ஒவ்வொரு முறையும் ஏதாவது உறவினர் திருமணம், கோயில் குடமுழுக்கு என்று ஒரு விசேஷத்துக்காக வெளியூர் போகும்போது, அருகில் ஏதேனும் கோயில் உள்ளதா என்று பார்ப்பது அல்லது லிஸ்ட் போடுவது ஒவ்வொருவரும் கடைபிடிப்பதுதான்.
லிஸ்ட் போடுவது நம்ம வேலை. அதை execute செய்வது அவன் வேலை அல்லவா.. அப்படி சென்று வந்த ஒரு ஸ்தலம் சிங்கவரம் ரங்கநாதர் கோயில். செஞ்சியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. சிம்மாசலம், விஷ்ணு செஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சயன பெருமாளை வணங்கினால் எமபயம் கிடையாது என்று கூறப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலம் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.
ரங்கநாயகியுடன் அருள்பாலிக்கும் ரங்கநாதரைக் காண கண் கோடி வேண்டும்.
தானே இறைவன் என்றும் அனைவரும் தன்னையே இறைவனாக நினைத்து வணங்க வேண்டும் என்றும் நாட்டு மக்களுக்கு உத்தரவு பிறப்பித்தான் இரணிய கசிபு. அனைவரும் அவன் உத்தரவுக்கு பணிந்தனர், ஒருவனைத் தவிர. அவன்தான் இரணிய கசிபுவின் மகன் பிரகலாதன். அவன் எண்ணம், செயல் அனைத்திலும் நாராயணன் அல்லவா இருக்கிறான்.
இச்செயலால் கோபம் அடைந்த தந்தை, மகன் என்றும் பாராமல் அவனை மாய்க்கத் துணிந்தான்.
அனைத்து சோதனைகளையும் தவிடுபொடி ஆக்கினான் பிரகலாதன். ”தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்று தன் தந்தையிடம் கூற, ஒவ்வொரு தூணாக உடைக்க எண்ணினான் இரணிய கசிபு. குறிப்பிட்ட ஒரு தூணைக் காட்டி இந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கிறானா என்று மகனிடம் கேட்க, தூணைப் பிளந்து வெளிப்பட்ட சிங்கமுகன் அவனை தன் மடியில் கிடத்தி தன் கூரிய நகங்களால் பிளந்து மாய்த்தார். பிரகலாதனை தன் அருகிலேயே வைத்துக் கொண்டார் நரசிம்மப் பெருமாள்.
இதன் மூலம் அசுர குலத்தில் பிறந்தாலும் நற்குணத்துடன் வாழலாம் என்பது புலனாகிறது.
பிரகலாதனின் விருப்பத்தின்படி பெருமாள் சயன கோலத்தில் ரங்கநாதராக அருள்பாலித்ததாக கூறப்படுகிறது.
மலைஅடிவாரத்தில் உயர்ந்த ஊஞ்சல் மண்டபம் அமைந்துள்ளது. கோயிலுக்கு செல்லத் தொடங்கும் இடத்தில் ரங்கநாதரின் பாதம், அனுமன் திருவுருவம் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன. 160 படிகளை ஏறிச் செல்ல வேண்டும்.
செஞ்சியை ஆட்சி புரிந்த ராஜா தேசிங்குவின் குல தெய்வம் ரங்கநாதர். ரங்கநாதருடன் நேரில் பேசும் அளவுக்கு தீவிர பக்தராக ராஜா தேசிங்கு இருந்தார். ஒரு முறை ராஜா போருக்கு கிளம்ப, அதை ரங்கநாதர் தடுத்தார். ரங்கநாதரின் பேச்சை மீறி போருக்குச் சென்றதால், ராஜாவின் மீது கோபமடைந்து, தன் முகத்தை தெற்கு புறமாக திருப்பிக் கொண்டதாக நம்பப்படுகிறது. தென் திசை தெய்வமான எமனை எச்சரிக்கும் விதமாக அப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது.
2,000 ஆண்டு பழமைவாய்ந்த இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது. மகேந்திரனின் தந்தை சிம்மவிஷ்ணு தன் அரண்மனை நந்தவனத்தில் உலாவரும்போது, வராகம் ஒன்று அங்கு பூத்த மலர்களை உண்பதைக் காண்கிறார். வராகத்தை விரட்டிச் செல்கிறார் சிம்மவிஷ்ணு. நீண்ட தூரம் சென்றதும் அந்த வராகம் மறைந்து விட்டது. இப்படி விரட்டிக் கொண்டு வந்ததால், ரங்கநாதரை சேவிக்கும் பேறு கிட்டியது மன்னனுக்கு. இதன் காரணமாக இந்த இடத்துக்கு சிம்மாசலம் என்று பெயரிட்டான்.
அரங்கனை
ஆராதித்து
இதயத்தில் நிறுத்தி
ஈண்டு
உவகை அடைவோம்.
ஊக்கத்தை
எப்பொழுதும்
ஏற்றி
ஐயம் தீர்த்து
ஒளி பெற்று
ஓணத்தில் கொண்டாடி
ஔவியம் களைவோம்.
அஃதே நமக்குத் துணை…