மானம்பாடி கோயில் திருப்பணியைக் கவனிப்பது யார்?


மானம்பாடி கோயில்

தஞ்சை மாவட்டம், மானம்பாடி கிராமத்தில் மாவீரன் ராஜேந்திர சோழன் கட்டிய அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. பழமையான இந்தக் கோயிலின் திருப்பணிகளை யார் செய்வது என்று இந்து சமய அறநிலையத் துறையும் தொல்லியல் துறையும் போட்டிபோட்டுக் கொண்டு, பொதுமக்களிடையே பொல்லாப்பை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போட்டியால் கோயில் திருப்பணிகள் பாதியில் நிற்கின்றன. பணிகளை தொடங்கி நடத்தி விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், பந்தநல்லூர், அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயிலின் இணைக் கோயிலாக இந்த மானம்பாடி நாகநாதசுவாமி திருக்கோயில் நிர்வகிக்கப் படுகிறது. ராஜேந்திர சோழன் காலத்து கட்டுமானமாக கருதப்படுகிற, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான மானம்பாடி திருக்கோயில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு மூலமாக, சித்திரை மாதத்தில் தமிழகத்தில் ‘தமிழ்க்கூத்து’ என்ற ஒரு கூத்து நடந்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இந்தக் கூத்து நடத்துவதற்காக, திருமுதுகுன்றன் என்பவன் நிலம் தானமாக அளித்தான் என்ற செய்தியை இங்குள்ள கல்வெட்டு தாங்கி நிற்கிறது.

கோயில் சுவற்றில், ஒருவர் தனது மனைவிமார்களுடன் வணங்கியபடி நிற்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. அது ராஜேந்திரசோழன் தான் என்பது வரலாற்றாய்வாளர்கள் சிலரின் கூற்று.

கோயிலில் இருக்கும் கல்வெட்டு

இத்தகையை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்தவேண்டும் என்று பக்தர்கள் பல காலமாக கேட்டு வந்ததை அடுத்து, திருப்பணி வேலைகளும் தொடங்கின. ஆனால், என்ன காரணத்தாலோ அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது யார் அந்த திருப்பணிகளைச் செய்வது என்பதில் அறநிலையத் துறைக்கும், தொல்லியல் துறைக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவை ஒன்றையொன்று தமது பொறுப்பை தட்டிக் கழிக்கின்றன.

கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில், அறநிலையத் துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு, தொல்லியல் துறைதான் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, 30.07.2021 அன்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக தொல்லியல் துறையிடம் அதே கேள்வியை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டதில், இந்து சமய அறநிலையத் துறைதான் திருப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, 02.09.2021 அன்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர சோழனின் புடைப்புச் சிற்பம்

தெய்வீகத் தன்மையும் பழமையும் வாய்ந்த அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் திருப்பணியை மேற்கொள்வதில், மாநில அரசின் இருதுறைகளும் இப்படி தட்டிக் கழிப்பதால், இந்த திருக்கோயில் திருப்பணி கேள்விக்குறியாகி நிற்கிறது. இனியாவது, 2 துறைகளைச் சார்ந்த அதிகாரிகளும் நேரில் அமர்ந்து பேசி உறுதியான முடிவெடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கோயிலின் புனிதமும் பாதுகாக்கப்பட்ட சின்னத்தின் முக்கியத்துவமும் தெரிந்த இவ்விரு துறைகளின் அலட்சியப்போக்கு இனியும் தொடருமானால், ராஜேந்திர சோழனின் அரிய வரலாற்று ஆவணமாக இருக்கக்கூடிய இக்கோயில் முற்றிலுமாக சிதிலமடைந்து போய்விடும் அபாயம் இருக்கிறது.

பாதியில் நிற்கும் திருப்பணிகள்

எனவே, இதுதொடர்பாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே இக்கோயில் திருப்பணிக்கு தேவையான போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, விரைவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி குடமுழுக்கு நடத்திட வேண்டும் என்று பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

x