸ்ரீ அரவிந்தரின் சிந்தனைகள்

தெய்வீக வாழ்வுக்கு முன்னேறுதலே மனிதன் செய்ய வேண்டிய பயணம். இல்லையென்றால் சேற்றிலும் நீரிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் பூச்சிகளுள் அவனும் ஒருவனாகவே இருப்பான். அகங்காரத்தில் இருந்தும், வாழ்வின் ஆசையிலிருந்தும், தந்திர மனத்திலிருந்தும், அதன் பொருந்தாத வாதத்திலிருந்தும் வருவனவற்றிலிருந்தும் விலக வேண்டும். மிக ஆழ்ந்துள்ள அந்தராத்மாவின் குரலைக் கேட்க, குருவின் அறிவுரைகள், இறைவனின் கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும்.

அச்சமற்ற இதயம், நம்பிக்கை நிரம்பிய ஜீவன், சித்தி பெறத் துடிக்கும் அந்தராத்மா மட்டுமே கடைசி சோதனை, இறுதி புடம் வரை நிற்கும். இறைவன் எதை விரும்புகிறானோ அதையே நாமும் முழு உள்ளத்துடன் விரும்புவதுதான் வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருப்பதற்கான ரகசியம்.

எப்பொழுதும் நாம் பேசும் சொற்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கோபத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளைக் கொட்டிவிடக் கூடாது. அது மோசமான அதிர்வுகளை எழுப்பும். பேசத் துடிக்கும் தூண்டுதலுக்கு அதிக இடம் கொடுத்துவிடக் கூடாது. தர்க்கம், எதிர்வாதம், சூடான சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். பேச்சில் தவம் வேண்டும். மனதில் அமைதி பிறக்க பூரண யோகம் அவசியம் என்பதை அன்பர்களுக்கு உணர்த்தினார் ஸ்ரீ அரவிந்தர்.

ஒருகட்டத்தில் ஆசிரமப் பொறுப்புகளை ஸ்ரீ அன்னையிடம் அளித்துவிட்டு, பூரண யோக வகுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் அரவிந்தர்.

ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களுக்கு மலர் அஞ்சலி

1950-ம் ஆண்டு, தான் வெகு நாட்களாக எழுதி வந்த மகா காவியமான ‘சாவித்திரி’யை நிறைவுசெய்தார் ஸ்ரீ அரவிந்தர். தனக்கு அடுத்தபடியாக ஆசிரமத்தை நிர்வகிக்கும் ஸ்ரீ அன்னையைக் கண்டு பெருமிதம் கொண்டார். எண்ணற்ற அன்பர்களுக்கு, ஒருங்கிணைந்த யோகா பயிற்சியை அளித்த ஸ்ரீ அரவிந்தர், 1950 டிசம்பர் 5-ம் தேதி, தனது வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தார். ஸ்ரீ அரவிந்தரின் மறைவுக்குப் பிறகு அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, ஆசிரமத்தை நிர்வகித்து வந்தார் ஸ்ரீ அன்னை.

மனித ஒற்றுமையை வளர்த்தல் அவசியம். போர் இல்லாத பொதுமை காண்பது அவசியம். ஆன்மிக நெறியில் அறிவியல் வளர்த்து, உலகுக்கு உழைக்க வேண்டும். அதுவே பரிபூரண யோகமாகக் கொள்ளப்படும் என்று ஸ்ரீ அரவிந்தரும், ஸ்ரீ அன்னையும் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் நூல் வெளியீட்டுப் பிரிவு, ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் கருத்துகளை, 15 மொழிகளில் நூல்களாக வெளியிட்டுள்ளது.

x