திருப்பள்ளி எழுச்சி – பாடல் விளக்கம்


மாணிக்கவாசகர் பாடிய 10 திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடுவதன் மூலம், மக்கள் அகவிழிப்பு பெற்று அருள் ஆற்றலை அடைந்து கடவுள் பண்பைப் பெறுகின்றனர். அனைத்து உயிர்களுக்கும் தொண்டு செய்து அவனை அனுபவிப்பதே இப்பாடல்களைப் பாடுவதன் நோக்கமாகும்.

அதிகாலை வேளை.. பொழுது விடிந்துவிட்டது. இங்கு காலை நேரக் காட்சிகள் விளக்கப்படுகின்றன. சேற்றில் மலரும் செந்தாமரை மலர்கள் சூழ்ந்த வயல்கள் உள்ள இவ்வூரில், கோயில் கொண்டவனே., இங்கு உழவுத் தொழில் சிறந்து விளங்குவது விளக்கப்படுகிறது.

வாழ்வுக்கு முதலாக உள்ள பதி – இறைவன் என்பது புலனாகிறது. கதிரவன் உதித்ததால் இருள் மறைகிறது. தாமரை மலர்கிறது. அவற்றை வண்டுகள் மொய்க்கின்றன. இருள் மறைவதுபோல் இறைவன், அடியார்களின் அக இருளை நீக்குகிறான்.

குயில்களும் கோழிகளும் கூவுகின்றன, பறவைகள் குரல் எழுப்புகின்றன. சங்கு ஒலி முழங்குகிறது, நட்சத்திரங்களின் ஒளி மங்குகிறது. இதன் மூலம் உள்ளத்தில் மறைந்திருக்கும் இறைவனது திருவருள் வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

மாணிக்கவாசகர்

வீணை, யாழ் போன்ற இசைக் கருவிகள் இசைக்கப்படுகின்றன. வேதங்கள் ஓதப்படுகின்றன. தொடுத்த மாலைகளுடன் பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் தொழுதவண்ணமும் சிலர் அழுதவண்ணமும் உள்ளனர். சிலரது தொழுத கைகள் தன் வசம் இழந்து துவண்டு விட்டன. இதன் மூலம் அதிகாலை வேளையில் சிவ வழிபாடு சிறப்பு என்று உணர்த்தப்படுகிறது.

ஐம்பூதங்களிலும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன், போக்கும் வரவும் இல்லாதவன் என்று நீ புகழப்படுகிறாய். இதன் மூலம் இறைவன் காட்சிக்கு அரியவன் என்பது புலனாகிறது.

அதிகாலை வேளையில், முற்றும் துறந்த ஞானியர்களும் சிவ வழிபாடு செய்கின்றனர். பழச்சுவை போன்றவனே, அமுதமானவனே, அறிவதற்கு அரியது.. தேன் சொரியும் மலர்ச்சோலைகள் சூழ்ந்த உத்தரகோசமங்கையில் கோயில் கொண்டவனே.. நீ தேவர்கள் காட்சிக்கு அரியவன்… அடியவர் காட்சிக்கு எளியவன்.

ஆதி, நடு, அந்தம் எல்லாம் நீதான்.. அடியவர் குடிசையிலும் எழுந்தருள்பவனே… உனது கருணையே கருணை…

விண்ணில் வாழும் தேவர்களாலும் அணுகமுடியாத பரம்பொருள் அடியார்களின் உள்ளங்களில் நிலைத்திருக்கிறான். கண்ணில் தோன்றி இன்பம் தருவதோடு எண்ணத்திலும் விளங்கி நன்மை செய்பவனே..

அமுதனே! இந்த பூமி நாம் உய்வதற்காக சிவபெருமான் நமக்கு அருளிச் செய்தது. அங்கு சென்று பிறக்காமல் நாம் வீணாக நாட்களைக் கழிக்கிறோமே என்று திருமாலும் பிரம்மனும் விருப்பம் கொள்கின்றனர். திருப்பெருந்துறையில் கோயில் கொண்டிருப்பவனே! பரந்து விரிந்த உன் பெருங்கருணையுடன் இந்த மண்ணில் வந்து எழுந்தருளி எங்களை ஆட்கொண்டவனே! திருப்பள்ளி எழுந்தருள்வாய்!

மறைப்பு சக்தியே அருளவரும்போது அருட் சக்தியாக மாறுகின்றது என்பது ‘அலர்ந்த மெய்க்கருணை” என்பதன் மூலம் அறியப்படுகிறது. இது ஐந்தெழுத்தின் வகரத்தால் குறிப்பிடப்படும். இறைவன் ஆட்கொள்ளும் இடமே இவ்வுலகம் என்றும் அறிகிறோம்.

மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்து பாடல்களின் மூலம் இயற்கையின் அழகு, இறைவனின் இயல்பு, திரோதான சக்தியின் இயல்பு, இறைவன் குடிகொண்டிருக்கும் இடம், அம்மையின் அருள்திறம், அடியார் இலக்கணம், திருப்பெருந்துறையின் சிறப்பு, அடியார்களை ஆற்றுப்படுத்துதல், மெய்யியல் கருத்துகள், யோகத் தத்துவம், சைவ சித்தாந்தம், உவமைகள் என்று பல செய்திகளை நாம் அறிகிறோம்.

இறைவன் நம்முள்ளே ஒளி வடிவமாய் இருந்து, நம்மை இயக்கி வருகிறான் என்ற உண்மையை நாம் உணராமல் செயல்பட்டு வருகிறோம். நம்முள்ளே அடைபட்டு இருக்கும் இறைவனை எழுப்பி அவன் அருளைப் பெறுவதற்காகவே மாணிக்கவாசகர் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பாடல்கள் மூலம் அவன் அருளைப் பெற்று அவனுடனேயே கலந்து விடுகிறார்.

ஓம் நமசிவாய…

x