தமிழ் தாத்தா உவேசா தனது சிறுவயதில் படித்தது வளர்ந்தது எல்லாம் அரியலூரில். அங்குள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.
ஆமாம். அரியலூர் கோதண்ட ராமர் கோயில்தான். இங்கு திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரு சேர மண்டபத் தூண்களில் சிற்பங்களாக காண முடியும். அரி இல் ஊர் என்பதன் மூலம் அரியாகிய திருமாலின் இருப்பிடம் என்பதை அறிகிறோம். (மச்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி)
முன்பு ஒரு சமயம் பல்லவ மன்னன் ஒருவன், அனைத்து போரிலும் வெற்றி கண்டதால், இறுமாப்புடன் இருந்தான். அப்போது, ஒருவர், மன்னனிடம், “போரில் நீங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், அதனால் ஏற்பட்ட பலரது துயரங்களை நீ அறிவாயா..மேலும் இதனால் உனக்கு எவ்வளவு களங்கம் தெரியுமா” என்று கூறி தனது பாவங்களைப் போக்க ராமபிரானை சேவிக்கும்படி ஆலோசனை வழங்கினார். மன்னனும் தன் தவறை உணர்ந்து ராமபிரானுக்கு கோயில் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அம்பரீஷ மன்னனுக்கு திருமால் அருள்பாலித்த தலம் இதுவாகும். அம்பரீஷி மன்னன் திருமாலின் தசாவதாரங்களை காண விரும்பினான், திருமாலும் அதற்கு அருளியதால், இன்றும் அவன் பறவை வடிவில் இக்கோயில் கோபுரத்தில் அமர்ந்து இந்த தசாவதார சிற்பங்களைக் கண்டு மகிழ்கிறான்.
அம்பரீஷி முனிவர் துர்வாச முனிவரின் சாபத்துக்கு ஆளானார். திருமாலின் தசாவதாரங்களையும் ஒன்றாகக் கண்டால் சாபத்தில் இருந்து விடுபடலாம் என்று சாப விமோசனம் அளிக்கப்படுகிறது. இதனால் இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் செய்கிறார் அம்பரீஷி முனிவர். இதன் காரணமாக தசாவதாரங்களையும் ஒரு சேர காண அருள்புரிகிறார் திருமால். அதனால் சாபவிமோசனமும் பெருகிறார்.
சிங்கமுகத் தூண்கள், இரு குதிரைகள் தேர் இழுப்பது போன்ற அமைப்பில் இருக்கும் கருவறை மண்டபம் சிற்பக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
பூமிக்கடியில் புதையுண்ட கோயிலை பெருமாள் தூக்கி நிறுத்தினார் என்று கூறப்படுகிறது. விக்கிரமங்கலம் என்ற ஊரில் ஒரே பீடத்தில் அமைந்த கோதண்டராமர், சீதாபிராட்டி, லட்சுமணன், அனுமன் சிலைகள் கண்டெடுக்கப்பத்தாகவும் கூறப்படுகிறது.
கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வேங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். அலமேலு மங்கை தாயார் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி விழாவில் நாச்சியார் திருக்கோலத்துக்குப் பிறகு கோதண்டராமர் மோகினி அலங்காரத்துடன் விதியுலா செல்கிறார்.
சென்னை – திருச்சியை இணைக்கும் ஒரு முக்கிய நகரம் அரியலூர். சென்னையில் இருந்து 300 கிமீ, தஞ்சையில் இருந்து 42 கிமீ, ஜெயங்கொண்டத்தில் இருந்து 35 கிமீ தொலைவிலும் உள்ளது.