சங்கர மடத்தின் ஜகத்குரு சேவா மணி விருது


விருது வழங்கிய போது...

நாற்பதுக்கும் மேற்பட்ட கோயில் திருப்பணிகளை செய்துமுடித்த எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் செட்டியாருக்கு, காஞ்சி சங்கர மடம் ‘ஜகத்குரு சேவா மணி’ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

காரைக்குடியைச் சேர்ந்த எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் செட்டியார், தனது சொந்த செலவிலும் ஆன்மிக அன்பர்களின் உதவி கொண்டும் செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள பழமையான கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு விழாக்களை நடத்தி வருகிறார். அப்படி இதுவரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு திருப்பணிகளைச் செய்திருப்பதுடன். பாழ்பட்டுக் கிடக்கும் திருக்கோயில் தெப்பக்குளங்களையும், ஊருணிகளையும் தூர்வாரி சீர்செய்து அவற்றின் கரைகளில் பூங்காக்களை அமைத்து வருகிறார். இந்தப் பணிகளுக்காக ‘திருப்பணி ரத்னா’ விருதையும் பெற்றிருக்கிறார் நாராயணன் செட்டியார்.

விருது வழங்கிய போது...

சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடி தான், காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளின் அனுஷ்டானம் அமைந்துள்ள ஊர். அங்குள்ள பிரளய ஊருணியில் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுக்கு தனது சொந்தப் பொறுப்பில் சிலை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தியவர் நாராயணன் செட்டியார். அவரது இந்தப் பணிகளை எல்லாம் பாராட்டி கவுரவிக்கும் முகத்தான் காஞ்சி சங்கரமடத்தின் சார்பில் அவருக்கு ‘ஜகத்குரு சேவா மணி’ விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விஜயேந்திரர்

ஆகஸ்ட் 29-ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற விழாவில், காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி வழியாக நாராயணன் செட்டியாருக்கு இந்த விருதை வழங்கி அருளாசி வழங்கினார். இந்த விழாவில், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் தேவஸ்தான பொருளாளர் ஜி.கோபால், உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் மெ.சொக்கலிங்கம், செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கரு.முத்து.தி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு எஸ்.எல்.என்.எஸ்.நாராயணன் செட்டியாரை வாழ்த்தினார்கள்.

x