சட்டைநாதர் ஆலய திருப்பணி தொடக்கம்


பூஜைகளை தொடங்கி வைக்கும் ஆதீனகர்த்தர்கள்

சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் முப்பதாண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் தொடங்கியிருக்கின்றன. தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான அந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 27 -ம் தேதி நடைபெற்ற திருப்பணி துவக்கவிழா பூஜைகளில் தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சட்டைநாதர் ஆலயம் ஆலயம்

மூன்று தள ங்களாக அமைந்துள்ள இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் பிரம்மபுரீஸ்வரரும், இரண்டாவது தளத்தில் மலைமீது சிவன்-பார்வதி கயிலாயக் காட்சியை உணர்த்தும் தோனியப்பர் உமாமகேஸ்வரர் கோலத்திலும், மூன்றாம் தளத்தில் சட்டைநாதர் எனவும் மூன்று விதமாக சிவன் அருள்பாலிக்கிறார்.

8 பைரவர்களுக்கும் தனி சன்னதியாக உள்ள இந்த ஆலயம், பைரவ க்ஷேத்திரமாகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் ஊட்டிய இடம் இக்கோயிலின் குளக்கரையில் தான் உள்ளது. இது தேவாரப்பாடல் பெற்ற தலம் என்பது கூடுதல் சிறப்பு.

பூஜைகளை தொடங்கிவைக்கும் தருமபுரம் ஆதீனம்

இந்த ஆலயத்தில் இதற்கு முன் 1991- ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் தருமபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

திருப்பணி தொடக்கத்தை முன்னிட்டு ஒருநாள் முன்னதாக 26 -ம் தேதி இரண்டு கால சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 27-ம் தேதி காலை சிறப்பு வழிபாடு பூர்ணாஹுதி மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடிக்கல் நாட்டினார்.

தருமபுரம் மற்றும் மதுரை ஆதீனகர்த்தர்கள்

இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த திருப்பணியானது சுமார் 10 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ளது.

x