‘திராவிட சிசு’ தொடங்கிய ஆதீனம் சனாதனப் பாதைக்குத் திரும்புகிறதா?


‘திராவிட சிசு' என்று அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்ட புகழ்பெற்ற மடம் மதுரை ஆதீன மடம். சைவமும், ‘தமிழும் தழைத்தோங்குக' என்பதே மதுரை ஆதீன மடத்தின் இலச்சினையில் (லோகோ) இடம்பெற்றிருக்கும் முழக்கம். இந்தக் கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டு விளங்கியவர்கள் மதுரை ஆதீன கர்த்தர்கள். சமீபத்தில் முக்தியடைந்த 292-வது ஆதீனமான அருணகிரிநாத தேசிக பரமாச்சாரிய சுவாமிகளும்கூட, இதில் உறுதியாக இருந்தார். கூடவே, குன்றக்குடி அடிகளார், திருவாடுதுறை ஆதீனங்களைப் போலவே மதுரை ஆதீனமான அவரும் திராவிட இயக்கச் சார்பு நிலை எடுத்தார்.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத் திறப்பு விழா 1987 செப்டம்பர் 16-ல் சென்னையில் நடந்தபோது, கட்டிடம் கட்ட அதிக நிதி வழங்கிய மாவட்டச் செயலாளர்களுக்குத் தன் கையாலேயே கணையாழி அணிவிதார் திமுக தலைவர் கருணாநிதி. விழாவில் பேசிய அவர், “எங்களுக்கு மாத்திரம் உரிய கட்டிடமல்ல இது. எதிரே வீற்றிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் தந்திருக்கிற ஒரு ரூபாய், 2 ரூபாய்கள்தான் இந்தக் கட்டிடத்தினுடைய கற்களாக, வண்ணமாக அமைந்திருக்கிறது. இது உங்கள் அத்தனை பேருக்கும் சொந்தமான கட்டிடம். நீங்கள் அத்தனை பேரும் இந்தப் பொத்தானை அழுத்தி கட்டிடத்தைத் திறந்துவைக்க முடியாது என்பதால், உங்களுடைய கால்களைத் தொட்டு வணங்கி உங்கள் சார்பாக நான் திறந்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னார்.

அப்போது உணர்ச்சி வசப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், தன்னுடைய 10 விரல்களிலும் அணிந்திருந்த கணையாழிகளைக் கழற்றி கட்டிட நிதியாக கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள், அத்தனை மோதிரங்களையும் ஆதீனத்திடமே ஒப்படைக்குமாறு மதுரைக்கு கொடுத்து அனுப்பிவிட்டார் கருணாநிதி என்பது வேறு விவரம். ஆனால், அடிப்படையில் அருணகிரிநாதர் எந்த அளவுக்குத் திராவிட இயக்கங்களின் மீது பற்று கொண்டிருந்தார் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

பிற்காலத்தில் நித்யானந்தா விவகாரத்தில் சிக்கி, வம்பு வழக்குகள் வந்தபோதும் கூட அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ள அதிமுகவை நாடினாரே ஒழிய, பாஜகவை அல்ல. ஒரு கட்டத்தில், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று சொல்லி கையில் இரட்டை இலை சின்னத்தை ஏந்தியபடி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றினார் மதுரை ஆதீனம். ஒரு மடாதிபதி இவ்வளவு வெளிப்படையாக அரசியல் நிலைப்பாடு எடுப்பதா என்று விமர்சனங்கள் எழுந்தபோதும், அதில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. ஜெயலலிதாவை "புரட்சித் தலைவி அம்மா" என்றே கூட்டங்கள் தோறும் முழங்கினார்.

படையெடுத்து வந்த திப்புசுல்தான், மாலிக்காபூர், மதப் பரப்புரைக்காக வந்த ராபர்ட் டி நோபிலி, சீகன் பால்கு, வீரமாமுனிவர் போன்றோரும் பரிசளித்து மகிழ்ந்த மடம் மதுரை ஆதீன மடம். அந்த வரலாற்றின் அடியொற்றி 292-வது ஆதீனம் அருணகிரிநாதரும், மதநல்லிணக்கத்துடன் பணியாற்றினார். இஸ்லாம் மார்க்க மேடைகளிலும், கிறிஸ்தவ மேடைகளிலும் ஏறி சைவ சித்தாந்தமும் திருக்குரானும், திருஞான சம்பந்தரும் நபிகள் நாயகமும், ஞான சம்பந்தரும் ஏசுநாதரும் போன்ற தலைப்புகளில் அருளுரை நிகழ்த்தியவர் அவர். மீனாட்சிபுரம் மதமாற்றச் சம்பவத்தின்போது, பட்டியலின மக்களுடன் ஒன்றாக அமர்ந்து சமபந்தி விருந்து நடத்தி, இந்து மதத்தின் பெயரால் நடைபெறுகிற சாதி ஆதிக்கத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

பல்லக்கில் பவனி வந்த புதிய ஆதீனம்

அவரது மறைவைத்தொடர்ந்து, 293-வது மதுரை ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த பரமாச்சாரிய தேசிக சுவாமிகள் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அன்று மாலையிலேயே அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி பல்லக்கில் பவனி வந்தார். அருணகிரிநாதர் இதுபோன்ற மனிதரே மனிதரைச் சுமக்கும் சடங்குகளை வெறுத்தவர் என்பதால், புதிய ஆதீனம் இவ்வாறு பவனி வந்தது மதுரை பக்தர்களை புருவம் உயர்த்தச் செய்தது.

"முந்தைய ஆதீனத்தின் மதநல்லிணக்க இயல்புகளைச் சுட்டிக்காட்டி அந்த மரபை நீங்களும் தொடர்வீர்களா?" என்று ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன் நான். அரசே ஆலயத்தைவிட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொண்டவன் நான். சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன். நான் குர்ஆனையும், பைபிளையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்து சமயத்தை இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஏற்றுக் கொள்வார்களா? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்" என்று கூறினார்.

சனாதனப் பாதையில்...

இதனிடையே நேற்று (செப்டம்பர் 5), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் நடந்த வ.உ.சி. பிறந்தநாள் உள்ளிட்ட ஐம்பெரும் விழாவில் பங்கேற்றுப் பேசிய ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், "முன்பு வெள்ளாளர் சமுதாயத்தின் பெருமைமிகு அடையாளமாக கிராம கர்ணம் பதவி இருந்தது. (எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில்) அதை ஒழித்துவிட்டார்கள். சமுதாயத்தினர் அனைவரும் சேர்ந்து போராடி அந்த உரிமையைத் திரும்பப் பெற வேண்டும்" என்று பேசினார்.

பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், மோடி ஆட்சியைப் பாராட்டியதுடன், தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை எதிர்ப்பதாகவும், இந்து மதத்தின் பாரம்பரிய வழக்கங்களே தொடர வேண்டும் என்றும் கூறினார். அதேபோல தமிழக அரசின் விநாயகர் சிலை ஊர்வலத்துக்குத் தடையை கண்டித்த அவர், விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று பேசினார்.

முந்தைய மதுரை ஆதீனத்தின் பேச்சு, செயலுக்கு நேர்மாறாக புதிய ஆதீனத்தின் பேச்சு இருப்பதைப் பகிரங்கமாகவே உணர முடிகிறது. "திராவிட சிசு என்று அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தரால் தொடங்கப்பட்ட மதுரை ஆதீனம், இப்போது சனாதனப் பாதையில் நடைபோடுகிறது" என்று சொல்கிறார்கள் புதிய ஆதீனத்தின் போக்கு பிடிக்காதவர்கள். அதேநேரத்தில், நாடு முழுவதும் எழுந்துள்ள இந்து மத எழுச்சி, ஆதீன கர்த்தர்களையும் கவர்ந்துள்ளது. அதன் வெளிப்பாடே அவரது இந்தப் பேச்சு. இது வரவேற்புக்குரியது" என்கிறார்கள் சில பக்தர்கள்.

இது எங்கு போய் முட்டுகிறது என்று பார்க்கலாம்.

x